மற்றவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதை மதச் சுதந்திர உரிமையாகக் கருத முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக வழக்கறிஞர் அஸ்வின் குமார் உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், ``மிரட்டல், அச்சுறுத்தல், பரிசுகளை வழங்குதல், பணம் வழங்குதல் ஆகியவற்றின் மூலமாக மதமாற்றம் நடக்கிறது. அதைத் தடுப்பதற்காகக் கடும் நடவடிக்கைகள் எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பதற்கான அறிக்கையை தயாரிக்குமாறு இந்திய சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார் அவர்.

அந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதே குறுகிய பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், ``குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவரை மிரட்டல் மூலமாகவோ, பொருள்களைக் கொடுத்தோ மற்றொரு மதத்துக்கு மாற்றுவதை மதச் சுதந்திர உரிமையாகக் கருத முடியாது. அவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதை அரசு அறிந்திருக்கிறது. பெண்களும் பொருளாதார, சமூக அறிவியலில் பின்தங்கிய வகுப்பினருமே மதமாற்றச் சம்பவங்களால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
கட்டாய மதமாற்றச் சம்பவங்கள் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றன. சட்டம்-ஒழுங்கு மாநில அரசுகளிடம் இருக்கிறது. எனவே, மதமாற்றத்தை ஒழுங்குபடுத்துவது மாநில அரசுகளின் கடமை. ஒடிசா, மத்தியப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் கட்டாய மதமாற்ற சம்பவங்களை தடுக்க, மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் 25-வது சட்டப்பிரிவு மதப் பிரசாரங்களை மேற்கொள்ள அனுமதித்தாலும், கட்டாய மதமாற்றத்தை அனுமதிக்கவில்லை" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், ``மதமாற்றத்தை நீதிமன்றம் தடுக்கவில்லை. அதேவேளையில் கட்டாய மதமாற்றங்கள் நிகழக்கூடாது. இந்த விவகாரம் தொடர்பான விவரங்களை மாநில அரசுகளிடம் பெற்று விரிவான பிரமாணப் பத்திரத்தை அரசு தாக்கல் செய்ய வேண்டும்" எனக் கூறி வழக்கின் விசாரணையை டிசம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.