Published:Updated:

`குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்குத் தடையில்லை; மத்திய அரசுக்கு நோட்டீஸ்!'-உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் ( Twitter )

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்த மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அஸ்ஸாம், திரிபுரா, நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் தொடங்கி , மேற்குவங்கம், டெல்லி எனப் போராட்டம் நடந்தது. தமிழகத்திலும் சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி உள்ளிட்டவற்றில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக டெல்லி ஜாமிய மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தை அடுத்து, வளாகத்துக்குள் நுழைந்து போலீஸார் தாக்கிய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

டெல்லிப் போராட்டம்
டெல்லிப் போராட்டம்

இந்தநிலையில், குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் உள்ளிட்ட 59 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

குடியுரிமை சட்டத்திருத்தம்; வலுக்கும் போராட்டங்கள்.. வெவ்வேறு காரணங்கள்! என்ன நடக்கிறது? #CAAProtest

மத அடிப்படையிலான இந்தச் சட்டத் திருத்தம், அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவான மதச்சார்பின்மைக்கு எதிராக இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்தச் சட்டத்தில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படாமல் இருப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும் வாதிடப்பட்டது. புதிய சட்டத் திருத்தன்கீழ், இலங்கைத் தமிழர்கள், பாகிஸ்தானின் அகமதியார்கள், மியான்மரின் ரோஹிங்கியாக்கள் போன்றோர் கொண்டுவரப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் கடந்த 1985ம் ஆண்டு போடப்பட்ட அஸ்ஸாம் ஒப்பந்தத்தை மீறும் செயல் என அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து வழக்குத் தொடர்ந்தவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. `கடந்த 1971ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதிக்குப் பின் வங்கதேசத்திலிருந்து அஸ்ஸாமில் குடியேறியவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகவே கருதப்பட வேண்டும். அவர்கள், மத வேறுபாடின்றி வெளியேற்றப்பட வேண்டும்' என்பதே அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் அடிநாதம்.

அஸ்ஸாம் மாணவர்கள் அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், `பாஸ்போர்ட் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் ஏதுமின்றி 25.03.1971-க்குப் பின் இந்தியாவுக்குள் நுழைந்த இஸ்லாமியர்கள் அல்லாதோர் இந்தியக் குடியுரிமை பெற இந்தப் புதிய சட்டத் திருத்தம் வழிவகுக்கும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் போராட்டம்
அஸ்ஸாம் போராட்டம்
AP

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்துவிட்டது. மேலும், இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜனவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அடுத்த கட்டுரைக்கு