Published:Updated:

`நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை குறையும்!' - 11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கின் தீர்ப்பு சொல்வது என்ன?

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

`நீதித்துறையின்மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவருவதற்கு இதுபோன்ற தீர்ப்புகளே காரணம்' என முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன் கூறுகிறார்.

கடந்த 2017-ம் ஆண்டு, எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற் பின்னர், அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, அ.தி.மு.க-விலிருந்து விலகி, தனி அணியாகச் செயல்பட்ட ஓ.பி.எஸ் தலைமையிலான 11 எம்.எல்.ஏ-க்கள், அ.தி.மு.க கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், அவர்கள்மீது அ.தி.மு.க-வும் தகுதிநீக்க நடவடிக்கை கோரவில்லை; சபாநாயகரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

அதற்குப் பிறகு காட்சிகள் மாறின. தினகரன் மற்றும் சசிகலா குடும்பம் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டது. ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் மீண்டும் இணைந்தனர். கட்சி, ஆட்சி இரண்டின் தலைமையும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. இந்த நிலையில், தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 18 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தகுதிநீக்கம் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதே சமயத்தில், அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் அணியினரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஒரு ஆளுங்கட்சி உறுப்பினரை தகுதிநீக்கம் செய்ய, எதிர்க்கட்சி வழக்கு தொடர்ந்த விசித்திரமான சம்பவம் இது. 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கைப் போலவும் 11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. இந்தநிலையில், தி.மு.க-வின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சபாநாயகர்
சபாநாயகர்

அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. கடந்த விசாரணையின்போது, ``சபாநாயகர் ஏன் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை, மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று தகுதிநீக்க மனுக்கள் தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் வழங்கியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் எனக் கூறி, வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்துவைத்தது. சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று கூறியதோடு, அவருக்கு கால அவகாசம் நிர்ணயிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

`பேருந்துகளில் சிசிடிவி முதல் முத்திரைத்தாள் வரி குறைப்பு வரை!'- தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் #TNBudget2020

இதுகுறித்து தி.மு.க எம்.பி ஆர்.எஸ். பாரதி கூறுகையில், ``தகுதிநீக்கம் மீதான நடவடிக்கையைத் தொடங்குவதற்கே உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் சபாநாயகர் செயல்பட்டுள்ளார். தற்போது, அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. சபாநாயகர் அதை எவ்வாறு செயல்படுத்துகிறார் என்பதைப் பொறுத்து எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். மணிப்பூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்” என்றார்.

ஆர்.எஸ். பாரதி - அரிபரந்தாமன்
ஆர்.எஸ். பாரதி - அரிபரந்தாமன்

முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் இந்தத் தீர்ப்பு பற்றி பேசுகையில், ``இதே உச்ச நீதிமன்றத்தின் ஆர்.எஃப் நாரிமன் அமர்வு சில காலத்துக்கு முன் வழங்கிய ஒரு தீர்ப்பில், `சபாநாயகர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவராகவே இருப்பதால், உறுப்பினர்கள் தகுதிநீக்கம் தொடர்பாக முடிவெடுப்பதில் பல சமயங்களில் அவர் பாரபட்சமாக நடந்துகொள்கிறார். அதனால் சபாநாயகருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தகுதிநீக்கம் தொடர்பாகத் தீர்மானிக்க, தனியாக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது.

சபாநாயகர், முன்னரே நடவடிக்கை எடுக்கவில்லை என்றுதான் உச்ச நீதிமன்றம் வரை வர நேர்ந்தது. தற்போது, மீண்டும் அவரிடமே பொறுப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. ஏற்கெனவே, மூன்று ஆண்டுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது சபாநாயகருக்கு காலக்கெடு வழங்காமல் இருப்பது புரியவில்லை. நீதித்துறையின்மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவருவதற்கு இதுபோன்ற தீர்ப்புகளே காரணம்” என்றார்.

வைகைச் செல்வன்
வைகைச் செல்வன்

அ.தி.மு.க-வைச் சேர்ந்த வைகைச் செல்வன் கூறுகையில், ``சட்டப்பேரவைக்குள் எடுக்கப்படுகிற நடவடிக்கைகளுக்கும் சபாநாயகரே பொறுப்பு என்பதை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் சொல்கிறது. அதைத்தான் உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. தகுதிநீக்கம் தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார். அதற்கு முன்பாக எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு