Published:Updated:

`வன்முறையை நிறுத்துங்கள்; நாளை விசாரிக்கிறோம்!' - உச்ச நீதிமன்றம் கண்டிப்பு #JamiaProtest

போலீஸுக்கு எதிராகப் போராட்டம்
போலீஸுக்கு எதிராகப் போராட்டம் ( Twitter )

போராட்டம் என்கிற பெயரில் பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்துவதை அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை என்று டெல்லி வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்தநிலையில், பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த போலீஸார், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக 100 மாணவர்களை டெல்லி போலீஸார் கைது செய்தனர். டெல்லி காவல்துறை தலைமை அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தை அடுத்து, அதிகாலை 3.30 மணியளவில் மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

டெல்லிப் போராட்டம்
டெல்லிப் போராட்டம்
பல்கலைக்கழக வளாகத்தில்  நுழைந்தது ஏன்? - சர்ச்சையும் டெல்லி போலீஸின் விளக்கமும் #JamiaProtest

வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்கு வரும் ஜனவரி 5-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வெளியேறி வருகின்றனர். ஜாமியா மிலியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பாக தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் முறையிட்டார்.

மாணவர்களுக்கு எதிராக போலீஸார் வன்முறையில் ஈடுபடுவதாகக் கூறி சில ஆவணங்களையும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு முன்பாக அவர் முறையிட்டார். அப்போது பேசிய தலைமை நீதிபதி, வன்முறைச் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

அதற்கு வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், `வன்முறை திட்டமிடப்பட்டது' என்று பதிலளித்தார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த மற்றொரு வழக்கறிஞர் காலின் கான்சால்வே, பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் விடுதிகள் மற்றும் நூலகம் உள்ளிட்டவற்றில் புகுந்து போலீஸார் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். வன்முறைச் சம்பவங்கள் முடிவுக்கு வந்தால், உச்ச நீதிமன்றம் இதை நாளை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

`மாணவர்கள்மீது தாக்குதல்; போராட்டம்; வன்முறை!' - நள்ளிரவில் போர்க்களமான டெல்லி #JamiaProtest

இதைக் கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே,``எப்படி வன்முறை நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும். உரிமைகள் என்னென்ன என்பது குறித்த தெளிவும் எங்களுக்கு இருக்கிறது. ஆனால், இதுபோன்ற வன்முறைகள் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது அதுகுறித்து நாம் முடிவெடுக்க முடியாது. சிலர் வெளியில் கல்லெறிய முடிவெடுத்தார்கள் என்பதற்காக இந்த நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என இந்த நீதிமன்றத்தைக் கட்டாயப்படுத்த முடியாது.

ஜே.எம்.இ பல்கலைக்கழக மாணவர்கள்
ஜே.எம்.இ பல்கலைக்கழக மாணவர்கள்
Twitter

அவர்கள் மாணவர்கள் என்பதற்காக, சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள முடியாது. சூழல் அமைதியான பின்னரே, அதுகுறித்து விசாரித்து என்ன செய்ய வேண்டும் என்பதை அமைதியான நிலையில் முடிவெடுக்கலாம்'' என்றார்.

அதன்பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக நாளை (டிசம்பர் 17) விசாரிக்க ஒப்புக்கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, இருதரப்பிலுமே சில தவறுகள் நடந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு