Published:Updated:

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு; ஜனவரி 13-ம் தேதி முதல் விசாரணை! - வேகமெடுக்கும் சபரிமலை வழக்கு

சபரிமலையில், அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க இருக்கிறது.

சபரிமலை
சபரிமலை

திருவாங்கூர் தேவஸம் போர்டு நிர்வகித்துவரும் சபரிமலை ஐயப்பன் கோயிலில், 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, பல்வேறு கட்ட விசாரணைகளைத் தாண்டி, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வுக்கு, கடந்த 2018ல் வந்துசேர்ந்தது. அவருடன் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா என 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை முன்னர் விசாரித்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Twitter
`சபரிமலை பயணத்தை ஏன் ரத்து செய்தார் ராம்நாத் கோவிந்த்?'- `காரணம் அறியாத' கேரள அரசு!

இந்த வழக்கை 8 நாள்களாகத் தொடர்ந்து விசாரித்த அரசியல் சாசன அமர்வு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஒத்திவைத்திருந்தது. சபரிமலை வழக்கில், கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. சபரிமலையில், அனைத்து வயதுடைய பெண்களையும் வழிபட அனுமதித்து உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து கேரளாவில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. சபரிமலைக் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று கூறி, பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராடின. அதேநேரம், பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதாக கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசு அறிவித்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் இந்த முடிவிலிருந்து கேரள அரசு பின்வாங்கியது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 56 மேல்முறையீட்டு மனுக்கள் உள்ளிட்ட 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. விசாரணையைப் பெரிய அமர்வுக்கு மாற்றுவதாகக் கடந்த நவம்பர் 14-ம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

சபரிமலை
சபரிமலை

இந்த நிலையில், சபரிமலை தொடர்பான வழக்குகளைத் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தவிர, இந்த அமர்வில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அஷோக் பூஷன், எல்.நாகேஷ்வர ராவ், மோகன் எம். சந்தானகௌடர், எஸ்.அப்துல் நசீர், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்ய கந்த் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்த வழக்கின் விசாரணை, வரும் 13-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.