
- நீதியரசி பிரபா ஸ்ரீதேவன்
சென்னை உயர் நீதிமன்றத்தில் 2000-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை நீதியரசியாக இருந்தவர். ஆங்கில இலக்கியம் படித்தவர், அதன் பின் திருமணம், குழந்தைகள், குடும்ப பொறுப்புகளில் பிசியானார். இவரின் கணவர் ஸ்ரீதேவன், பிரபல வழக்கறிஞராக இருந்தவர். திருமணமாகி பல வருடங்கள் கழித்து, கணவர் சொன்னதன் பேரில் சட்டம் படிக்க முடிவெடுத்து வழக்கறிஞரானார் பிரபா.
பரபரப்பான வழக்கறிஞராக இருந்து, நீதிபதி பதவிக்கு உயர்ந்த பிரபா ஸ்ரீதேவன், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஐந்தாவது பெண் நீதிபதி என்ற பெருமைக்குரியவர். பதவியில் இருந்த பத்தாண்டுகளில் தான் சந்தித்த வழக்குகளின் சுவாரஸ்யங்களையும் சவால்களையும் இந்தத் தொடரில் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்.
‘`உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாவதற்கு இரண்டு வழிகள் உண்டு. வழக்கறிஞராக இருந்து, நீதிபதியாவது ஒரு வழி. மாவட்ட நீதிபதியாக இருந்து பிறகு உயர் நீதிமன்ற நீதிபதியாவது இன்னொரு வழி. அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பிராக்டிஸ் செய்து நீதிபதியான முதல் பெண் நான்தான்.
பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்கு இருப்பது ஏன் என்ற கேள்வி பலருக்கும் உண்டு. அதற்கு சரித்திர ரீதியான, சமூக ரீதியாக காரணங் களைச் சொல்லலாம். 2009-ம் வருடம் கொரியாவில் நடந்த கருத்தரங்குக்கு நான் சென்றிருந்தேன். இங்கிலாந்து உயர் நீதிமன்றத் தின் முதல் பெண் தலைமை நீதிபதியான ப்ரெண்டா ஹேல் சொன்னதை இங்கே நினைவுகூர விரும்புகிறேன். ‘பல வருடங்களாக இங்கே நீதிபதிகளாக இருந்தவர்கள் ‘ஆங்லிகன் சர்ச்’சைச் சேர்ந்தவர்களாக இருந்திருக் கிறார்கள்.வெள்ளைக்காரர்களாகவும், ஆண் களாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் சாமானியருக்கு அது என் நீதிமன்றம், அவர் எனக்கான நீதிபதி என்று எப்படித் தோன்றும்..? எனவே நீதிபதிகளில் எல்லா தரப்பினரின் பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும்’ என்று சொன்னார். அவரின் வார்த்தைகள் எந்த நாட்டுக்கும் எந்த கோர்ட்டுக்கும் பொருந்தும்.
நான் நீதிபதியாகப் பதவியேற்றது 2000-ம் ஆண்டு, மார்ச் 2-ம் தேதி. பதவியேற்றபோது எனக்குள் பயமும் ஏகப்பட்ட கேள்விகளும் சந்தேகங்களும் இருந்தன. நான் என் கடமை யைச் சரியாகச் செய்வேனா, ஒருவேளை ஏதேனும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியாமல் போனால் என்ன செய்வது என்ற கேள்வி பிரதானமாக இருந்தது. அதைவிட முக்கியமாக இன்னொரு மனிதனின் வாழ்க்கை என் கையில் இருக்கப்போகிறது என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு என்ற எண்ணம்... அந்த பயத்தையும் பதற்றத்தை யும் போக்கியது அந்த உறுதிமொழி.
நீதிபதியாகப் பதவியேற்கும்போது ஒவ்வொருவரும் ஓர் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.
‘சட்ட முறையில் அமைவுற்ற இந்திய அரசமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் பற்றும் பூண்டிருப்பேன்.
இந்தியாவும் இறையாண்மையும் ஒருமைப்பாடும் நிலைபெறுமாறு செய்வேன்.
அச்சம் கண்ணோட்டமின்றியும் விருப்பு வெறுப்பு இன்றியும் முறையாகவும் அகத்தூய்மையுடனும் என் முழு வினைத்திறனும் அறிவுத்திறனும் தேர்வுத்திறனும் கொண்டு என் கடமையை ஆற்றுவேன்.
அரசமைப்பு முறையையும் சட்ட நெறிகளையும் நன்றாக நிலைபெறச் செய்வேன் என்று ஆணை மொழி கிறேன்’ என்பதே அந்த உறுதிமொழி.
குழந்தைகள் பேசும்போது ‘ப்ராமிஸா...?’ என்று கேட்பதைப் பார்க்கலாம். ‘ஆமாம்... ப்ராமிஸ்...’ என்று பதிலுக்குச் சொல்லும்போது ஒருவித நம்பிக்கை ஏற்படு மல்லவா..? அப்படித்தான் இந்த ஆணையையும் நான் பார்த் தேன்.
