மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சில தீர்ப்புகள்... சில எண்ணங்கள்... - 5 - இல்லத்தரசிகளின் வேலைகளுக்கு மதிப்பு என்ன?

இல்லத்தரசிகளின் வேலைகளுக்கு மதிப்பு என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
இல்லத்தரசிகளின் வேலைகளுக்கு மதிப்பு என்ன?

அனுபவத் தொடர்

நீதியரசி பிரபா ஸ்ரீதேவன்
நீதியரசி பிரபா ஸ்ரீதேவன்

வெளியே வேலைக்குச் செல்லாமல் வீட்டை கவனித்துக்கொள்ளும் பெண்களிடம் ‘என்ன பண்றீங்க...’ என கேட்டுப் பாருங்கள். ‘சும்மாதான் இருக்கேன்...’ என்பார்கள் பலரும். காலையில் முதல் நபராக கண்விழித்து, அத்தனை வேலைகள் பார்த்து எல்லோரும் உறங்கச் சென்ற பிறகு கடைசியாக படுக்கை யில் விழுபவள் இல்லத்தரசி. அதுதான் சும்மா இருப்பதா?

இப்போது அதற்கென்ன என்கிறீர்களா..? இங்கே நான் பேசப் போகிற வழக்கு மற்றும் அது குறித்த தீர்ப்புக்கே இதுதான் அடிப்படை. ‘`நீதிபதி சிவஞானம் உடனான டிவிஷன் பெஞ்ச்சில் விசாரிக்கப்பட்ட மோட்டார் வாகன விபத்து வழக்கு அது. மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் பொருள் இழப்போ, உயிரிழப்போ ஏற்பட்டால் இழப் பீடு கோரி, தீர்ப்பாயத்தை நாடுவார்கள். அப் படி தீர்ப்பாயம் கொடுக்கும் தீர்ப்பில் திருப்தி இல்லாதவர்கள், மேல் முறையீடு செய்யலாம்.

சில தீர்ப்புகள்... சில எண்ணங்கள்... - 5 - இல்லத்தரசிகளின் வேலைகளுக்கு மதிப்பு என்ன?

சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் ஒரு பெண் குழந்தையின் அம்மா, அப்பா இருவரும் வாகன விபத்தில் இறந்துவிட்டார்கள். மைனர் குழந்தை என்பதால் அவளின் தாத்தா அவளுக்காக இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்துவிட்டு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாகக் கொடுக்கச் சொல்லித் தீர்ப்பு வழங்கியது தீர்ப்பாயம். அப்படிக் குறிப்பிடப்பட்ட தொகை, மிகவும் அதிகம் என்று சொல்லி காப்பீட்டு நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்குதான் எங்களிடம் வந்தது.

காப்பீட்டு நிறுவனம் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், ‘`அப்பாவும் அம்மாவும் இறந்தது ஒரே விபத்தில்தானே... அதனால் ஒரு இழப்பீடு தானே கொடுக்க வேண்டும்? அப்பாவின் மரணம், அம்மாவின் மரணம் என இரண்டுக்கு மான தொகையாகக் கேட்க முடியாது’’ என்றார்.

‘`உங்கள் வாதம் ஏற்புடையதாக இல்லை. அந்தக் குழந்தையைப் பொறுத்தவரை அவளுக்கு இரண்டு இழப்புகள். அதனால் அப்பாவின் இழப்புக்கு என்ன கொடுக்க வேண்டும், அம்மாவின் இழப்புக்கு என்ன கொடுக்க வேண்டும் என இரண்டையும் கணக்கு செய்துதான் கொடுக்க வேண்டும் என்றும், இருவருக்குமான இழப்பீட்டை அனுமதித்து தீர்ப்பாயம் கொடுத்த தீர்ப்பை நாங்கள் மாற்றப்போவதில்லை’’ என்றும் சொன்னேன்.

அப்பாவின் பிசினஸ் வருமானத்தை கணக்கு செய்து அதில் அந்தக் குழந்தைக்கான பங்கு பற்றி குறிப்பிட்டார் வழக்கறிஞர். ‘`குழந்தையின் அம்மா இல்லத்தரசியாக இருந் தவர். வேலைக்குச் செல்லவில்லை. எனவே தீர்ப்பாயம் கொடுத்த இழப்பீடு மிக அதிகம்’’ என்றார்.

‘`அம்மாவுக்கு என்ன விலை கொடுப்பீர்கள்?’’ என்றேன்.

‘`நீங்கள் கேட்பது நியாயமே இல்லை’’ என்றவர், ‘`அம்மா வேலை செய்ததற்கான சாட்சியே இல்லாதபோது அதற்கெப்படி இழப்பீடு தர முடியும்’’ என்றார்.

