Published:Updated:

`பழைய உத்தரவுக்குத் தடையில்லை; 7 நீதிபதிகள் அமர்வு விசாரணை!' - சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்

சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

 சபரிமலை
சபரிமலை

திருவாங்கூர் தேவஸம் போர்டு நிர்வகித்துவரும் சபரிமலை ஐயப்பன் கோயிலில், 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, பல்வேறு கட்ட விசாரணைகளைத் தாண்டி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வுக்கு வந்துசேர்ந்தது. அவருடன் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா என 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இந்த வழக்கை தொடர்ந்து 8 நாள்களாக விசாரித்த அரசியல் சாசன அமர்வு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஒத்திவைத்திருந்தது. சபரிமலை வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.நச

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ``கோயில் வழிபாடுகளில் பெண்களுக்குப் பாகுபாடு காட்டக் கூடாது. பெண்கள், ஆண்களுக்கு நிகரானவர்கள். வழிபாடு நடத்த அவர்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். ஐயப்ப பக்தர்கள், குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்கள் என்று கூற முடியாது'' என்று குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த 4 நீதிபதிகள் ஒரேவிதமான தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், நீதிபதி இந்து மல்ஹோத்ரா மற்றும் அதிலிருந்து மாறுபட்டார். அவர், தனது தீர்ப்பில் மத நம்பிக்கைகளில் தலையிடுவது நாட்டின் மதச்சார்பின்மையைப் பாதிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

`எனக்கு மிரட்டல்கள் வந்தன’ - சபரிமலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஓப்பன் டாக்!

இதைத் தொடர்ந்து கேரளாவில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. சபரிமலைக் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று கூறி பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராடின. அதேபோல், சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களை வெளியேற்றக் கோரி சரண கோஷப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் சி.பி.எம் அரசு, சபரிமலை வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 56 மேல்முறையீட்டு மனுக்கள் உள்ளிட்ட 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட அரசியல் சாசன அமர்வு, தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி ஒத்திவைத்திருந்தது. தீர்ப்பு வழங்கும் அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயுடன், நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டிருக்கிறது. 5 நீதிபதிகளில் 3 பேர், `பெரிய அமர்வுக்கு மாற்றலாம்' என்று கருத்து தெரிவித்துள்ள நிலையில், மற்ற இருவர் அந்தக் கருத்திலிருந்து மாறுபட்டுள்ளனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர்.

சபரிமலை
சபரிமலை

ஆனால், நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஆர்.எஃப்.நாரிமன் ஆகியோர் இந்தக் கருத்தில் மாறுபட்டுள்ளனர். பெரும்பான்மை அடிப்படையில் சபரிமலை வழக்கு தொடர்பான மறுபரிசீலனை மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும். அதேநேரம், `சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உத்தரவு தொடரும்' என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.