தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருந்த நிலையில், குற்றம் சட்டப்பட்டவருக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் முகேஷ்குமார் சிங். இவர் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் காதல் உறவில் இருந்த வந்த நிலையில், கடந்த ஆண்டு அந்தப் பெண்ணை விட்டுப் பிரிந்த அவர், வேறொரு பெண்ணை மணக்க முடிவு செய்து, நிச்சயமும் செய்துள்ளார்.

இதனிடையே, 10 வருடங்களுக்கு மேலாக முகேஷ் தன்னுடன் உறவில் இருந்து, திருமணம் செய்வதாகக்கூறி பாலியல் உறவில் ஈடுபட்டதாக, ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்திருந்தார்.
காவல் துறையினர் அந்த வழக்கில் மேல்நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், முன்ஜாமீன் கேட்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் முகேஷ்குமார் சிங் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், முகேஷ்குமாருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தது. இதையடுத்து, முன்ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு அளித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவரான முகேஷ் குமார் சிங் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நமித் சக்சேனா, ‘தன்னுடைய காதலை முடித்து வேறொரு பெண்ணை காதலிக்கவோ, திருமணம் செய்யவோ, தேர்வு செய்யவோ ஆணுக்கு உரிமை உள்ளது. இடைப்பட்ட காலத்தில், காதலிக்கும் இருவரின் சுய விருப்பத்தின் பேரில் பாலியல் உறவு கொண்டால், அதனை பாலியல் வன்முறையாகக் கருதக்கூடாது’ என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதத்திற்கு பின்னர், முகேஷ்குமாருக்கு உச்ச நீதிமன்ற அமர்வு முன்ஜாமீன் வழங்கியது. இதுகுறித்து பேசிய நீதிபதிகள், ``திருமணம் செய்து கொள்வதாகக்கூறி, தான் காதலித்த பெண்ணை பாலியல் வன்முறை செய்ததாக காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட முகேஷ் குமார் சிங்கிற்கு நிபந்தனைகளின் அடிப்படையில் முன்ஜாமீன் வழங்குகிறோம். ஆனால், அவர் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973ன் பிரிவு 438 ( 2)ன் கீழ் உத்தரவுக்கு கட்டுப்பட்டவராகவே இருக்க வேண்டும். தற்சமயம் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள இந்த முன்ஜாமீன் வழக்கின் தகுதி அடிப்படையில் கொடுக்கப்பட்டதாக கருத்தில் கொள்ளக்கூடாது. இந்த வழக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வழக்கின் அடிப்படையிலும், சட்டத்தின்படியும் நீதிமன்றம் மற்றவற்றை முடிவு செய்யலாம்” என்றனர்.