Published:Updated:

49 பேர் மீதான தேசத்துரோக வழக்கு: மீண்டும் மனுத்தாக்கல் செய்திருக்கும் ஓஜா- சட்டம் சொல்வது என்ன?

தேசத்துரோக வழக்கு
தேசத்துரோக வழக்கு ( Vikatan Cartoon )

வழக்கறிஞர் ஓஜா, போலீஸ் அறிக்கையை ஏற்காமல் எதிர்ப்பு மனு சமர்ப்பித்திருக்கிறார், அரசு அழுத்தம் கொடுத்ததன் காரணமாக போலீஸார் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்று அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

‘கேள்வி கேட்டால் தேசத்துரோகமா?’ என்ற ஒற்றைக் கேள்வியோடு தேசமே சென்ற வாரம் கொதித்தெழுந்தது. கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி பிரதமர் மோடி அவர்களுக்கு எழுதப்பட்ட திறந்த மடலில், `ஜெய் ஸ்ரீ ராம்' என்ற முழக்கம் வன்முறையின் ஆயுதமாகக் கையாளப்பட்டு, சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீதான கூட்டுத் தாக்குதல் அதிகரித்துவரும் இந்தியாவில், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டத்தால் அளிக்கப்பட்ட வாழ்வுரிமையை நிலைநாட்ட கீழ்க்கண்ட வேண்டுதல்களைச் சமர்ப்பிக்கிறோம்" என்ற வரிகளோடு, பல்வேறு துறைகளைச் சார்ந்த 49 இந்தியப் பிரபலங்களின் கையொப்பமும் இருந்தது.

சட்டம்
சட்டம்
பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதம்! - 
மணிரத்னம் உட்பட 49 பேர் மீது பாய்ந்த தேசத்துரோக வழக்கு

மக்கள் ஒருநாள் செய்தியாக அதைக் கடந்துவிட, யாரும் அதைப் பிரச்னையாக்கவில்லை. ஆனால், பீகாரில் ஒருவர் மட்டும் இதை லேசில் விடுவதாக இல்லை, பிரதமருக்குக் கடிதம் எழுதிய பிரபலங்கள், நாட்டினுடைய நற்பெயரைக் கெடுப்பதாகவும், சிறப்பாகச் செயல்படும் பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளைக் குறைத்து மதிப்பிடுவதாகவும், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும் கூறி அவர்கள் மீது தேசத்துரோகக் குற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர் ஆகஸ்ட் மாதம் பீகார் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். அதைத் தொடர்ந்து, நீதிபதி அந்த மனுவை ஏற்று போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தியதையும், அதன் பேரில் அந்த பிரபலங்கள் மீது தேசத்துரோகக் குற்றம் செய்ததாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டதையும், இரு தினங்களுக்கு முன் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையும் நாம் அறிவோம்.

ஆனால், இவையெல்லாம் எப்படி நடந்தது, இவ்வாறெல்லாம் செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறதா, இதில் நீதிபதியின் அதிகாரம் என்ன, போலீஸாரின் அதிகாரம் என்ன... சட்ட ரீதியாக விளக்கமளிக்கிறார் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மும்தாஜ் சூர்யா.

"சாதாரணமாக ஒரு புகார் மனுவை நாம் காவல் நிலையத்தில் கொடுக்கலாம், அவ்வாறு இருப்பின் குற்றவியல் நடைமுறை சட்டம் 154-ன் படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும், அல்லது நேரடியாகக் குற்றவியல் நடைமுறை சட்டம் 200-ன் படி குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் கொடுக்கலாம், அதன்படிதான் வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா, முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்திருக்கிறார், இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட பிறகு நீதிபதி கீழ்க்கண்ட வழிகளில் இந்த வழக்கை நகர்த்தலாம், ஒன்று... இந்த புகார் மனுவின் உண்மைத்தன்மையை அறிந்து அதை ஏற்கவோ, தள்ளுபடி செய்யவோ முடிவு எடுக்கலாம். இரண்டு, அப்படி ஏற்கும்பட்சத்தில் அந்தப் புகார் மனு மீதான விசாரணையை (Enquiry) தானே நடத்த முன்வந்து, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அழைப்பாணை (Summons) அனுப்பலாம், அல்லது இந்தப் புகார் மனுவில் உள்ளவை குறித்து மேற்கொண்டு விசாரிக்க, வழக்கைப் போலீஸுக்குப் பரிந்துரை செய்யலாம். கடைசியாகச் சொன்னதைத்தான் இந்த வழக்கில் செய்திருக்கிறார் நீதிபதி சூர்யகாந்த் திவாரி. இது வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் நீதிமன்ற நடைமுறை.

