Published:Updated:

கேட்ட 50 இடங்களில் மூன்றுக்கு மட்டுமே அனுமதி?! - உயர் நீதிமன்றத்தில் கொந்தளித்த ஆர்.எஸ்.எஸ் தரப்பு

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் - உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில் மூன்று இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

கேட்ட 50 இடங்களில் மூன்றுக்கு மட்டுமே அனுமதி?! - உயர் நீதிமன்றத்தில் கொந்தளித்த ஆர்.எஸ்.எஸ் தரப்பு

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில் மூன்று இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் - உயர்நீதிமன்றம்

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்!

கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜயந்தியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்தத் திட்டமிட்டது. இதற்காக, அந்தந்த மாவட்ட காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், அப்போது சட்டம்-ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி, அந்தப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்

இந்த வழக்கு விசாரணையில், பல்வேறு நிபந்தனைகளுடன் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, தமிழ்நாடு அரசு முடிவெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலும், நவம்பர் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தால் காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடலாம் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்திருந்தது. சமீபத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கியது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சட்டம்-ஒழுங்கு பிரச்னை

நவம்பர் 02-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை காரணமாகவும், உளவுத்துறை அறிக்கையின்படியும் அனுமதி கோரப்பட்ட இடங்களில் 24 இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மேலும், 23 இடங்களில் உள்ளரங்கில் கூட்டம் நடத்தவும், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் ஊர்வலம் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது" என்று அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்

அப்போது, ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் "அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு மட்டும் சட்டம்-ஒழுங்குப் பிரச்னையை அரசு காரணம் சொல்கிறது. வி.சி.க-வுக்கு 500 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கு மட்டும் மூன்று இடங்களில் அனுமதி வழங்குவது ஏற்புடையது கிடையாது. 50 இடங்களிலும் அனுமதி வழங்க வேண்டும். இல்லையென்றால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காவல்துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.

`உளவுத்துறையின் அறிக்கையைப் புறம் தள்ளிவிட முடியாது!’

24 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்று நீதிபதி கேள்வியெழுப்பினார். அப்போது பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், "நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு மனிதச்சங்கிலி நடத்தவே அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் ஊர்வலம் நடத்தவோ... அணிவகுப்பு நடத்தவோ அனுமதி கோரவில்லை. இதை அரசியலாக்கக் கூடாது. ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மாநிலத்தில் சூழல் வேறு மாதிரி இருக்கிறது. அனைத்தையும் கருத்தில்கொண்டுதான் மூன்று இடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் கனமழை காரணமாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்” என்றார்.

காவல்துறையின் அறிக்கையைப் படித்த பிறகு பேசிய நீதிபதி, ``கோவை போன்ற இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கலாமே...’’ என்று கூறினார்.

ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்

அப்போது பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், "உளவுத்துறையின் அறிக்கையைப் புறம் தள்ளிவிட முடியாது. மக்களின் பாதுகாப்புதான் முக்கியம். தற்போது ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளின் வீடுகளுக்குக் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கிவருகிறார்கள்" என்றார். ஆர்.எஸ்.எஸ் தரப்பில், "உள்ளரங்கு கூட்டமாக நடத்த முடியாது. அமைதியான முறையின் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தவே அனுமதி கேட்டிருக்கிறோம்" என்ற வாதத்தை முன்வைத்தார்கள். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ``உளவுத்துறையின் அறிக்கையை ஆய்வுசெய்து மீதமுள்ள 47 இடங்களுக்கு அனுமதி வழங்குவதா, வேண்டாமா என்று நாளை (04.11.2022) உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ என்று விசாரணையை ஒத்திவைத்தார்.

அஞ்சி நடுநடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்!

இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். "நீதிமன்றத்தில் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று காரணம் சொல்லியிருக்கிறார்கள். இதிலிருந்து மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை இருக்கிறது என்பதை அரசு தரப்பே ஒப்புக்கொண்டிருக்கிறது. தமிழக அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு, தமிழகத்தில் பாஜக-வின், ஆர்.எஸ்.எஸ்-ஸின் வளர்ச்சியைத் தடுக்க பார்க்கிறது" என்றார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

தொடர்ந்து பேசியவர், "உதயநிதியின் ஆர்ப்பாட்டத்துக்கு, வி.சி.க., நாம் தமிழர் கட்சியினருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டதே... தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வளர்ந்துகொண்டிருக்கிறது. அந்த வளர்ச்சியைக் கண்டு அஞ்சி நடுநடுங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். அரசு சொல்வதை நாங்கள் ஏற்க மாட்டோம். கண்டிப்பாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்" என்று பேசினார்.

`யாருக்காக இந்த ஊர்வலம்?’

இது குறித்து திமுக செய்தித் தொடர்பாளர், கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். "தீவிரவாதிகள் உள்ளே வந்துவிட்டால் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க முடியாதுதானே... முதலில் ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கும் பாஜக-வுக்கும் என்ன சம்பந்தம்... நாங்கள் சொல்லும்போதெல்லாம் ஆர்.எஸ்.எஸ் ஒரு சமூக இயக்கம், அதற்கும் பாஜக-வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். இருவருமே ஒரே கொள்கைகளைக்கொண்டவர்கள் என்பது இப்போது தெளிவாகிறதா?" என்றார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

மேலும், "முதலில் யாருக்காக இந்த ஊர்வலம் நடத்தத் துடிக்கிறார்கள்... நாடு தற்போது இருக்கும் நிலையில் இந்த ஊர்வலம் தேவைதானா... மாநிலத்தின் பல பகுதிகளில் மழையால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசு, அவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துகொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் உண்மையில் சமூக இயக்கம் என்றால், களத்தில் இறங்கி மழையால் பாதித்த மக்களுக்கு உதவி செய்திருக்க வேண்டுமல்லவா... அனுமதி கொடுத்தால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்றுதான் சொல்லியிருக்கிறோம். ஏனென்றால் அவர்கள் கடந்தகால வரலாறு அப்படித்தான் இருக்கிறது" என்றார்.