Published:Updated:

சாத்தான்குளம்: `3 காவலர்களுக்கு சி.பி.ஐ காவல்!’ - கோவில்பட்டிக்கு அழைத்துச் செல்ல திட்டம்?

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

சாத்தான்குளம் வழக்கில் ஏற்கெனவே 5 போலீஸார் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மேலும் 3 போலீஸாரை 3 நாள் காவலில் எடுத்துள்ளனர் சி.பி.ஐ அதிகாரிகள்.

சாத்தான்குளம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி-யிலிருந்து தற்போது சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய்குமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு கடந்த 8 நாள்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் கைதான 10 போலீஸாரில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேரை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.

காவலில் எடுக்கப்பட்ட  3 காவலர்கள்
காவலில் எடுக்கப்பட்ட 3 காவலர்கள்

இந்நிலையில், 2வது கட்டமாக கைது செய்யப்பட்ட சிறப்பு உதவிஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமத்துரை, செல்லத்துரை, தாமஸ், வெயில் முத்து ஆகிய 5 பேரில் காவலர்கள் சாமத்துரை, செல்லத்துரை மற்றும் வெயில் முத்து ஆகிய மூன்று பேரை காவலில் எடுக்க மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று மனுத்தாக்கல் செய்தனர். 3 பேரையும் 3 நாள்கள் காவலில் எடுக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.

முன்னதாக, சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி-யால் கைப்பற்றப்பட்டு தூத்துக்குடி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கூடுதல் ஆவணங்கள், மதுரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இருந்து இதையடுத்து 3 பேருகும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், தொடர்ந்து மதுரையிலுள்ள சி.பி.ஐ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர் அதிகாரிகள். அங்கு அவர்களிடம் விசாரணை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில், காவலர்கள் சாமத்துரை, செல்லத்துரை ஆகியோர்தான் உயிரிழந்த தந்தை, மகனை சாத்தான்குளம் நீதிமன்றத்தில் இருந்து கோவில்பட்டி கிளைச்சிறைக்கு தனியார் வாகனத்தில் அழைத்துச் சென்றவர்கள்.

காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை
காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை

காவலர் வெயில்முத்து, காவல்நிலையத்திலுள்ள சிசிடிவி காட்சிப்பதிவுகளை பத்திரப்படுத்தாதது, ஆவணப்பதிவுகளை மறைத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர். இவர்கள் மூவரும் சாத்தான்குளம் காவல்நிலையம் மற்றும் கோவில்பட்டி கிளைச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்திட திட்டமிட்டுள்ளனர் சி.பி.ஐ அதிகாரிகள். இன்று இரவு அல்லது நாளை சாத்தான்குளம் அழைத்துச் செல்லப்படலாம் என்கிறார்கள். இரண்டாவதாகக் கைது செய்யப்பட்ட 5 பேரில் 3 பேர் மட்டும் காவலில் எடுக்கப்பட்டுள்ளதை நினைத்து கலங்கிப் போயுள்ளனர் சம்பந்தப்பட்ட காவலர்கள்.

கோவில்பட்டி

இந்த நிலையில் 2 சிபிஐ அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் இருவருக்கும் இறுதியாக சிகிச்சை அளித்தவர்களிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

முதலில் சிறையில் சிகிச்சை அளித்த அரசு மருத்துவர் வெங்கடேஷிடம் அரைமணி நேரம் விசாரணை நடத்தினர். சிறையில் இருந்தபோது தந்தை, மகனின் உடல்நிலை, காயங்கள் இருந்ததா, என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது.

சாத்தான்குளம்: `3 காவலர்களுக்கு  சி.பி.ஐ காவல்!’ - கோவில்பட்டிக்கு அழைத்துச் செல்ல திட்டம்?

இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர் பாலசுப்பிரமணியத்திடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மருத்துவமனைக்கு இருவரும் கொண்டு வரப்பட்டபோது அவர்களின் உடல் நிலை குறித்தும், பாதிப்பு குறித்தம், காயங்கள் பற்றியும், என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. காவல்துறையினர் தாக்குதல் குறித்து எதுவும் கூறினார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

இதையெடுத்து அன்று பணியில் இருந்த செவிலியர்கள் கண்ணகி, புகழ்வாசுகி, மீனா, மகேஷ் ஆகியோரிடமும் தனித்தனியாக சுமார் அரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதையெடுத்து 2 சிபிஐ அதிகாரிகளும் விசாரணை முடித்து கொண்டு மதுரைக்கு கிளம்பிச் சென்றனர்.

அடுத்த கட்டுரைக்கு