மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சில தீர்ப்புகள்... சில எண்ணங்கள்... - 2 - தூக்குத்தண்டனை Vs ஆயுள்தண்டனை... முடிவல்ல... ஆரம்பம்!

தூக்குத்தண்டனை Vs ஆயுள்தண்டனை
பிரீமியம் ஸ்டோரி
News
தூக்குத்தண்டனை Vs ஆயுள்தண்டனை

அனுபவத் தொடர் - நீதியரசி பிரபா ஸ்ரீதேவன்

``வழக்கறிஞராக பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்தபோது நான் என் கணவரின் அலுவலகத்தில்தான் சேர்ந்தேன். அவரது அலுவலகத்தில் சிவில் வழக்குகளும் அரசமைப்பு வழக்கு களும்தான் அதிகம் வரும். கிரிமினல் வழக்குகள் பெரும் பாலும் வராது. அதனால் எனக்கும் அத்தகைய வழக்குகளில் வாதாடிய அனுபவம் இல்லை. நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகுதான் நான் முதல் கிரிமினல் வழக்கையே எதிர் கொண்டேன். தூக்குத்தண்டனையின் மீதான தீர்ப்பு குறித்த வழக்கு அது. நீதிமன்றத்தில் அதை ‘ரெஃபர்டு ட்ரையல்’ (Referred trial) என்று குறிப்பிடுவோம். அந்த வழக்கில் டிவிஷன் பெஞ்ச்சில் என்னைவிட சீனியர் நீதிபதி சிர்புர்கரும் நானும் இருந்தோம். நாக்பூரிலிருந்து மாற்றலாகி வந்திருந்த அவருக்கு கிரிமினல் வழக்குகளைக் கையாண்டதில் நீண்ட அனுபவம் உண்டு.

நீதியரசி பிரபா ஸ்ரீதேவன்
நீதியரசி பிரபா ஸ்ரீதேவன்

உலகையே உலுக்கிய டெல்லி, நிர்பயா வழக்கை யாரும் மறக்க முடியாது. நான் குறிப்பிடப் போகும் இந்த வழக்குக்கும் நிர்பயா வழக்குக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. அருப்புக் கோட்டையைச் சேர்ந்த அந்தப் பெண், படிக்கச் சென்றபோது, வழியில் மூன்று பேரால் வன்புணர்வுக்கு ஆளாகி, கொலையும் செய்யப்பட்டார். அந்த வழக்கு அப்போது மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது. வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மூவருக்கும் நீதிமன்றம் தூக்குத்தண்டனை அறிவித்தது. அதற்கு, மேல் முறையீடும் செய்யப்பட்டது.

நம்முடைய சட்டப்படி, ஒருவருக்கு தூக்குத் தண்டனை கொடுப்பதற்கு முன் செஷன்ஸ் நீதிபதி, `நாங்கள் தூக்குத்தண்டனை கொடுக்க நினைக்கிறோம். அதை ஏன் கொடுக்கக்கூடாது என்பதற்கு நீங்கள் உங்கள் தரப்பு காரணங் களைச் சொல்லலாம்’ என்று கேட்பார். அந்தக் கேள்வியை மாவட்ட நீதிபதி கேட்டே ஆக வேண்டும் என்பது விதி. குறிப்பிட்ட இந்த வழக்கில் மாவட்ட நீதிபதி, அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை.

நீதிபதி சிர்புர்கர், ‘கேள்வி கேட்கப்படாத அந்தக் குறையை நாம் நிவர்த்தி செய்து விடலாம். ஏனென்றால் அப்பீல் என்பது அந்த வழக்கின் தொடர்ச்சிதான்’ என்றார். விசார ணையின்போது, சம்பந்தப்பட்ட வழக்கில் பிரேதப் பரிசோதனை (Inquest) செய்யப்பட்ட தைப் பார்க்க வேண்டும் என்றார். பிரேதப் பரிசோதனை வீடியோவாக பதிவு செய்யப்பட் டிருந்தது. புழுவெல்லாம் நெளிந்த நிலையில் அந்தப் பெண்ணின் உடலைக் காட்டிய அந்த வீடியோவை பார்க்கவே கடினமாக இருந்தது. பிறகு வழக்கு குறித்து விவாதிக்கப்பட்டது.

கீழ் கோர்ட்டில் விதிக்கப்பட்ட தண்டனையை நாங்கள் உறுதி செய்யப் போகிறோமா அல்லது அதை ஆயுள் தண்டனையாக மாற்றப் போகிறோமா என்று விவா திக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட மூவரும் வந்தார்கள். அவர்களில் ஒருவர் இந்து, ஒருவர் கிறிஸ்தவர், ஒருவர் இஸ்லாமியர் என்பது குறிப் பிடத்தக்கது. நண்பர்களான அவர்கள் மூவரும், ‘வயதான பெற்றோரைப் பார்த்துக்கொள்ள வேண்டும்’, ‘இப்போதுதான் திருமணம் முடிந் திருக்கிறது’ என ஆளுக்கு ஒரு காரணம் சொல்லி அழுதார்கள். அந்த நிலையில் எனக்குள் ஒரு பயம்... குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை உறுதிசெய்வதாக நீதிபதி சிர்புர்கர் எழுதிவிட்டால், ‘ஆமாம், நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன்’ என்று சொல்ல வேண்டுமா என்ற பயம்... ஒருவரது உயிரைப் பறிக்கும் தீர்ப்பை நான் எப்படிக் கொடுக்க முடியும் என்ற பயம். ஆனாலும் நம் குற்றவியல் சட்டத்தில் அதற்கு இடம் இருக் கிறதே... நீதிபதியாகப் பதவியேற்கும்போது ‘சட்டத்தை நிலைநாட்டுவேன்’ என்றுதானே உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். அப்படி யிருக்க, நான் இப்படிப்பட்ட தண்டனையைக் கொடுக்க மாட்டேன், எனக்குப் பிடிக்கவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாதே... நானும் நீதிபதியும் கலந்து பேசினோம்.

இதுபோன்ற வழக்குகளில் கண்களால் பார்த்த சாட்சியங்கள் பெரும்பாலும் இருக் காது. சம்பந்தப்பட்ட நபர்கள் போவதும் வருவதும், கடைசியாக பிரேதம் ஓரிடத்தில் கிடப்பதுமாக சில காட்சிகள்தான் சாட்சியங் களாகக் கிடைக்கும். அவற்றை ‘சூழ்நிலை சாட்சியங்கள்’ (Circumstantial evidences) என்று சொல்வோம். நம்மூரைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை உயர் நீதி மன்றம் பின்பற்றலாம். அதற்கு ‘முன்தீர்ப்பு’ (Precedent) என்று பெயர். இந்த வழக்கிலும் அப்படி சில முன்தீர்ப்புகளை வழக்கறிஞர்கள் எங்கள் முன் வைத்தார்கள்.

இந்த வழக்கில் மூவரும் வன்புணர்வு செய்ததை ஒப்புக்கொண்டாலும், யார் கொலை செய்தார்கள் என்பது தெரியவில்லை. அது நிரூபிக்கப் படாதபட்சத்தில் ஆயுள் தண்டனை தான் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் குறிப்பிட்டிருந்தது. குற்றவாளிகள் இதற்கு முன் வேறெந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் இல்லை. மூவரும் கொடுங்குற்றவாளிகளாகவும் அறியப்படவில்லை. இந்த மூன்று காரணங்களுக்கும் முன் தீர்ப்புகள் இருந்ததால் நாங்கள் இந்த வழக் கிலும் தூக்குத்தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றி தீர்ப்பு கொடுத்தோம்.

சில தீர்ப்புகள்... சில எண்ணங்கள்... - 2 - தூக்குத்தண்டனை Vs ஆயுள்தண்டனை... முடிவல்ல... ஆரம்பம்!

தீர்ப்பு வழங்கிய பிறகு அடுத் தடுத்த நாள்களில் ‘நீயெல்லாம் ஒரு பெண்ணா... பேய்... தூக்குத் தண்டனையை நீ எப்படி ஆயுள் தண்டனையாக மாற்றலாம்...’ என்றெல்லாம் வசைபாடி எனக்கு ஏகப்பட்ட கடிதங்கள் வந்தன. நீதிபதி சிர்புர்கரிடம், ‘இந்த வழக்கு தொடர்பாக உங்களுக்கு ஏதாவது கடிதங்கள் வந்தனவா’ என்று கேட்டேன். ‘அப்படி எதுவும் வரவில்லை’ என்று சிரித்தார்.

இது நடந்து பல வருடங்கள் கழித்து, ஒரு கூட்டத் துக்குச் சென்றிருந்தேன். பேசி முடித்ததும் ஒரு பெண் எழுந்து, ‘இந்த நிகழ்ச்சிக்குத் தொடர்பில்லாத ஒரு கேள்வியைக் கேட்டால் பதில் சொல்வீர்களா?’ என்றார். ‘பதில் தெரிந்தால் நிச்சயம் சொல்வேன்’ என்றேன். ‘அருப்புக்கோட்டை வழக்கில் தீர்ப்பை மாற்றியது ஏன்’ என்றார்.

‘நீதிபதியாக தீர்ப்பை சொன்னதோடு எங்கள் கடமை முடிந்துவிட்டது. அதில் உடன்பாடில்லாத வர்கள் மேல்முறையீடு செய்யலாம். சம்பந்தப்பட்ட நபர்கள் குற்றமே செய்யவில்லை என்று எங்கள் தீர்ப் பில் நாங்கள் சொல்லவில்லை. அவர்கள் குற்றவாளிகள் தான். அதில் சந்தேகமில்லை. ஆனால், அவர்களுக்கான தூக்குத்தண்டனையைத்தான் ஆயுள் தண்டனையாக மாற்றினோம். ஆனால், பலரும் அதைவைத்து நாங்கள் அவர்களை குற்றமற்றவர்கள் என அறிவித்த தாக நினைத்துக்கொண்டார்கள்’ என்றேன்.

அமெரிக்காவில் தூக்குத்தண்டனை கிடையாது. எலெக்ட்ரிக் நாற்காலியில் குற்றவாளியை அமர வைத்து உயிர் பறிக்கப்படும். அங்கே ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு இப்படி தண்டனை கொடுக்கப்பட்டு கொன்றுவிடுகிறார்கள். பிறகுதான் தெரிந்ததாம், அதே பெயரில் உள்ள வேறொரு நபர் தான் உண்மையான குற்றவாளி என்பது. எடுத்த உயிரைத் திரும்ப கொண்டு வர முடியுமா?

தூக்குத்தண்டனையில் எனக்கு உடன்பாடில்லை என ஒரு பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரைக்கு, ‘இதுவே உன் மகளாக இருந்தால் இப்படிச் சொல் வாயா?’ என்று ஒருவர் கேட்டிருந்தார். என் மகளா, பேத்தியா என்பதெல்லாம் முக்கியமல்ல. ஓர் உயிரைப் பறிக்க நான் யார்.... என் பெயரில் அரசு அதைப் பறிப்பது சரியா? வழக்கில் தண்டனை கொடுப்பதன் நோக்கம், சம்பந்தப்பட்ட குற்றவாளி யைத் திருத்தி, சமூகத்தில் அவரை ஆக்கபூர்வமான மனிதராக வாழவைப்பதா அல்லது தண்டித்து ஒழிப் பதா... இந்த உரையாடல் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு செய்தியை அறிந்தேன். அருப்புக்கோட்டை வழக்கின் குற்றவாளி களில் ஒருவர், சிறையிலிருந்தபடியே படித்து, தேர்வெழுதி, தங்கப்பதக்கம் வாங்கியிருக்கிறார். இது அந்த வழக்கின் தொடர்ச்சியா, முடிவா..?

- வழக்காடுவோம்...