முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக 2000-ம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று வெளியானபோது, தர்மபுரியில் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் சென்ற பேருந்துக்கு அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிலர் தீவைத்தனர். அதில், மூன்று மாணவிகள் உடல் கருகி உயிரிழந்தனர். அந்த வழக்கில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த மூவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களை முன்விடுதலை செய்ய, கடந்த ஆண்டு தமிழக அரசு முடிவுசெய்தது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அது தொடர்பான கோப்பு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு தமிழக அரசால் அனுப்பப்பட்டது. அதை அவர் திருப்பியனுப்பிவிட்டார். பின்னர், ‘அந்தக் கொலைகளில் சதியோ உள்நோக்கமோ இல்லையென்பதால், அவர்களை விடுதலை செய்யலாம்’ என்று தமிழக அரசு ஆளுநருக்கு மீண்டும் கோப்பை அனுப்பியது. இந்த முறை ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். அதையடுத்து, குற்றவாளிகள் மூவரும் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே விடுதலை செய்யப்பட்டனர்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅதேபோல, மேலவளவு கொலை வழக்கு... மதுரை மாவட்டம் மேலூர் அருகே, மேலவளவு ஊராட்சிமன்றத் தலைவராக இருந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் உள்ளிட்ட ஏழு பேர் 1997-ம் ஆண்டு, வேறொரு சமூகத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களில் சிலர், 2008-ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளில் நன்னடத்தை அடிப்படையில் முன்விடுதலைசெய்யப்பட்டனர். மீதி 13 பேரை நன்னடத்தை அடிப்படையில் கடந்த மாதம் தமிழக அரசு விடுதலை செய்தது. அதற்குப் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்றமும் தமிழக அரசுக்கு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த நிலையில், தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே தங்களையும் விடுதலைசெய்ய வேண்டும் என்று 100-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு, தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே விடுதலைசெய்யலாம் என்று 1,750 குற்றவாளிகளின் பெயர்ப் பட்டியலைக் கடந்த ஆண்டு, தமிழக அரசு தயாரித்து வைத்திருந்தது. 2018-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி, 10 ஆண்டுகள் வரை சிறையில் இருந்த 1,627 கைதிகளை விடுதலைசெய்வதற்கு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், கடந்த ஆண்டு ஜூன் 6-ம் தேதி ஒப்புதல் அளித்தார். அதே காலகட்டத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்த 60 வயதைக் கடந்த, உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்ட கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தற்போது, 100-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் சென்னை உயர் நீதிமன்றத்திலும் 10 சிறைவாசிகள் உச்ச நீதிமன்றத்திலும் முன்விடுதலை கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். பெண்களைக் கடத்துதல், குழந்தைகள் மற்றும் பெண்களைக் கொலை செய்தல் ஆகிய வழக்குகளில் தண்டனைபெற்ற 80 பேரின் முன்விடுதலைக்கான கோரிக்கை மனுக்களை அரசு நிராகரித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை, கொள்ளை, திருட்டு, மோசடி, பயங்கரவாதம், அரசுக்கு எதிரான குற்றங்கள், சட்டக் காவலிலிருந்து தப்பிக்க முயற்சி செய்தல் அல்லது பரோல் விடுமுறையை மீறுதல், பெண்களுக்கு எதிரான கொடூரக் குற்றங்களைச் செய்தல், பொருளாதாரக் குற்றங்கள், சமூக நல்லிணக்கத்தை மீறுதல், கடத்தல், ஊழல் மற்றும் ஆள் கடத்தலில் ஈடுபடுதல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட அனைவரும் முன்விடுதலை பெறத் தகுதியற்றவர்கள் என்று அரசின் வழிகாட்டல் நெறிமுறைகளில் உள்ளது. அப்படிப் பார்த்தால், மேலவளவு கொலை வழக்கில் தண்டனைபெற்ற குற்றவாளிகளும், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளும் முன்விடுதலை பெறத் தகுதியற்றவர்களே!
ஆனால், அவர்களை தமிழக அரசு விடுதலை செய்திருக்கிறது. இந்த நிலையில்தான், அனைத்துக் கைதிகளுக்கும் ஒரே மாதிரியான அளவுகோளை அரசு பயன்படுத்தவில்லை என்றும் இதில் அரசியல் உள்நோக்கத்துடன் அரசு நடந்துகொண்டுள்ளது என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அரசியல் ஆதாயங்களுக்காக சிலரை அரசு விடுதலை செய்துள்ளது என்றும், முன்விடுதலைக்குத் தகுதியானவர்கள் என்று சிறை நிர்வாகத்தால் சான்றிளிக்கப்பட்ட பலர், முன்விடுதலை செய்யப்படவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.