Published:Updated:

`கோயில் சொத்துகளின் மூலம் வரும் வருவாயை முறையாக வசூலித்தால்...’ - நீதிமன்றக் கருத்தும் பின்னணியும்

இந்து சமய அறநிலையத்துறை | உயர் நீதிமன்றம்

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கோயில்களிலிருந்தும் முறையாக வருவாய் வந்தால், தமிழ்நாடு அரசுக்குக் கடன் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.

`கோயில் சொத்துகளின் மூலம் வரும் வருவாயை முறையாக வசூலித்தால்...’ - நீதிமன்றக் கருத்தும் பின்னணியும்

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கோயில்களிலிருந்தும் முறையாக வருவாய் வந்தால், தமிழ்நாடு அரசுக்குக் கடன் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
இந்து சமய அறநிலையத்துறை | உயர் நீதிமன்றம்

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு:

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களின் பராமரிப்பு, சொத்துகளின் ஆக்கிரமிப்பு தொடர்பாகவும், வாடகை மற்றும் குத்தகைத் தொகையை வசூலிப்பது போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்தும் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை செய்துவருகிறது. இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன் ஆஜராகியிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம் - கோயில் சொத்துகள்
சென்னை உயர் நீதிமன்றம் - கோயில் சொத்துகள்

நீதிமன்ற சிறப்பு அமர்வு தமிழ்நாடு அரசுக்கு மொத்தம் 75 உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணையின்போது பேசிய வழக்கறிஞர் அருண் நடராஜன், ``மொத்தமுள்ள 75 உத்தரவுகளில், 38 உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. 32 உத்தரவுகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. ஐந்து உத்தரவுகள் மாநில அரசுக்குச் சம்பந்தம் இல்லாதவை" என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோயில் நிலம் மீட்பு:

தொடர்ந்து பேசியவர், ``தமிழ்நாட்டிலுள்ள பழைமை வாய்ந்த கோயில்கள் புனரமைக்கப்படுகின்றன. அதற்கான பணிகளில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு கால பூஜை நடக்கும் கோயில்களுக்கான நிதி இரண்டு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மாநில தணிக்கைத்துறைத் தலைவர் தலைமையில் ஐந்து பேர்கொண்ட குழு அமைத்து கோயில் கணக்குகளைத் தணிக்கை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. நில குத்தகை வருவாயிலுள்ள நிலுவைத்தொகையை வசூலிக்கவும், விவசாய நிலங்களுக்கு உரிய வாடகையை நிர்ணயம் செய்யவும், தொகை செலுத்தாத குத்தகைதாரர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்களில் 1.23 லட்சம் குத்தகைதாரர்கள் விவசாயம் செய்துவருகிறார்கள்
அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர்

3,66,019 கோயில் சொத்துகளில் 99,077 சொத்துகள் மட்டுமே வருமானம் ஈட்டிவருகின்றன. மீதமுள்ள 2,66,942 சொத்துகளையும் வருமானம் ஈட்டும் வகையில் கொண்டுவர துறைசார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களுக்குச் சொந்தமான 5.82 லட்சம் ஏக்கர் நிலங்களில் 3.79 லட்சம் ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு அந்த விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. 68,219 ஏக்கர் புதிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை மீட்கும் நடவடிக்கும் எடுக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள நிலங்களைக் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கோயில்களில் மதிப்புமிக்க பொருள்களை வைக்க அறைகள் கட்டும் பணியும் நடைபெற்றுவருகிறது" என்று தெரிவித்தார்.

ஒவ்வோர் அங்குலத்தையும் மீட்டெடுக்க வேண்டும்:

அப்போது பேசிய நீதிபதிகள், ``கோயில் நிலங்களை மீட்கும் பணியில் எந்தத் தொய்வும் ஏற்படக் கூடாது. ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்களின் ஆக்கிரமிப்பிலுள்ள ஒவ்வோர் அங்குலத்தையும் மீட்டெடுக்க வேண்டும். அனுமதியற்ற குத்தகைகளை ரத்து செய்ய வேண்டும். அதிகாரிகள் தவறுகளுக்கு உடந்தையாக இருந்தால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அறநிலையத்துறை கோயில்களின் சொத்துகளின் மூலம் வரும் வருவாயை முறையாக வசூலித்தால், தமிழ்நாட்டில் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய முடியும்.

கோயில்
கோயில்

கோயில் புனரமைப்புக் குழுக்கள் எடுக்கும் முடிவுகளை மற்ற துறைகள் ஏற்க வேண்டும். தணிக்கையில் குறைந்தது 15 தணிக்கையாளர்கள் இருக்க வேண்டும். அறநிலையக் கோயில் பணிகளுக்குத் தனிநபரோ, தனியார் அறக்கட்டளை மூலமோ நிதி வசூல் செய்வதை அனுமதிக்கக் கூடாது. அப்படிச் செய்யும் இணையதளங்களை உடனடியாக முடக்க வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை அடுத்த விசாரணையில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று கூறி அடுத்த விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் 2021-22-ம் ஆண்டு திருத்தப்பட்ட பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை 58,692.68 கோடி ரூபாயாகவும், நிதிப் பற்றாக்குறை 92,529.43 கோடி ரூபாயாகவும் இருக்கும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், அறநிலையத்துறை வருவாயை முறையாக வசூல் செய்தால் நிதிப்பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை அரசு தாக்கல் செய்ய முடியும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

அறநிலையத்துறை
அறநிலையத்துறை

இது தொடர்பாக அறநிலையத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``தற்போதைய நிலையில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான பல சொத்துகளிலிருந்து வருமானம் ஈட்டப்படுவது கிடையாது. அதற்கான முன்னெடுப்பு தற்போதுதான் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், எவ்வளவு வருமானம் வரும் என்று சொல்ல முடியாது. ஆக்கிரமிப்பிலுள்ள நிலங்களை மீட்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கண்டிப்பாக அனைத்து ஆக்கிரமிப்பு நிலங்களும் மீட்கப்படும்" என்று தெரிவித்தார்.