
‘மன நோயாளி’யாக மாற்றப்பட்ட பிரெஞ்சுக்காரர்! - அனுபவத் தொடர் - நீதியரசி பிரபா ஸ்ரீதேவன்
நம்மைச் சுற்றிலும் எத்தனையோ அநியாயங்கள் நடக்கின்றன. எல்லாம் சட்டத்தின் முன் வருவதில்லை. அப்படி சட்டத்துக்கு வரும் வழக்குகளுக்குத்தான் நியாயமும் தீர்ப்பும் கொடுக்க முடியும். நியாயமான, நிறைவான தீர்ப்பு வழங்க எனக்கு வாய்ப்பளித்த வழக்கு குறித்து பகிர விரும்புகிறேன்.
பிரான்ஸ் குடிமகன் தொடர்பான வழக்கு அது... அமிர்தானந்தமயியின் பக்தரான அவர், பிரான்ஸிலிருந்து கேரளா வந்திருந்தார். விசா வுக்கான கெடு முடிந்தும் அவர் பிரான்ஸுக்கு திரும்பவில்லை. அதையடுத்து அவரின் மகள் நதேலி, `ஹேபியஸ் கார்ப்பஸ்' (Habeas corpus) வழக்கு தாக்கல் செய்தார்.

அதென்ன ஹேபியஸ் கார்ப்பஸ்?
‘ஆட்கொணர்வு மனு’ என்று அர்த்தம். யாராவது காணாமல் போயிருந் தாலோ அல்லது அரசு, ஒரு நபரை சட்டத்துக்குப் புறம்பாகப் பிடித்துவைத் திருப்பதாக நினைத்தாலோ அந்த நபரை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்து வதற்கு நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு சமர்ப்பிப்பதன் மூலம் அந்த நபரின் தனி மனித உரிமை காக்கப்படுகிறது. ஹேபியஸ் கார்ப்பஸ் என்றால் ‘அந்த உடலைக் கொண்டு வா’ என்று அர்த்தம். உடல் என்றால் இறந்த சடலம் என அர்த்தமில்லை. அந்த நபரை நீதி மன்றத்தின் முன் கொண்டுவந்து நிறுத்துவது. ஒருகாலத்தில் மிக முக்கியமான மனுவாக இருந்த ஹேபியஸ் கார்ப்பஸ், இன்று தன் விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொள்கிற மகள்களின் அப்பாக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒன்றாக மாறியிருக்கிறது.
நதேலி வழக்குக்கு வருவோம்...
‘`என் அப்பாவின் விசா கெடு முடிந்து விட்டது. அவரிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. அதனால் அவரைக் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும்’ என்பதே அவர் தாக்கல் செய்திருந்த மனு.
நீதிபதி முருகேசன் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச்தான் அந்த மனுவை முதலில் விசாரித்தது. டிவிஷன் பெஞ்ச்சில் இரண்டு நீதிபதிகள் இருப்பார்கள். விசாரித்ததில் நதேலியின் அப்பாவின் பாஸ்போர்ட், பர்ஸ் உள்ளிட்ட அனைத்தும் திருடுபோனது தெரிந் தது. எல்லாவற்றையும் இழந்தநிலையில் சாப் பிடக்கூட வழியில்லாத அவர், பிச்சை எடுத்தபடி கேரளாவிலிருந்து நடந்தே கன்னியாகுமரிக்கு வந்தி ருக்கிறார். கன்னியாகுமரி போன்ற சுற்றுலா தளங் களில் பிச்சை எடுப்பவர் களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கும். பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை மிக அதிக மாக இருப்பதால் அவர் களை எல்லாம் ‘ரவுண்ட் அப்’ செய்ய முடிவெடுத் திருக்கிறார் அந்த மாவட்ட கலெக்டர்.