புதிதாக நீதிபதியாகப் பதவியேற்பவர்கள், அவர்களைவிட சீனியர் நீதிபதிகளுடன் அமர வேண்டும். அதற்கு ‘டிவிஷன் பெஞ்ச்’ என்று பெயர். எனக்கு சீனியர் நீதிபதியாக வந்தவர் நீதியரசர் ஜெயசிம்ம பாபு. கர்நாடகாவில் இருந்து மாற்றலாகி வந்திருந்தவர். அசாத்திய அறிவுத்திறன் கொண் டவர். அவர் நீதிமன்றத்தை நடத்தும் விதமே அவ்வளவு மரியாதைக்குரியதாக இருக்கும். அப்படி அவருடன் பணிபுரிந்தபோது நான் சந்தித்த வழக்கு ஒன்றை பற்றி பேசுகிறேன்.
காப்புரிமை தொடர்பான வழக்கு அது. மாவரைக்கும் கிரைண்டர் தொடர்பான வழக்கு. ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த கிரைண்டரில் இரண்டு கற்கள் சுழலும். அதைச் சுற்றியுள்ள டிரம் போன்ற பாகமும் சுழலும். அதனுள் நாம் இடுகின்ற அரிசியும் பருப்பும் அரைபட்டு மாவாகும். அந்த நிலையில் இன்னொரு தயாரிப்பாளர், சில மாற் றங்களுடன் ஒரு கிரைண்டரை அறிமுகப்படுத்தினார். அதாவது ஏற்கெனவே இருக்கும் இரண்டு கற்களுடன், மூன்றாவதாக முக்கோணமாக ஒரு கல் சேர்த்து, அதை தன் கண்டுபிடிப்பு என்றும் சொன்னார்.
காப்புரிமை கோர மூன்று விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று புதுமை... இதுவரை இல்லாத புதுமையாக இருக்க வேண்டும். அடுத்தது, இன்வென்ட்டிவ் ஸ்டெப்... அதாவது ஏற்கெனவே இருப்பதைத் தாண்டிய புதிய கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும். மூன்றாவது, அது விற்பனைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். மூன்றாவது கல்லைச் சேர்த்து அதைத் தன் கண்டுபிடிப்பு என்று சொல்லிக்கொண்டு வந்தவருக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர், ‘இதெல்லாம் ஒரு கண்டுபிடிப்பே இல்லை... ஒரு பெண்கூட இதைச் செய்துவிட முடியும்...’ என்றார். எனக்கு கோபம் வந்தாலும் அப்போதுதான் நீதிபதியாகப் பதவியேற்றிருந்த காரணத்தால் அதை வெளிப்படுத்துவதில் தயக்கம்.
நீதிபதிகளுக்குள் ஒரு வழக்கம் உண்டு. ஜூனியர் நீதிபதியாக உள்ளவர், சீனியர் நீதிபதியை அவரது அறைக்குச் சென்று அழைத்துக்கொண்டு நீதிமன்றத்துக்கு வர வேண்டும். நீதிமன்ற நேரம் முடிந்ததும் மீண்டும் அவரை அவரது அறையில் விட்டு விட்டுதான் ஜூனியர் தன் அறைக்குத் திரும்ப வேண்டும். அந்த வழக்கு நடந்த அன்றைய தினம் நான் அப்படி என் சீனியர் நீதிபதியுடன் போனபோது, அவரிடம் என் ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தினேன்.
‘வாதாடிய வழக்கறிஞர், ஒரு பெண்கூட கண்டுபிடித்துவிடுவார் என்று சொன்னாரே.... ஒரு முட்டாள்கூட கண்டுபிடித்துவிட முடியும் என்ற அர்த்தத்தில்... அப்படியானால் பெண்கள் எல்லாம் முட்டாள்களா’ என்று கேட்டேன்.
‘நீங்கள் அதை நீதிமன்றத்திலேயே கேட்டிருக்கலாமே...’ என்றார் சீனியர்.
‘எனக்கு அதற்கான தைரியம் இல்லை...’ என்றேன்.
வாதாடிய வழக்கறிஞர் வேண்டுமென்றே கேட்டார் என்றோ, உள் அர்த்தத்துடன் சொன்னார் என்றோ நான் சொல்லவில்லை. ஆனாலும் ‘பொம்பளைதானே...’ என்ற எண்ணம் பல ஆண்கள் மனத்திலும் அவர் களையும் அறியாமல் ஆழப் பதிந்திருக்கிறது. அந்த உணர்வை பல வழக்குகளில், பல இடங்களில் சக வழக்கறிஞர்களும் சக நீதிபதி களுமே வெளிப்படுத்திப் பார்த்திருக்கிறேன்.
ஆண்களைவிட, அறிவுத்திறனிலோ, வேறு எந்தத் திறனிலோ பெண்கள் குறைந்தவர்கள் அல்லர். ஆண்டாண்டுக் காலமாக பெண் களை படிக்கவே அனுமதிக்கவில்லை. படிக்க அனுமதி கிடைத்த பிறகு வேலைக்குச் செல்வதற்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அதைப் போராடிப் பெற பல வருடங்கள் ஆயின. இப்படி ஒவ்வொரு தடையையும் தாண்டிதான் ஒவ்வொரு பெண்ணும் உயரம் தொட வேண்டியிருக்கிறது.
அது சரி... கிரைண்டர் காப்புரிமைக்கு சண்டை போட்டுக்கொண்ட வழக்கு என்ன ஆனது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். சண்டைபோட்டுக்கொண்டவர்கள் சமா தானமாகி, சமரசம் செய்துகொண்டு போய் விட்டார்கள். ஆனால், பெண் என்ற காரணத் துக்காக எந்த வழக்கிலும் எப்போதும் யாரிடமும் நான் சமரசம் செய்ததில்லை.
- வழக்காடுவோம்...