Published:Updated:

தஹில் ரமானி விவகாரத்தில் அடுத்து என்ன.. சி.பி.ஐ எடுக்கும் ரெய்டு அஸ்திரம்?

தஹில் ரமானி விவகாரத்தில் அடுத்து என்ன? சிபிஐ வட்டாரங்கள் உறுதிப்பட தெரிவித்துள்ள தகவல்கள்.

விஜய கமலேஷ் தஹில் ரமானி
விஜய கமலேஷ் தஹில் ரமானி

கடந்த சில நாள்களாகச் சர்ச்சையின் பிடியில் இருக்கிறது இந்திய நீதித்துறை. சென்னையின் தலைமை நீதிபதியாக இருந்த விஜய கமலேஷ் தஹில் ரமானி, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அதைத் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும், அவமானமாகவும் கருதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் தஹில் ரமானி. இதையடுத்து அவருக்குச் சென்னை நீதிமன்ற வழக்கறிஞர்கள் பிரிவு உபசார விழா எடுத்து கனத்த இதயத்துடன் அவரை வழி அனுப்பி வைத்தனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அவ்விழாவில் பேசிய தஹில் ரமானி, ``பாரம்பர்யமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த ஓராண்டுக்கு மேலாக தலைமை நீதிபதியாகப் பணியாற்றியது குறித்துப் பெருமை கொள்கிறேன். மும்பையை ஒப்பிடும்போது சீதோஷ்ண நிலை, சாலை வசதி, உள்கட்டமைப்பு வசதி என எல்லாவற்றிலும் சென்னையே சிறந்து விளங்குகிறது. சென்னையிலேயே குடியேற விரும்புவதால், இங்கே நிலம் வாங்கியுள்ளேன்" என்று பேசினார்.

இந்நிலையில், அவர் ராஜினாமாவிற்குப் பிறகு, இந்திய உளவுத் துறை அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஐந்து பக்க அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. அதில், சென்னையில் அவர் முறைகேடாக அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கியதாகச் செய்தி வெளியானதை அடுத்து, அவர் மீது சிபிஐ விசாரணையைத் தொடங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, தஹில் ரமானி மீது சிபிஐ விசாரணையைத் தொடங்கி, எஃப்.ஐ.ஆர் பதிந்து, விரைவில் அவரது வீட்டில் சோதனை (Raid) செய்யப்படும் என்று சிபிஐ வட்டாரங்கள் உறுதிப்படத் தெரிவித்துள்ளன. ஆனால், சோதனை நடவடிக்கைகள் எப்போது மேற்கொள்ளப்படும் என்பது உறுதி செய்யப்படவில்லை.

சிபிஐ
சிபிஐ

இதுகுறித்து பேசிய அதிகாரி ஒருவர், ``பொதுவாக இத்தகைய வழக்குகளில், விசாரணை தொடங்கும் போதே, சம்பந்தப்பட்டவர் வீட்டில், அலுவலகத்தில் எல்லாம் சோதனை செய்வதென்பது சி.பி.ஐ பின்பற்றும் நடைமுறை. குறிப்பாக இம்முறை உச்ச நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் சி.பி.ஐ விசாரணையைத் தொடங்கி இருப்பதால் நிச்சயம் ரெய்டு இருக்கும்" என்று கூறியுள்ளார்.

இவ்வளவு நாள்கள் கடந்தும், ராஜினாமா செய்தும்கூட தஹில் ரமானியைச் சுற்றும் பிரச்னைகளுக்குத் தீர்வோ, அவருக்கு ஓய்வோ கிடைக்கவில்லை. திடீரென அவர் மீது மட்டும் குறிவைத்தாற்போலப் பாயும் குற்றச்சாட்டுகளும், நடவடிக்கைகளும் சந்தேகத்தையே எழுப்புகின்றன.

பலகோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகள் பல அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் செய்யப்பட்டதாகப் பல ஆயிரம் வழக்குகள் சிபிஐ வசம் விசாரணைக்காக நிலுவையில் உள்ளன. சி.பி.ஐ இதில் காட்டும் தீவிரத்தை மற்ற வழக்குகளிலும் நியாயமாகக் காட்டினால் சரி.