கட்டுரைகள்
Published:Updated:

‘‘இது ராணுவ நீதிமன்றத்தில்கூட வழங்கப்படாத தீர்ப்பு!''

ராகுல் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
ராகுல் காந்தி

இந்த வழக்கு தொடரப்பட்டவிதமே தவறானது. டெல்லியில் வசிக்கும் ராகுல் மீது சூரத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். தவிர, ‘மோடி’ என்ற பெயரில் எந்தச் சமூகமும் இல்லை.

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, காங்கிரஸ் தொண்டர்களுக்குக் கடும் கோபத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், அந்தத் தீர்ப்பைக் காரணம் காட்டி ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் அதிரடியாகப் பறிக்கப்பட்டிருப்பது காங்கிரஸ்காரர்களிடம் மட்டுமல்ல, பெரும்பாலான பொதுமக்களுக்கும் அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது நாடு முழுவதும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்காக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார் ராகுல் காந்தி. அந்த வகையில், கர்நாடக மாநிலம், கோலார் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட லலித் மோடி, மோசடி வைர வியாபாரி நிரவ் மோடி குறித்தெல்லாம் விமர்சித்தார். இதையடுத்து, ‘‘ராகுல் காந்தி, ஒரு சாதியையே அவமதித்துவிட்டார். ‘ஏன் எல்லாத் திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப் பெயர் இருக்கிறது?’ என்று பேசியதற்குத் தகுந்த தண்டனை தரப்பட வேண்டும்'' என்று குஜராத் முன்னாள் அமைச்சர் பூர்னேஷ் மோடி, குஜராத் மாநிலத்தின் சூரத் தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

‘‘இது ராணுவ நீதிமன்றத்தில்கூட வழங்கப்படாத தீர்ப்பு!''

நான்கு ஆண்டுகளாக நடந்துவந்த வழக்கில், மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக, சூரத் நீதிமன்றத்தில் ஆஜரானார், ராகுல் காந்தி. அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிபதி, ரூ.15,000 ஜாமீனுக்கு ஒப்புதல் அளித்து, மேல்முறையீட்டுக்கு அனுமதிக்கும் வகையில் தண்டனையை 30 நாள்களுக்கு நிறுத்திவைத்தும் உத்தரவிட்டார்.

தீர்ப்பைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பூர்னேஷ் மோடி, ‘‘ராகுல் காந்தியின் பேச்சு எங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியது. அதற்காக அவர்மீது வழக்கு தொடுத்தேன். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் நாங்கள் திருப்தி அடைகிறோம்” என்று சொன்னார்.

ராகுலின் வழக்கறிஞர் கிரிட் பன்வாலா பேசும்போது, ‘‘இந்த வழக்கு தொடரப்பட்டவிதமே தவறானது. டெல்லியில் வசிக்கும் ராகுல் மீது சூரத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். தவிர, ‘மோடி’ என்ற பெயரில் எந்தச் சமூகமும் இல்லை. இல்லாத ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் என்று ஒருவர் அவதூறு வழக்கு தொடர முடியாது. ஒருவேளை ராகுலின் பேச்சு குறித்து அவதூறு வழக்கு தொடர வேண்டுமென்றால் அதை, பிரதமர் நரேந்திர மோடிதான் செய்ய முடியும். வழக்கு தொடர்ந்த பூர்னேஷ் என்பவரின் குடும்பப் பெயர் மோடி அல்ல பூத்வாலா. பின்னர்தான் அவர் மோடி என மாற்றிக்கொண்டிருக்கிறார். இப்படி அடிப்படையே இல்லாத வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது திட்டமிடப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்வோம்'' என்றார்.

பூர்னேஷ் மோடி - கிரிட் பன்வாலா
பூர்னேஷ் மோடி - கிரிட் பன்வாலா

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக காங்கிரஸ் ஊடகத் தலைவர் கோபண்ணா. ``2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில், எந்தத் தனிப்பட்ட நபரையும் குறிப்பிடாமல், பொதுவாகப் பேசியதற்காக சூரத் நீதிமன்றம் தண்டனை விதித்திருக்கிறது. கோலாரில் நடந்ததை, சூரத் நீதிமன்றம் எப்படி விசாரித்ததென்று தெரியவில்லை. ஆரம்பத்தில் வேறு ஒரு நீதிபதிதான் இந்த வழக்கை விசாரித்தார். புகாரளித்தவர், அப்போது அந்த வழக்கை நடத்தவிடாமல் காலம் தாழ்த்திவந்தார். ஒரு கட்டத்தில் அந்தக் குறிப்பிட்ட நீதிபதி மாறுதலாகி, புதிய நீதிபதி வந்த பிறகு, அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் அதானி விவகாரத்தில் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்த பிறகு, வழக்கை விரைவுபடுத்தியிருக்கிறார்கள். தீர்ப்பு வழங்கப்பட்ட 24 மணி நேரத்தில் அவரின் பதவி பறிக்கப்பட்டிருப்பது ஒரு ஜனநாயக விரோதச் செயல். ஏற்கெனவே, இது போன்ற அடக்குமுறைகளை எதிர்கொண்டு இந்திரா காந்தி வெற்றிகண்டதுபோல ராகுல் காந்தியும் வெல்வார்'’ என்றார்.

அதேசமயம், ‘‘இதில் விதிமீறல் ஏதுமில்லை. எல்லாம் சட்டப்படியே நடந்திருக்கின்றன'' என்று இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்துவருகின்றனர் பா.ஜ.க தலைவர்கள்.