Published:Updated:

`எனக்கு மிரட்டல்கள் வந்தன’ - சபரிமலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஓப்பன் டாக்!

`உங்கள் தீர்ப்பு குறித்து மோசமான கருத்துகளும் அச்சுற்றுத்தல்களும் பரவி வருகிறது’ என்று கூறினர்.

sabarimala
sabarimala

திருவாங்கூர் தேவஸம் போர்டு நிர்வகித்துவரும் சபரிமலை ஐயப்பன் கோயிலில், 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை. `அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும்’ என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு பல்வேறு கட்ட விசாரணையைத்தாண்டி, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அவருடன் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா என ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

DY Chandrachud
DY Chandrachud
Sabrang

இந்த வழக்கைத் தொடர்ந்து 8 நாள்களாக விசாரித்த அரசியல் சாசன அமர்வு, ``கோயில் வழிபாடுகளில் பெண்களுக்குப் பாகுபாடு காட்டக் கூடாது. பெண்கள், ஆண்களுக்கு நிகரானவர்கள். வழிபாடு நடத்த அவர்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். ஐயப்ப பக்தர்கள், குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்கள் என்று கூற முடியாது'' என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில், இந்த அமர்வில் இடம்பெற்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், `தனக்கு மிரட்டல்கள் வந்தன’ எனக் கூறியுள்ளார்.

Vikatan

இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர். ``சபரிமலை தீர்ப்புக்குப் பின், நீதிபதி நண்பர்கள், உதவியாளர்கள் என்னிடம், `நீங்கள் சமூகவலைதளத்தில் இல்லை என்று நான் நம்புகிறேன்’ என்றனர். நானும் அவர்களிடம், `ஆமாம் நான் சமூகவலைதளத்தில் இல்லை’ என்றேன். வாட்ஸ் அப் தவிர நான் வேறு எதிலுமே இல்லை என்று அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள், `நீங்கள் சமூகவலைதளத்தைப் பயன்படுத்த வேண்டாம். அது அச்சமூட்டும் வகையில் இருக்கிறது. உங்கள் தீர்ப்பு குறித்து மோசமான கருத்துகளும் அச்சுற்றுத்தல்களும் பரவி வருகிறது’ என்றனர். மேலும், என்னுடைய பாதுகாப்பு குறித்து அவர்கள் அச்சப்பட்டதாகத் தெரிவித்திருந்தனர்” என்று நீதிபதி பேசினார்.

`எனக்கு மிரட்டல்கள் வந்தன’ - சபரிமலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஓப்பன் டாக்!

தொடர்ந்து, ``விமர்சனங்கள் இதில் ஒரு பகுதி என்பது தெரியும். ஒரு நீதிபதியாக எங்களுக்கு தைரியமான மனநிலை தேவைப்படுகிறது. தீர்ப்பு குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை வெளியில் சொல்லட்டும். ஏனென்றால் நாங்கள் சிக்கலான வழக்குகளை எதிர்கொள்பவர்கள். தீர்ப்புக்கு உறுதுணையாக இருந்தேன். பெண்களை வெளியேற்றுவதற்கான சபரிமலையின் நடைமுறை `தீண்டாமைக்கு’ ஒப்பானது. வழிபடுவதற்கான சுதந்திரத்தை அரசியல் சாசனம் கொடுத்திருக்கும்போது, இப்படியான நடைமுறை சட்டத்துக்கு எதிரானது.

எப்படியிருந்தாலும், தனிப்பட்ட கருத்துகளை ஒதுக்கி வைத்து, அனைத்து கோணங்களையும் ஆராய்ந்து, தீர்ப்பு சொல்ல வேண்டியது நீதிபதியின் கடமை. சபரிமலை வழக்கில், எனது சகாக்களில் ஒருவரான நீதிபதி இந்து மல்ஹோத்ராவிடம் கருத்து வேறுபாடு இருந்தது. அவரிடம் ஒரு மாறுபட்ட பார்வை இருந்தது, நான் அதை மதிக்கிறேன். என்னுடைய உதவியாளர்கள், பெண்கள் உரிமை தொடர்பான வழக்கு ஒன்றில் எப்படி ஒரு பெண் அதிருப்தி தெரிவிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு நான், `ஏன் எப்போதும் ஆண் ஒரு மாதிரியாகவும், பெண் ஒரே மாதிரியாகவும் சிந்திக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள். நாங்கள் அனைவரும் சட்ட வல்லுநர்கள்” என்று தெரிவித்தார்.