கிட்டத்தட்ட 200-ஐ நெருங்கும் எண்ணிக்கையில் இருந்த அத்தனை பிச்சைக் காரர்களையும் அழைத்து இரண்டே நாள் களில், இரண்டு மருத்துவர்களைப் பரி சோதிக்கச் சொல்லி, மாஜிஸ்ட்ரேட்டிடம் நிறுத்தி, அவர்கள் அனைவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று சான்றிதழ் வாங்கி, மனநல மருத்துவமனையில் அடைத்து விட்டார்கள். நதேலியின் அப்பாவும் அவர் களில் ஒருவர்.
மனநல மருத்துவமனையின் இயக்குநரை அழைத்தார் நீதிபதி முருகேசன். ‘`இத்தனை பேருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்களே... அத்தனை பேரையும் இரண்டு நாள்களில் நீங்கள் பரிசோதிக்க முடியுமா’’ என்று கேட்டார். இரண்டு நாள்களில் அது சாத்தியமே இல்லை என்றும், மருத்துவக்குழு இருந்தால்தான் செய்ய முடியும் என்றும் சொல்லியிருக்கிறார் மனநல மருத்துவமனையின் இயக்குநர்.
அந்த வழக்கின் போர்ட்ஃபோலியோ, நீதிபதி முருகேசன் அமர்விலிருந்து எனக்கு மாறியது. வழக்குகளை அப்படி மாற்றுவது என்பது தலைமை நீதிபதியின் உரிமை. நீதிபதி முருகேசன் என்னை அழைத்து அந்த வழக்கு குறித்து சொல்லி, ‘இதில் தவறு நடந்திருப்ப தாகத் தோன்றுகிறது... பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றார்.
நான் அந்த வழக்கை கையில் எடுத்ததும், மனநல மருத்துவமனையின் இயக்குநரை சந்தித்தேன். அவர் என்னிடம், அத்தனை பேரில் வெறும் இருவருக்கு மட்டும்தான் மனநல பாதிப்பு இருப்பதாகவும், மற்றவர்கள் நார்மலானவர்கள் என்றும் சொன்னார்.
இதற்கிடையில் நதேலியின் அப்பாவைக் கண்டுபிடித்து அவர் மீண்டும் பிரான்ஸுக்கே அனுப்பப்பட்டார். அந்த வழக்கு போடப் பட்டதன் நோக்கம் நிறைவேறினாலும், அதைத் தாண்டி அதில் நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற துடிப்பு நீதிபதி முருகேசனுக் கும் எனக்கும்.
மனநல மருத்துவமனையின் இயக்குநர் நீதிமன்றம் வந்து தன் தரப்பை முன்வைத்தார். ‘`11 பேர் கொண்ட மருத்துவக்குழு எல்லோ ரையும் பரிசோதித்தது. அதற்கு ஒன்றிரண்டு வாரங்கள் ஆயின.... இதற்கு முன் குறிப்பிட்ட படி இரண்டு நாள்களில் இரண்டே மருத் துவர்கள் நூற்றுக்கும் மேலான நபர்களைப் பரிசோதிப்பது என்பது நடைமுறையில் சாத் தியமே இல்லாதது’’ என்று சொன்னார். அதை யடுத்து அந்த வழக்கில் தீர்ப்பு கொடுத்தோம்.

அந்தத் தீர்ப்பு....
‘`பிச்சைக்காரர்கள் என்பதால் அவர்களது மனித உரிமையைப் பறிக்க முடியாது. மாஜிஸ்ட்ரேட்டுக்கு பெரிய அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மனநலம் குன்றிய தாகக் குறிப்பிடப்படும் நபரை மருத்துவர்கள் பரிசோதித்து மாஜிஸ்ட்ரேட் முன் நிறுத்து வார்கள். மாஜிஸ்ட்ரேட் அதை ஏற்றுக் கொண்டு, தனக்கு அதில் பூரண திருப்தி என்று சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒரு திருப்தி, மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் அந்த இரண்டு நாள்களில் நூற்றுக்கணக்கான மனிதர்களை மனநலம் குன்றியவர்களாக நிறுத்தியபோது மாஜிஸ்ட்ரேட்டுக்கு நிச்சயம் வந்திருக்காது. மிருகவதையே சட்டத்துக்குப் புறம்பானதாக இருக்கும் இன்றைய நிலையில், ஏழைகளாக இருக்கும் மனிதர்கள் எல்லோரும் மனநலம் குன்றியவர்கள் என்று சொல்வது நியாயமானதே இல்லை. காவல்துறை, மருத் துவர்கள் என அனைவரின் கடமையும் சாதா ரணமானதல்ல.... முழுமையாகப் பரிசோதிக் காமல், வாய்க்கு வந்த மனநோய்களை எல்லாம் எழுதி சான்றிதழ் கொடுப்பதல்ல உங்கள் அதிகாரம்...’’ என்று சொன்னோம். அந்தத் தீர்ப்பு, மனநலம் பாதிக்கப்பட்டவர் களோடு இயங்கும் பலருக்கும் இன்றும் பயனுள்ளதாக இருக்கிறது.
மனநிறைவைக் கொடுத்த இந்தத் தீர்ப்பை வழங்க வாய்ப்பளித்ததற்காக நீதிபதி முருகேசனுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
- வழக்காடுவோம்...