பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் ஒரே தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்குப்பதிவுக்குச் சரியாக இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் தேர்தலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்த முயன்றுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக கர்நாடகத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் இரு முக்கிய சமூகங்களான லிங்காயத் (90 தொகுதிகளில் பெரும்பான்மை) , ஒக்கலிகா (80 தொகுதிகளில் பெரும்பான்மை) சமூகங்களுக்கு OBC சாதிப் பிரிவுகள் உருவாக்கப்படும் என்றும், ஒக்கலிகா சமூகத்துக்கு ‘2C’ எனவும், லிங்காயத் மக்களுக்கு ‘2D’ என்ற புதிய உட்பிரிவுகள் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

அதேபோல், கடந்த ஆண்டு முதல் அங்கு இஸ்லாமியர்களைக் குறிவைத்து பா.ஜ.க நடத்தும் அரசியலில், 30 ஆண்டுகளாக இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த 4 சதவிகித இட ஒதுக்கீட்டை ரத்துசெய்வதாக அறிவித்தது. குறிப்பாக இந்த 4 சதவிகித இட ஒதுக்கீடுதான் லிங்காயத், ஒக்கலிகா சமூகங்களுக்குப் புதிய உட்பிரிவுகள் மூலம் தலா 2 சதவிகிதமாக வழங்க பா.ஜ.க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து பசவராஜ் பொம்மை அரசின் இத்தகைய முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டபோது, 4 சதவிகித இட ஒதுக்கீட்டை ரத்துசெய்ததை அமல்படுத்த தற்காலிமாக நிறுத்திவைப்பதாக அரசு அறிவித்தது.
இன்னொரு பக்கம் இந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடந்த விசாரணையில், இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக எந்தவொரு முடிவையும் மே 9-ம் தேதி வரை அரசு அறிவிக்கக் கூடாது என உத்தரவிட்டு வழக்கைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான மே 9-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதுமட்டுமல்லாமல், மே 9-ம் தேதி வரை எந்தவொரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பையோ, பணிநியமன ஆணையோ பிறப்பிக்கக் கூடாது எனவும் அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக அரசும் இதை ஏற்றுக்கொண்டது.

ஏற்கெனவே பா.ஜ.க-வின் வேட்பாளர் பட்டியலில் எம்.எல்.ஏ-வாக இருக்கும் பலருக்கும் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டிருப்பது, நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியலில் தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட இளம் பா.ஜ.க தலைவர்களின் பெயர் இடம்பெறாமல் போனதுக்கு மத்தியில், உச்ச நீதிமன்றத்திடம் இத்தகைய உத்தரவு வந்திருப்பது பா.ஜ.க-வுக்குத் தேர்தலில் எத்தகைய விளைவைக் கொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். அதுமட்டுமல்லாமல், நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கூட, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்துசெய்தது சரியே என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.