Published:Updated:

ராஜீவ் கொலை வழக்கு: `29 ஆண்டுகள் சிறை... மன உளைச்சல்!’ - நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் மனு

ரவிச்சந்திரன் விடுதலை  தொடர்பாக மனு
ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பாக மனு

7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில், அரசு முடிவெடுத்தது. ஆகவே ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பான வழக்கிலும் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து உத்தரவிட கோரிக்கை வலுத்துவருகிறது!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்துவரும் ரவிச்சந்திரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ``கடந்த 29 வருடங்களாக சிறையிலிருக்கும் எனக்கு மன உளைச்சல் ஏற்படுவதோடு, அது உடல்நலத்தையும் பாதிக்கிறது. ஏழு வருடங்கள், 10 வருடங்கள், 14, 20 வருடங்கள் எனச் சிறையில் இருந்தவர்கள் பலர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட நிலையில், நான் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை.

மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை உயர் நீதிமன்றம்

தமிழக சட்டமன்றத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பில் இருக்கிறது. இது குறித்து விரைவில் முடிவெடுக்கக் கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. 1,600 ஆயுள் தண்டனைக் கைதிகளின் முன்கூட்டிய விடுதலைக்கான மனு பரிசீலிக்கப்பட்டிருக்கும் நிலையில் எங்களது விடுதலை தொடர்பான சட்ட மசோதா காத்திருப்பில் இருக்கிறது. ஆகவே சிறையிலிருக்கும் என்னை விரைவாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், ``ஏழு பேரின் விடுதலை தொடர்பான முடிவு ஆளுநரின் ஒப்புதலுக்காக இருக்கிறது. இதே வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க இயலாது" எனத் தெரிவிக்கப்பட்டது.

ரவிச்சந்திரன் விடுதலை  தொடர்பாக மனு
ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பாக மனு

அதற்கு மனுதாரர் தரப்பில், ``அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில், அரசு முடிவெடுத்தது. ஆகவே, இந்த விவகாரத்திலும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இது குறித்து தமிழக தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு