இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு தனிமனிதன் தான் விரும்பும் மதத்தில் சேர்ந்து வழிபடும் முழு உரிமையையும் பெற்றிருக்கிறார். அதேபோல, அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றிப் பிரசாரம் செய்யும் உரிமையைப் பெற்றிருக்கிறார். இந்த நிலையில், `அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும்' என உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார். இதற்கு எதிராக, `அரசியல் சாசனத்துக்கு முற்றிலும் முரணான இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்' என தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது.

பா.ஜ.க வழக்கறிஞரின் `பொதுநல' வழக்கு:
பா.ஜ.க மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய், `தஞ்சைப் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலையைக் குறிப்பிட்டு, மதமாற்றம் தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்; மனிதாபிமான உதவி, பொருளாதார உதவி, பரிசுப் பொருட்கள் கொடுத்தும், வலுக்கட்டாயமாக மிரட்டியும் கட்டாய மதமாற்றம் செய்வதைத் தடுக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும்; அதற்கான சட்ட வரைவை உருவாக்க சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு:
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ``மதமாற்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் மனுதாரர் அஸ்வினி குமார் உபாத்யாய் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர். அவர் மனுவில் கூறியிருக்கும் அனைத்தும் பொய். மதமாற்றம் தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுக்குத்தான் முழு அதிகாரம் இருக்கிறது. மத்திய அரசுகூட இதில் தலையிட முடியாது. மேலும், இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கு எதிராக எந்த உத்தரவும் உச்ச நீதிமன்றமும் பிறப்பிக்க முடியாது. மதமாற்றம் தொடர்பான இந்த விவகாரத்தில் நிச்சயம் மாநில அரசுகளின் கருத்தைக் கேட்க வேண்டும்" என வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட உச்ச நீதிமன்றம், `இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளும் பதில் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. அதையடுத்து ஒவ்வொரு மாநிலமும் தங்களின் கருத்துகளைப் பிரமாணப் பத்திரங்களாகத் தாக்கல் செய்துவருகின்றன.

தமிழ்நாடு அரசின் பிரமாணப் பத்திரம்: அந்தவகையில் தமிழ்நாடு அரசும் தற்போது பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்திருக்கிறது. அந்த பதிலில், ``தஞ்சைப் பள்ளி மாணவியின் தற்கொலைக்கு மதமாற்றம்தான் காரணம் எனக் கூறி மனுதாரர் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயலுகிறார். மாணவியின் தற்கொலைக் குறிப்பில், விடுதி காப்பாளர் வழங்கிய கூடுதல் வேலைகள்தான் காரணம் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை மனுதாரர் தனக்குச் சாதகமாக திசைதிருப்ப முயல்கிறார். தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடப்பதாகக் கூறப்படுவது பொய்யான தகவல். தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக கட்டாய மதமாற்றம் எதுவும் நடைபெறவில்லை!" எனத் தெரிவித்திருக்கிறது.
மேலும் முக்கியமாக, ``அரசியலமைப்புச் சட்டத்தின் 21, 25-வது பிரிவுகளின்படி ஒவ்வொரு குடிமகனும் தனக்கான மதத்தைப் பின்பற்றவும், தனது மதத்தை அமைதியான முறையில் பரப்பவும் உரிமை இருக்கிறது. ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் மதத்தை ஏற்கக்கூடிய சுதந்திரத்தை அரசியல் அமைப்புச் சட்டம் வழங்குகிறது. எனவே, மத அமைப்புகள் அமைதியான முறையில் மத பரப்புரையில் ஈடுபடுவதில் தவறு எதுவும் இல்லை! அதேசமயம், மதத்தைப் பரப்ப சட்டவிரோத நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டால் அது தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்து இருக்கிறது.

இந்த வழக்கைத் தாக்கல்செய்த மனுதாரர், சிறுபான்மையினருக்கு எதிராக உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்திருக்கிறார். மேலும், மனுதாரர்மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் இருப்பதால், அவர் பொதுநல மனுத்தாக்கல் செய்யத் தகுதியற்றவர். எனவே, மதரீதியில் தூண்டப்பட்டு தொடுக்கப்பட்டிருக்கும் இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தொடரப்பட்டிருக்கும் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்!" என தமிழ்நாடு அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் கூறியிருக்கிறது.
அனைத்து மாநிலங்களின் கருத்துகளும் பெறப்பட்ட பின்னர், இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.