Published:Updated:

சாத்தான்குளம் வழக்கு: 3 மணி நேரம்... கண்ணீர்மல்க சாட்சியம் அளித்த ஜெயராஜின் மனைவி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட ஜெயராஜின் மனைவி செல்வராணி
நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட ஜெயராஜின் மனைவி செல்வராணி

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீஸாரின் கொடூரத் தாக்குதலால் தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த நீதிமன்ற வழக்கு விசாரணையில் ஜெயராஜின் மனைவி நீதிபதியிடம் மூன்று மணி நேரம் கண்ணீர்மல்க சாட்சியம் அளித்திருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரும், இவரின் மகன் பென்னிக்ஸும் செல்போன் கடை நடத்திவந்தனர். கடந்த ஆண்டு, ஜூன் 19-ம் தேதி ஊரடங்கில், குறித்த நேரத்துக்குள் கடையை அடைப்பது தொடர்பாக போலீஸாருக்கும் ஜெயராஜுக்கும் ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தால் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஜெயராஜ். தந்தையைத் தேடி ஸ்டேஷனுக்குச் சென்ற பென்னிக்ஸ், போலீஸார் தன் தந்தையை தாக்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து தடுக்க முயன்றிருக்கிறார்.

உயிரிழந்த பென்னிக்ஸ், ஜெயராஜ்
உயிரிழந்த பென்னிக்ஸ், ஜெயராஜ்

இதனால், ஆத்திரமடைந்த போலீஸார் தந்தை, மகன் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனில்வைத்து இரவு முழுவதும் கடுமையாகத் தாக்கவே, இருவரும் பலத்த காயம் அடைந்தனர். தொடர்ந்து, சாத்தான்குளம் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின், இருவரும் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூன் 22-ம் தேதி இரவில் பென்னிக்ஸும், 23-ம் தேதி அதிகாலையில் ஜெயராஜும் சிறையிலேயே அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இதையடுத்து ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 10 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன், அந்தக் காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைத்துக் காவலர்களும் கூண்டோடு வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சம்பவத்தன்று இரவு என்ன நடந்தது என்பது குறித்த தலைமைக் காவலர் ரேவதியின் துணிச்சலான வாக்குமூலம்தான் குற்றவாளிகளைத் தப்பவிடாமல் சிக்கவைத்தது. இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றியது தமிழக அரசு. ஐ.ஜி சங்கர் தலைமையிலான போலீஸார் 10 போலீஸாரையும் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரைச் சிறையில் அடைத்தனர்.

நீதிமன்றத்துக்கு வந்த கைதுசெய்யப்பட்ட போலீஸார்
நீதிமன்றத்துக்கு வந்த கைதுசெய்யப்பட்ட போலீஸார்

வழக்கின் தீவிரத்தை உணர்ந்த நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது. டெல்லியிலிருந்து வந்த சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றப் பத்திரிக்கையை நீதிமன்றத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் சமர்ப்பித்தனர். அதில், `தந்தை, மகன் உயிரிழந்ததற்கு சாத்தான்குளம் காவல் நிலையத்தின் போலீஸாரே காரணம். சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரும் குற்றவாளிகள்” எனக் கூறப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையில், எஸ்.எஸ்.ஐ பால்துரை உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரணை செய்துவந்த சி.பி.ஐ அதிகாரிகளில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும், ஊரடங்காலும் இந்த வழக்கு விசாரணை மந்தமானது. இந்த வழக்கு மதுரை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. பென்னிக்ஸின் சகோதரி பியூலா, கோவில்பட்டி கிளைச் சிறையின் கண்காணிப்பாளராக இருந்த சங்கர் உள்ளிட்ட சில சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், இந்த வழக்கு விசாரணை, நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது போலீஸாரும் ஆஜராகினர்.

மூன்று மகள்களுடன் ஜெயராஜின் மனைவி செல்வராணி
மூன்று மகள்களுடன் ஜெயராஜின் மனைவி செல்வராணி

கொலைசெய்யப்பட்ட ஜெயராஜின் மனைவி செல்வராணியும் ஆஜராகி சுமார் 3 மணி நேரம் சாட்சியம் அளித்தார். கண்ணீர்மல்கப் பேசிய அவர், ``என்னோர கணவரும் மகன் பென்னிக்ஸும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடதான் இருந்தாங்க. போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போறதுக்கு முன்னால அவங்களைப் பார்த்தேன். அதுக்குப் பிறகு ரெண்டு பேரையும் சடலமாத்தான் பார்த்தேன். என்னோட கணவருக்கோ, மகனுக்கோ சாத்தான்குளம் போலீஸாருக்கும் எந்த முன்விரோதமும் கிடையாது. ரெண்டு பேரையும் போலீஸ்காரங்க ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போனதை உள்ளூர்ல இருக்குற சில உறவினர்கள் மூலமாத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

சாத்தான்குளம்: `நீதி கிடைக்கும்கிற நம்பிக்கையில இருக்கோம்!’ - சோகத்திலிருந்து மீளாத  குடும்பத்தினர்

அன்றிரவு என் மகன் வேறொருவரின் போனில் இருந்துதான் எங்கிட்ட பேசினான். `அம்மா... போலீஸ்காரங்க அப்பாவையும் என்னையும் ரொம்ப அடிக்கிறாங்க. எங்களால அடி தாங்க முடியலை’ன்னு சொல்லி அழுதான். அதுக்குப் பிறகு, அவனால தொடர்ந்து பேச முடியலை. `நடந்தது நடந்துவிட்டது. நீ வெள்ளாளன்விளையில உள்ள உன்னோட தம்பி வீட்டுக்குப் போயிடு’ன்னு என் கணவர் சொன்னார். அவராலயும் தொடர்ந்து பேச முடியலை” எனச் சொல்லி கதறி அழுதிருக்கிறார். இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. விசாரணையை முடித்து வெளியே வந்த செல்வராணி, ``நடந்த உண்மையைச் சொல்லியிருக்கேன். நீதி கிடைக்கும்னு நம்புறேன்” என்று மட்டும் சொன்னார். ஜெயராஜின் மூத்த மகளான பெர்சிஸ்ஸிடம் பேசினோம்.

நீதிமன்ற விசாரணையில் ஆஜரான கைதுசெய்யப்பட்ட போலீஸார்
நீதிமன்ற விசாரணையில் ஆஜரான கைதுசெய்யப்பட்ட போலீஸார்

``இந்த வழக்கைப் பொறுத்தவரையில், குற்றம் இழைத்தவர்கள் மேல்நிலைக் காவல் அதிகாரிகள். ஆனால், சாட்சிகள் கீழ்நிலைக் காவலர்கள் என்பதால், அதிகார பலம், அழுத்தத்தால் சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், இந்த வழக்கை விரைவாக விசாரணை செய்தால் எங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தோம். அதற்குப் பிறகு, `இந்த வழக்கு விசாரணயை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டது. ஆனா, கொரோனா ஊரடங்கால தள்ளிப்போன விசாரணை தற்போதுதான் வேகம் எடுத்துள்ளது. ஒரே குடும்பத்துல ரெண்டு உயிர்களை இழந்திருக்கோம். நீதிமன்றத்தை மட்டும்தான் முழுமையா நம்புறோம். எங்களுக்கான நீதி நிச்சயம் கிடைக்கும்கிற நம்பிக்கையில இருக்கோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு