Election bannerElection banner
Published:Updated:

சேலம்: நீண்ட போராட்டம்; முதன்முறையாக திருமலைகிரி கோயிலுக்குள் நடந்த பட்டியல் சமூகத் திருமணம்

கோயிலுக்குள் திருமணம்
கோயிலுக்குள் திருமணம் ( எம். விஜயகுமார் )

சேலம், திருமலைகிரி கோயிலில் பட்டியலின மக்கள் சாமி வழிபாடு செய்ய முடியாத நிலையில் இருந்தது. தற்போது கோயிலுக்குள் திருமணம் நடைபெற்றிருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகப் பார்க்கப்படுகிறது.

மிகுந்த சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, முதல் தலைமுறையாக பட்டியல் சமூக மக்கள் சேலம் திருமலைகிரி ஈஸ்வரன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டதோடு, முதன்முறையாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஜோடிக்கு அந்தக் கோயிலில் திருமணமும் நடந்திருப்பது, அனைத்துத் தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சேலம், திருமலைகிரி ஶ்ரீ சைல கிரீஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்திருக்க முடியாது. இந்த டிஜிட்டல் யுகத்திலும் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் வழிபாடு நடத்த இங்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டுமே கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்துவந்தனர். கோயிலைச் சுற்றியுள்ள பட்டியல் சமூக மக்கள் கோயிலுக்குள் அனுமதிப்படாமல் வெளியே நின்று சாமி தரிசனம் செய்யும் அவலம் பல ஆண்டுகளாக நீடித்துவந்தது.

திருமலைகிரி கோயில்
திருமலைகிரி கோயில்

கடந்த 2015-ம் ஆண்டு கோயில் கும்பபிஷேகத்தின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டரணி மாநிலச் செயலாளரும், பிரபல வழக்கறிஞருமான இமயவரம்பன் பட்டியல் சமூகத்தைத் திரட்டி கோயில் நுழைவுப் போராட்டத்தை மேற்கொண்டார். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. பதற்றம் நிலவியதால், அசம்பாவிதங்களைத் தடுக்க சேலம் காவல்துறையினர் கோயிலைப் பூட்டி சீல் வைத்ததோடு, கோயிலைச் சுற்றியுள்ள 21 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவும் பிறப்பித்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் முதன்மைக் கூடுதல் உரிமையியல் நீதிபதி பாக்கியம், கோயிலுக்குள் அனைத்து மக்களும் சென்று வழிபடலாம் என்றும், தனி நபர் யாரும் உரிமை கொண்டாடுவது இயற்கை நீதிக்கு புறம்பானது என்றும் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார். அதையடுத்து இரு தரப்பிலும் ஆர்.டி.ஓ முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சுமுக முடிவு எட்டப்பட்டது. அனைத்துத் தரப்பு மக்களும் கோயிலில் வழிபட அனுமதிப்பது என்று முடிவானது. இதையடுத்து இமயவரம்பன் தலைமையில் பட்டியல் சமூக மக்கள் கோயிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்தார்கள்.

இமயவரம்பன்
இமயவரம்பன்

ஆனாலும் பட்டியல் சமூக மக்கள் இந்தக் கோயிலில் திருமணம் செய்துகொள்ள எதிர்ப்பு இருந்துவந்தது. இந்தநிலையில், நேற்று இமயவரம்பன் முயற்சியால் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பிரபாகரன், கவிப்பிரியா இணையருக்கு கோயிலில் திருமணம் நடந்தது. இந்த நிகழ்வு அந்தப் பகுதி மக்களிடையே வரலாற்றுச் சிறப்புடையதாக பார்க்கப்பட்டது.

இது பற்றி இமயவரம்பன் கூறும்போது, ``திருமலைகிரி பிரச்னைக்காகப் பலகட்ட சட்டப் போராட்டங்களை செய்ததோடு அந்தப் பகுதியில் உள்ள வன்னியர் சமுதாய மக்களையும் சந்தித்துப் பேசி, புரியவைத்ததால் இந்தச் சமூக மாற்றம் நிகழ்ந்துள்ளது. தற்போது அனைவரும் சாதிப் பாகுபாடு இல்லாமல் தாயும் பிள்ளையுமாக இருக்கிறார்கள். இந்த மாற்றம் இந்தியா முழுவதும் வர வேண்டும்.

சொந்தங்களுடன்...
சொந்தங்களுடன்...

இன்னும் பட்டியலின மக்கள் தமிழகத்தில் பல கோயில்களுக்குள் சென்று சாமி வழிபாடு செய்ய முடியாத நிலை இருந்துவருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டம், குறிஞ்சான்குளம் காந்தாரியம்மன் கோயிலுக்குள் இந்த நிமிடம் வரை பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல முடியாத நிலை இருந்துவருகிறது. இவை அனைத்தும் மாற வேண்டும். மக்கள் அனைவரும் சமமானவர்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு