Published:Updated:

`தலைமை நீதிபதி கோகாய் முதல் நீதிபதி அப்துல் நசீர் வரை..!'- அயோத்தி வழக்கின் அரசியல்சாசன அமர்வு

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், 40 நாள்கள் தொடர் விசாரணைக்குப் பின்னர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.

அயோத்தி வழக்கின் அரசியல் சாசன அமர்வு
அயோத்தி வழக்கின் அரசியல் சாசன அமர்வு ( ANI )

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு, ராம் லல்லா, சன்னி வக்ஃபு வாரியம் மற்றும் நிர்மோகி அகோரா ஆகிய அமைப்புகள் உரிமை கோரின. இதுதொடர்பான வழக்கில், அந்த நிலத்தை உரிமைகோரிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்துவந்தது.

அயோத்தி
அயோத்தி
`இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்; அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்!'-உச்ச நீதிமன்றம் #AYODHYAVERDICT

இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்தது. ஆனால், சமரசத் தீர்வு ஏற்படாதநிலையில், வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தினசரி நடக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வில் நடைபெற்றது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் அக்டோபர் 18-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், அதற்கு 2 நாள்கள் முன்னதாகவே வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தன. இதையடுத்து, வழக்கு தீர்ப்புக்காகத் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தச் சூழலில், வழக்கின் தீர்ப்பு வேலைநாள் அல்லாத சனிக்கிழமை (நவம்பர் 9) வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. `அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும். ராமர் கோயில் கட்டுவதற்காக புதிய அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதத்தில் அமைக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பின் மூலம் அயோத்தி நிலம் தொடர்பான பிரச்னைக்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

அயோத்தி
அயோத்தி
தே.அசோக்குமார்

இந்தத் தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழங்கியது. அதில், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

`அயோத்தி தீர்ப்பு'- அடுத்து என்ன நடக்கும்?

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, ரஞ்சன் கோகாய் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி நியமிக்கப்பட்டார். அசாம் மாநிலத்தில், கடந்த 1954-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி பிறந்த இவர், கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி, கௌஹாத்தி உயர் நீதிமன்ற நீதிபதியானார்.

ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய்

2010-ம் ஆண்டு செப்டம்பரில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட இவர், அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகக் கடந்த 2011-ல் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், வரும் 17-ம் தேதியோடு ஓய்வுபெறுகிறார்.

நீதிபதி ஷரத் அர்விந்த் பாப்டே

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், கடந்த 1956-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பிறந்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ மற்றும் எல்.எல்.பி பட்டப்படிப்புகளை முடித்தார். மகாராஷ்டிரா பார் கவுன்சிலில், கடந்த 1978-ல் பதிவு செய்துகொண்டார். மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றிய அவர், 1998-ல் மூத்த வழக்கறிஞரானார்.

நீதிபதி எஸ்.ஏ.பாப்டே
நீதிபதி எஸ்.ஏ.பாப்டே
ANI

பின்னர், கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் 29-ல் மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகக் கடந்த 2012 அக்டோபர் 16-ம் தேதி பதவியேற்றுக்கொண்ட இவர், அடுத்த ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியானர். தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் ஓய்வுக்குப் பின்னர், உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே, வரும் 18-ம் தேதி பொறுப்பேற்க இருக்கிறார்.

அயோத்தி வழக்கின் தீர்ப்பை எழுதிய நீதிபதி யார்?

நீதிபதி அசோக் பூஷண்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜவுன்பூர் மாவட்டத்தில் 1956-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பிறந்த இவர், கலை அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பு முடித்தார். பின்னர், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் 1979-ல் சட்டப்படிப்பை நிறைவுசெய்த நீதிபதி அசோக் பூஷண், உத்தரப்பிரதேச பார் கவுன்சிலில் உறுப்பினராக 1979-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி பதிவு செய்துகொண்டார். அந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்படும் வரை சிவில் உள்ளிட்ட வழக்குகளில் இவர் ஆஜராகிவந்தார்.

நீதிபதி அசோக் பூஷண்
நீதிபதி அசோக் பூஷண்
ANI

பார்கவுன்சிலின் மூத்த துணைத் தலைவராகத் தேர்ந்தேடுக்கப்பட்ட இவர், 2001-ம் ஆண்டு ஏப்ரல் 24ல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2014-ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்ற நீதிபதியான இவர், அதே ஆண்டில் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். 2016-ம் ஆண்டு மே 13-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற இவர், வரும் 2021-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி பணி ஓய்வுபெறுகிறார்.

நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

டெல்லியின் புகழ்பெற்ற செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்த நீதிபதி சந்திரசூட், டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார். கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் வரை இவர் மத்திய அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிவந்தார்.

நீதிபதி டி.ஒய். சந்திரசூட்
நீதிபதி டி.ஒய். சந்திரசூட்
ANI

பின்னர், 2013-ம் ஆண்டு அக்டோபர் 31ல் அலகாபாத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், கடந்த 2016ல் உச்ச நீதிமன்ற நீதிபதியானார். மும்பை பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் ஒக்லஹாமா சட்டப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கௌரவ விரிவுரையாளராகவும் இவர் இருக்கிறார். இவர், வரும் 2024-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி ஓய்வுபெறுகிறார்.

அயோத்தி வழக்கு... உச்சநீதிமன்ற தீர்ப்பின் சாரம்சங்கள் என்னென்ன?

நீதிபதி எஸ்.அப்துல் நசீர்

1958-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பிறந்த நீதிபதி அப்துல் நசீர், கர்நாடகாவில் வழக்கறிஞராக 1983-ம் ஆண்டு பதிவு செய்துகொண்டார். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர், கடந்த 2003-ம் ஆண்டு மே மாதத்தில் கூடுதல் நீதிபதியானார்.

நீதிபதி எஸ்.அப்துல்  நசீர்
நீதிபதி எஸ்.அப்துல் நசீர்
ANI

பின்னர், 2004-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகப் பதவி உயர்வுபெற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதியாகக் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17ல் நியமிக்கப்பட்டார்.