Published:Updated:

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா... உச்ச நீதிமன்றம் செல்ல தேர்தல் ஆணையம் முடிவு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா நடந்ததாகப் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் ரத்துசெய்யப்பட்டதற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது.

Madras High Court
Madras High Court

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் மறைவுக்குப் பிறகு அந்தத் தொகுதியில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருந்தது. அ.தி.மு.க (அம்மா) அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், அ.தி.மு.க (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் மதுசூதனனும், தி.மு.க சார்பில் மருதுகணேஷும் போட்டியிட்டனர். அங்கு, டி.டி.வி.தினகரனை வெற்றிபெறச் செய்வதற்காக வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பாக தேர்தலை ரத்துசெய்தது, தேர்தல் ஆணையம்.

C. Vijaya Baskar
C. Vijaya Baskar

ஆனால், ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு டைரி உள்ளிட்ட ஆவணங்களை வருமானவரித் துறையினர் கைப்பற்றினர். ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் அந்த டைரியில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அதாவது, வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 89.65 கோடி ரூபாய் பல அமைச்சர்களிடம் வழங்கப்பட்டதாக அந்த டைரியில் குறிப்பிடப்பட்டிருந்தது என்று சொல்லப்பட்டது.

அந்த ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் வருமானவரித் துறையினர் ஒப்படைத்தனர். அதையடுத்து, ஆர்.கே.நகர் தேர்தல் ரத்துசெய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும், வருமானவரித் துறையினர் அளித்த ஆவணங்கள் அடிப்படையில் காவல்துறையில் புகார் அளிக்குமாறு தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

TTV Dinakaran
TTV Dinakaran

அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவரின் தந்தை சின்னையா, மனைவி ரம்யா ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு தேர்தல் அதிகாரி போலீஸில் புகார் அளித்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், எந்தவொரு பெயரும் இல்லாமல் அபிராமபுரம் காவல்நிலைய போலீஸார் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்துள்ளனர்.

இந்நிலையில், அந்த எஃப்.ஐ.ஆரை ரத்துசெய்ய வேண்டுமென்று, அ.தி.மு.க-வைச் சேர்ந்த திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இவர் இந்த வழக்குக்கு எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லாதவர். ஆனாலும், அவரின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், அந்த எஃப்.ஐ.ஆரை 2018-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி ரத்துசெய்தது. புகார் அளித்த தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்காமலும், தேர்தல் ஆணையத்தை ஒரு தரப்பாக வழக்கில் சேர்க்காமலும், எஃப்.ஐ.ஆர் ரத்துசெய்யப்படுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதி பணப்பட்டுவாடா தொடர்பான நான்கு மனுக்கள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வுக்கு முன் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோதுதான், எஃப்.ஐ.ஆர் ரத்துசெய்யப்பட்ட விஷயம் தெரியவந்தது. அதைக் கேட்டு அதிர்ந்த நீதிபதிகள், இந்தப் பிரச்னையில் தேர்தல் ஆணையமும் வருமானவரித் துறையும் என்ன செய்யப்போகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புவதாகக் கூறினர்.

மேலும், எஃப்.ஐ.ஆர் ரத்துசெய்யப்பட்டால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Vikatan

எஃப்.ஐ.ஆர் ரத்துசெய்யப்பட்டது குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, இந்தப் புகார்தாரரான தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்காமல், ஒரு நோட்டீஸ் கூட கொடுக்காமல், தேர்தல் ஆணையத்தை வழக்கில் ஒரு தரப்பாகச் சேர்த்துக்கொள்ளாமல் எஃப்.ஐ.ஆரை எப்படி ரத்துசெய்யலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. எப்படி அந்த வழக்கு நீதிமன்றப் பதிவேட்டில் பதிவுசெய்யப்பட்டது, எப்படி நம்பர் கொடுக்கப்பட்டது என்றெல்லாம்கூட கேள்விகள் எழுப்பப்பட்டன.

பல மாதங்களுக்குப் பிறகு, எஃப்.ஐ.ஆர் ரத்துசெய்யப்பட்டதற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு தேர்தல் ஆணையம் முடிவுசெய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.