Published:Updated:

100 நாள் வேலைத் திட்டம்: அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்றம் - திட்டப்பணிகள் முறையாக நடக்காதது ஏன்?

100 நாள் வேலைத் திட்டம்

தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டம் முறையாக நடைமுறைவில்லை எனக் கருத்து தெரிவித்திருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. திட்டப்பணிகள் முறையாக நடைப்பெறாதது ஏன்?

100 நாள் வேலைத் திட்டம்: அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்றம் - திட்டப்பணிகள் முறையாக நடக்காதது ஏன்?

தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டம் முறையாக நடைமுறைவில்லை எனக் கருத்து தெரிவித்திருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. திட்டப்பணிகள் முறையாக நடைப்பெறாதது ஏன்?

Published:Updated:
100 நாள் வேலைத் திட்டம்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தற்போது தமிழகத்தில் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழ ஆரம்பித்துள்ளன. இதற்குத் தொடக்கமாக அமைந்திருப்பதே தமிழக அரசுமீது நீதிமன்றத்துக்கு எழுந்திருக்கும் அதிருப்திதான். தென்காசியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இதன் விசாரணையில், தனியார் நிலத்தில் விவசாய வேலையில் ஊழியர்கள் பணியாற்ற அனுமதித்தது உறுதியானது. இதில் கருத்து தெரிவித்திருக்கும் நீதிமன்றம், மனுதாரர் தரப்பு ஆதாரபூர்வமாகக் குற்றச்சாட்டை நிரூபித்திருக்கிறது என்றது. மேலும், இதே நிலை தமிழகம் முழுவதிலும் தொடர்வதாகவும், இதனால் அரசுக்கு அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தது. மேலும், முறையாக நடக்காமல் இருக்கும் இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை அறிக்கையாகத் தாக்கல் செய்ய ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டது.

மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை உயர் நீதிமன்றம்

திட்டப்பணிகள் முறையாக நடக்காதது ஏன்?

1. தமிழகத்தில் இந்தத் திட்டத்துக்கு ஆண்டுக்கு நிதி மட்டும் ஒதுக்கப்படுவது மட்டும் போதாது. அதற்குச் செய்யவேண்டிய மராமத்துப் பணிகள், நீர்நிலையைச் சீரமைப்பது, சாலையைச் சரிசெய்வது எனப் பணிகளும் திட்டமிடப்பட வேண்டும். இது தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து திட்டமிடல் சரியாக நடைபெற்றிருந்தால், நீர்நிலைகள் சுருங்கியிருக்காது என்னும் வாதம் முன்வைக்கப்படுகிறது.

100 நாள் வேலைப் பணியாளர்களிடம் நடத்திய நேர்காணல்
100 நாள் வேலைப் பணியாளர்களிடம் நடத்திய நேர்காணல்

2. இதைக் கண்காணிக்கவேண்டிய அதிகாரிகள் இதை முறையாகக் கண்காணிக்காமல் இருந்தது இந்தத் திட்டம் பின்னடைவைச் சந்திக்கக் காரணம். அரசு ஊழியர்களே அரசின் நிதியைப் பெற்றுக்கொண்டு தனியார் வேலைகளில் தொழிலாளர்களை ஈடுபடச் செய்தனர். இதைச் சுட்டிக்காட்டித்தான் அரசாங்கத்துக்கு இழப்பை ஏற்படுத்திய ஊழியர்கள்மீது துறை சார்ந்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

3. குறைந்த நாள்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதும் ஒரு காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். குறிப்பாக, 100 நாள்கள் வேலை என்பதே திட்டம். ஆனால், மிகக்குறைந்த நாள்களுக்கு மட்டுமே வேலை தரப்படுகிறது. இதனால் வேலைவாய்ப்பில்லாமல் பிற தொழில்களில் ஈடுபடுகிறார்கள். எனவே, திடீரென அறிவிக்கப்படும் இந்தத் திட்டத்தையும் விட முடியாமல், முன்பு பார்த்த வேலையையும் விட முடியாமல் மக்கள் இரண்டிலும் ஈடுபட முயல்கின்றனர். இதன் விளைவாக அரசுத் திட்டம் முழுமையாகச் செயல்படாமல் போகிறது.

