பரமக்குடி பா.ஜ.க நிா்வாகி கொலை வழக்கில் தவறாக கைது செய்யப்பட்டவா்களுக்கு, இன்ஸ்பெக்டரே இழப்பீடு வழங்க வேண்டுமென சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை (நேற்று) உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பா.ஜ.க நிர்வாகி முருகன் என்பவர் கடந்த 2013-ல் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பரமக்குடியை சேர்ந்த ராஜாமுகமது, மனோகரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்பு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்கத் தொடங்கிய பின்பு இவ்விருவரும் குற்றவாளிகள் இல்லை என விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்ட ராஜாமுகமது, மனோகரனுக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்கவும், தவறாக விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் ரத்னகுமாரிடம் இந்த தொகையை வசூலிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இதுகுறித்து உயர் நீதிமன்ற வட்டாரத்தில் விசாரித்தபோது, "பரமக்குடி பா.ஜ.க செயலாளர் முருகன் என்ற முருகேசன் கடந்த 19.3.2013 ஆண்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். முருகனுக்கும் ராஜாமுகம்மது மற்றும் மனோகரனுக்கு நிலப்பிரச்னை இருந்ததால், அந்த அடிப்படையில் இவர்கள்தான் கொலை செய்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார் பரமக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் ரத்னகுமார். அதோடு அவர்களை கைது செய்து சிறையில் அடைந்தார். மேலும் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி வேறொரு வழக்கில் போலீஸ் பக்ருதீன் உள்ளிட்டவர்களை கைது செய்து விசாரித்தபோது முருகனை இவர்கள்தான் கொலை செய்ததாக தெரிய வந்ததால், இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து முருகன் கொலை வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி, வழக்கிலிருந்து ராஜாமுகமது, மனோகரனை விடுவித்தது. இந்த நிலையில்தான் தாங்கள் பாதிக்கப்பட்டதுக்கு இழப்பீடு வழங்க வேண்டியும், தற்போது தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கின்றனர்.இதையடுத்து, உயர் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது" என்றனர்.

ராஜாமுகமது மற்றும் மனோகரன் தாக்கல் செய்த மனுவில், "ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த எங்களை இன்ஸ்பெக்டர் ரத்னகுமார், முருகன் கொலை வழக்கில் குற்றவாளியாக்கி, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார். அது மட்டுமின்றி தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் வழக்கு பதிவு செய்தனர். இந்த கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்த பின்னர் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் குற்றவாளிகள் என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, எங்களை வழக்கிலிருந்து விடுவித்தனர்.
இந்த வழக்கில் சிறை சென்றதால் நாங்களும் எங்கள் குடும்பத்தினரும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு, பல இன்னல்களுக்கு ஆளானோம். அதனால், இதற்கு காரணமான இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தும், எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
"மனுதாரர்களின் குடும்பம் பல துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறது. அதனால் தவறான நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுதாரர் வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். இன்ஸ்பெக்டருக்கு இரண்டு வருட ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி, ''மனுதாரர்கள் இருவரையும் உள்நோக்கத்துடன் குற்றவாளியாக சேர்திருக்கின்றனர். இருவரின் குடும்பங்களும் மிகப்பெரிய இழப்பை, அவமானங்களைச் சந்தித்திருக்கின்றனர். இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு 16 வாரத்தில் ராஜாமுகமதுவுக்கு ரூ.10 லட்சம், மனோகரனுக்கு ரூ.8 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும். இதை தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் ரத்னகுமாரிடம் வசூலிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.