மும்தாஜ் சூர்யா
மும்தாஜ் சூர்யா
பிரியங்கா.ப

அடுத்ததாக, நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த வழக்கு குறித்து புலன் விசாரணை (Investigate) செய்யும் கடமை போலீஸாருக்கு உண்டு. போலீஸார் ஒரு வழக்கு பிடியாணையின்றி கைது செய்யக்கூடிய (Cognizable Offence) குற்ற வழக்காக இருப்பின், நிச்சயம் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து அதற்குப் பிறகுதான் விசாரணை செய்ய முடியும், அதைத்தான் சதார் காவல் நிலையத்தில் செய்திருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து தற்போது இந்த வழக்கு பதியப்பட்டதற்கான நோக்கம் பிழை எனவும், இந்த வழக்கு முகாந்திரமற்றது எனக் கூறி வழக்கை ரத்து செய்துள்ளது காவல்துறை. ஒரு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிந்து அதன் மீதான விசாரணையைத் தொடங்கிய பின் காவல்துறை அந்த வழக்கின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து இத்தகைய முடிவை எடுக்கலாம் என்பதே சட்டம். காவல்துறை இந்த முடிவுக்கு வந்ததும், புகார் மனு குறித்து விசாரணை செய்த காவல்துறை அதிகாரி, நீதிமன்றத்தில் தன் விசாரணை முடிவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அதை ஏற்று நீதிபதி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்வார். சில சமயங்களில் புகார் அளித்தவர் தனக்கு போலீஸ் விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி, போலீஸ் அறிக்கைக்கு எதிராக எதிர்ப்பு மனு (Protest Petition) தாக்கல் செய்யலாம். அதையும் ஒரு புகார் மனுவாகப் பாவித்து நீதிபதி தன் அதிகாரத்துக்கு உட்பட்டு அதை ஏற்கவோ, தள்ளுபடி செய்யவோ முடிவு எடுக்கலாம்" என்றார்.

வழக்கறிஞர் ஓஜா, போலீஸ் அறிக்கையை ஏற்காமல் எதிர்ப்பு மனு சமர்ப்பித்திருக்கிறார், அரசு அழுத்தம் கொடுத்ததன் காரணமாக போலீஸார் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்று அவர் மனுவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓஜா அளித்த முதல் புகார் மனுவை ஏற்றுக்கொண்டு, நீதிபதி அதை போலீஸ் விசாரணைக்கு அனுப்பியதைப் பற்றி தன்னுடைய கருத்தைப் பகிர்ந்துகொண்ட முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், "இந்த வழக்கில் நீதிபதி அதன் விளைவுகளை யோசியாமல் அதற்கு அனுமதி கொடுத்திருக்கலாம்" என்று கூறினார்.

வழக்கறிஞர் ஓஜா
வழக்கறிஞர் ஓஜா
theprint.in
`விளம்பரத்துக்கு மனு..!'- மணிரத்னம் உள்ளிட்ட 49 பேருக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற முடிவு

நீதிமன்றங்களில் ஒரு வழக்கின் முகாந்திரம் முழுவதுமாக அலசப்பட்டு, நிலையான குறிப்பிடத்தக்க முகாந்திரம் இல்லாத புகார் மனுக்களை நீதிபதிகளே தள்ளுபடி செய்வது உண்டு. ஆனால், தேங்கி நிற்கும் பல்லாயிரக்கணக்கான வழக்குகளுக்கு மத்தியில், ஒவ்வொரு புகார் மனுவையும் முழுவதுமாக அலசி முடிவெடுக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் இல்லாத காரணத்தால், பெரும்பாலும் புகார் மனுக்கள் `Refer to police' என்று போலீஸார் விசாரணைக்கு அனுப்பப்படுவது இன்று நடைமுறையாகிவிட்டது என்பதே நிஜம். இந்தப் புகார் மனுவில் அப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. எனினும், சட்டம் தன் கடமையைத்தான் செய்கிறது!

அடுத்த கட்டுரைக்கு