4. ஆண்டுதோறும் சமூக தணிக்கைச் சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, இந்தத் திட்டத்தால் எந்தெந்த வேலைகள் நிறைவடைந்திருக்கின்றன என்பது விவாதிக்கப்பட வேண்டும். குறிப்பாக, முடிக்கப்பட்ட வேலைகள், அதற்கான செலவுத் தொகை தணிக்கை செய்யப்பட்டு கிராமசபை ஒப்புதலுடன் மாவட்ட அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். ஆனால் இதைப் பெரும்பாலான ஊராட்சிகள் பின்பற்றவில்லை என்னும் குற்றசாட்டை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கிறார்கள்.

100 நாள் வேலை திட்டப்பணி
100 நாள் வேலை திட்டப்பணி

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியில் மத்திய அரசு 75% பங்கும் மாநில அரசு 25% பங்கும் ஒதுக்குகின்றன. அதன்படி, மத்திய அரசு ரூ.674 கோடியும், மாநில அரசு ரூ.224 கோடியம் ஒதுக்கியிருக்கின்றன. மேலும், நிர்வாகச் செலவுக்காக ரூ.49 கோடியைத் தமிழக அரசு ஒதுக்கியிருக்கிறது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இந்த நிலையில் தமிழகத்தின் மீது நீதிமன்றம் தெரிவித்திருக்கும் அதிருப்தி தொடர்பாக, பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். "இந்தத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நிதியை மாநில அரசு அபகரிப்பதாகப் புகார்கள் வந்தன. இதைக் கட்டுப்படுத்த வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தப்பட்டுவருகிறது. ஆனால், போலியான ஆவணங்களைக்கொண்டு முறைகேடுகள் நடக்கின்றன. குறிப்பாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கும் வேலை அளிப்பதும், அதில் கமிஷன் தொகை பெறுவதும் வாடிக்கையாகிவிட்டது’' என்றார்.

இந்தத் திட்டம் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைக்கும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காளியம்மாளிடம் பேசினோம். ``இதை 100 நாள் வேலைத் திட்டம் எனச் சொல்வதே தவறு. அத்தனை நாள்கள் வேலையை எந்த ஊராட்சியும் உறுதி செய்யவில்லை. மிகக் குறைந்த நாள்களுக்கு மட்டுமே வேலை ஒதுக்கப்படுகிறது. இது பல மாநிலங்களில் தோல்வியடைந்த திட்டமாக இருக்கும் நிலையில், தமிழக அரசு தேர்தல் வாக்குக்காக மட்டுமே இதைத் தொடர்கிறது. இது கிராமப்புறப் பெண்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முக்கியப் பங்காற்றுகிறது. எனவே, நாங்கள் இந்தத் திட்டத்துக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், இதை நெறிப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிசெய்து ஆண்டு முழுவதும் வேலை தர வேண்டும். குறிப்பாக, உள்ளூர் வளங்களை மேம்படுத்தவும், உற்பத்தி சார்ந்த தொழில்களிலும் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு இதை நெறிப்படுத்தினால், இது நல்ல திட்டமாக இருக்கும்” என்றார்.

காளியம்மாள்
காளியம்மாள்

நீதிமன்றத்தின் அதிருப்தி தொடர்பாக, திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ”இந்தியாவிலேயே இந்தத் திட்டம் சிறப்பாக நடைபெறுவது தமிழகத்தில்தான். அதற்கு விருதுகளையும் தமிழகம் பெற்றிருக்கிறது. அப்படி ஒன்றிரண்டு இடத்தில் நடக்கும் முறைகேடுகளுக்கு, அந்தப் பொறுப்பு வகிக்கும் கிராமப் பணியாளர்கள், தாசில்தார்கள் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்படும். ஆனால், நீதிமன்றம் எல்லா இடங்களிலும் இந்தத் தவறு நடப்பதாகச் சுட்டிக்காட்டியிருப்பது ஏன் எனத் தெரியவில்லை.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இந்தியாவில் பல மாநிலங்களில் இந்தத் திட்டமே செயல்படவில்லை. ஆனால் தமிழகம் நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டில் திட்டத்துக்கு மொத்தமாக ரூ. 949 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது . மத்திய அரசுக் கூட்டணியில் இருந்தபோது திமுக-வின் பெரும் முயற்சியில் திட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே அதைச் சிறப்பாக நடைமுறைப்படுத்துகிறோம். இதில் நீதிமன்றம் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில் அதைச் சீர்செய்வோம்” என்றார்.