Published:Updated:

` சொல்லாமல் விடைபெற்றுச் சென்றதற்கு மன்னியுங்கள்!' - நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உருக்கமான கடிதம்

இந்த நிலையில், `உங்களிடம் சொல்லாமல் விடைபெற்றுச் சென்றதற்கு மன்னியுங்கள்' என சென்னை உயர் நீதிமன்றத்தில் உடன் பணியாற்றிய சக நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு ஓர் உருக்கமான கடிதத்தை சஞ்ஜிப் பானர்ஜி அனுப்பியிருக்கிறார்.

உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரைப்படி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி சென்னை உயர் நீதிமன்ற வழங்கறிஞர்கள் 237 பேர் கொலிஜியத்துக்குக் கடிதம் மூலம் கோரிக்கைவைத்தனர். வழக்கறிஞர்களின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்றப் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதனடிப்படையில், நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிவு உபசார விழாவையும் தவிர்த்துவிட்டு, கனத்த இதயத்துடன் கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார்.

நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி
நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி

இந்த நிலையில், `உங்களிடம் சொல்லாமல் விடைபெற்றுச் சென்றதற்கு மன்னியுங்கள்' என சென்னை உயர் நீதிமன்றத்தில் உடன் பணியாற்றிய சக நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு ஓர் உருக்கமான கடிதத்தை சஞ்சீப் பானர்ஜி அனுப்பியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில்,

`சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய எனதருமைக் குடும்பத்தினருக்கு, என்னுடைய சக நீதிபதிகளுக்கு: தனிப்பட்ட முறையில் உங்களிடம் விடைபெறாமல் சென்றதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய நடவடிக்கைகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால், அவை தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், அந்த நடவடிக்கைகள் இந்த உயர் நீதிமன்றத்தின் நலனுக்காக எடுக்கப்பட்டவை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். என்மீது நீங்கள் காட்டிய அளவு கடந்த அன்பால் நான் நெகிழ்ந்துபோயிருக்கிறேன்’ எனக் கடிதத்தின் முதல் பத்தியில் கூறியிருக்கிறார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

கடிதத்தின் அடுத்த பத்தியில், `பார் உறுப்பினர்களுக்கு: நாட்டிலேயே மிகச்சிறந்த வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்’ என வழக்கறிஞர்களுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.

மேலும் அந்த கடிதத்தில், `பதிவுத்துறையினருக்கு: பதிவுத்துறையின் ஆற்றல்மிக்க பணிகளால்தான் நிர்வாகம் எளிதாக நடந்துகொண்டிருக்கிறது. நான் இருக்கும்போது எப்படி வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டீர்களோ, அதே நடைமுறையை தொடர்ந்து கொண்டுசெல்ல வேண்டும்’ என அறிவுறுத்தியிருக்கிறார். அதேபோல நீதிமன்ற ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.

`நீங்கள் பணியாற்றிக்கொண்டிருக்கும் பிரபுத்துவ கலாசாரத்திலிருந்து, என்னால் உங்களை முழுமையாக விடுவிக்க முடியவில்லை; அதற்காக வருந்துகிறேன்’ எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

இறுதியாக, `தமிழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். இந்த அழகான தமிழகத்தை, என் சொந்த மாநிலமாக 11 மாதங்களாகச் சொல்லிக்கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே விடைபெறுகிறேன்’ எனவும் தெரிவித்திருக்கிறார்.

நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியின் இந்த உருக்கமான கடிதத்தால் சென்னை உயர் நீதிமன்றத்தினர் மேலும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு