மத்திய அரசின் கீழுள்ள துறைகளின் அரசுப் பணிகளுக்கான பதவி உயர்வில், SC/ST ஊழியர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவத்தின் அளவை நிர்ணயம் செய்யவேண்டி உச்ச நீதிமன்றத்தில் ஜர்னைல் சிங் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில், ``SC/ST ஊழியர்களுக்குப் அரசுப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பதன் மூலம் அரசு நிர்வாகத்தின் செயல்திறன்கள் எந்த வகையிலும் பாதிக்காது" என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது. பின்னர் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரியில், ``இது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு உட்பட்ட விஷயம் என்பதால், நீதிமன்றத்தால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது" எனக் கூறி தள்ளுபடி செய்திருந்தது.

இந்த நிலையில், நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர் கவாய் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் இது தொடர்பாக பிரமாணப் பத்திரம் ஒன்றை மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.
அதில், ``இட ஒதுக்கீட்டுக்கான கொள்கையானது, அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இந்த நீதிமன்றம் வகுத்துள்ள சட்டத்திற்கு ஒத்துப்போவதாக உள்ளது. இந்த வழக்கு அனுமதிக்கப்படாவிட்டால், பதவி உயர்வுகளில் SC/ST ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் திரும்பப்பெற நேரிடும். இது SC/ST ஊழியர்களின் மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இதற்கிடையில், ஓய்வுபெற்ற பல ஊழியர்களின் ஓய்வூதியத்தை மறு நிர்ணயம் செய்தல் உட்பட அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான ஊதியத்தை திரும்பப் பெறுதல் போன்றவை ஏற்படும். இது ஊழியர்களின் அமைதியின்மை மற்றும் பல வழக்குகளுக்கு வழிவகுக்கும்" என மத்திய அரசு குறிப்பிட்டிருக்கிறது.