‘`வீட்டில் வேலை செய்யும் பெண்களின் பங்களிப்புக்கு எந்தவித பொருளாதார மதிப் பீடும் செய்யாதது நியாயமல்ல என நினைக் கிறேன். எனவே இந்த வழக்கில் அந்தக் கருத்தை முன்வைப்போம். ஒருவேளை இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டு சென் றாலும் பரவாயில்லை, நாம் முயன்று பார்ப் போம்’’ என்றேன் நீதிபதி சிவஞானத்திடம்.

பெண் செய்யும் வேலைக்கு எப்படியெல் லாம் மதிப்பு போடலாம் என்பதற்கான வழக்கு ஆதாரங்கள், தகவல்களைச் சேகரித் தோம். கடந்த இதழில் ‘சீடா’ என்பது குறித்துப் பார்த்தோம். இல்லத்தரசிகளின் வேலைகளுக்கு மதிப்பே கொடுக்கப்படாமல் போவது குறித்து சீடாவிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் அந்த அம்மாவின் வேலைக்கான மதிப்பீட்டை நான்கு விதமாகச் செய்யலாம் என்ற முடிவெடுத்தோம்.

1. அவருடைய கணவரின் பிசினஸில் அந்தப் பெண்ணும் பார்ட்னர் என வைத்துக் கொண்டு அதற்கேற்ப கணக்குப் போடலாம்.

2. அந்தப் பெண் எம்.ஏ., எம்.எட் படித்திருப்ப தாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் அவர் புரொஃபஸராக வேலைக்குப் போயிருக் கலாம். அப்படிப் போயிருந்தால் அந்த வேலையில் என்ன சம்பளம் கிடைத்திருக்கும் என்பதற்கேற்ப கணக்குப் போடலாம்.

3. அந்தப் பெண் வேலைக்குப் போகாமல் இருந்ததால் அவரின் கணவரின் பிசினஸில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில் கணக்குப் பண்ணலாம்.

4. சமையல், வீட்டைச் சுத்தம் செய்வது, வீட்டுக்கணக்கு எழுதுவது, யாருக்காவது உடல்நலம் பாதித்தால் செவிலியர் வேலை பார்ப்பது, குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது எனப் பலவித கடமைகளை இல்லத்தரசி பார்க்கிறார். இப்படி ஒவ்வொரு வேலைக்கும் வெளியிலிருந்து ஆளை வைத் திருந்தால் என்ன சம்பளம் கொடுத்திருப் போமோ, அதை வைத்துக் கணக்கிடுவது.

இப்படி நான்கு விதமாக இழப்பீடு கணக் கிடப்பட்டது. வாகன விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு மட்டும் இந்தக் கணக்கீட்டை வைத்துக்கொள்ள வேண்டாம். மணமுறிவுக்குப் பிறகு ஜீவனாம்சம் கோரும்போதும் இதே முறையில் கணக்கிடலாம் என்று சொன்னோம். இந்த வழக்கில் அந்தப் பெண்ணின் மாமனார் சொன்ன சாட்சியம் முக்கியத்துவம் பெற்றது.

‘என் மருமகள் என் மகனின் பிசினஸில் உதவி செய்வாள்’ என்றதும் முதலில் குறிப்பிட்ட பார்ட்னர்ஷிப் அடிப்படையில் இழப்பீட்டை கணக்கு செய்தோம். GDP எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இல்லத்தரசிகளின் வேலைக்கான வருமானம் மட்டும் சேர்வதே இல்லை. இல்லத்தரசியாக இருக்கும் பெண்களிடம் ‘என்ன பண்றீங்க...?’ என கேட்டால், பலரும், ‘ஒண்ணும் பண்ணலீங்க... சும்மாதான் இருக்கேன்’ என்பார்கள். இல்லத்தரசிகளின் வேலை என்பது சும்மா இருப்பதாக அர்த்தமல்ல. அந்த வேலைக்கு பி.எஃப் கிடையாது, ஓய்வு கிடையாது. ஒரு பெண் செய்யும் வேலைகளுக்கு விலை வைக்கப் பட்டால்தான் அதற்கான மதிப்பு தெரியும்.

சில தீர்ப்புகள்... சில எண்ணங்கள்... - 5 - இல்லத்தரசிகளின் வேலைகளுக்கு மதிப்பு என்ன?

ஆறேழு மாதங்கள் கழித்து வேறோர் உயர் நீதிமன்ற வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குப் போனது. அதில், சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின்படிதான் கணக்கு செய்ய வேண்டும் என்று சொல்லி, நீதிபதி சிவஞானமும் நானும் இணைந்து வழங்கிய அந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டதாக முத்திரை குத்தியது. உச்ச நீதிமன்றம் அப்படிச் சொன்னதால் அனைத்து உயர் நீதிமன்றங்களும், தீர்ப்பாயங்களும் அதைப் பின்பற்றியாக வேண்டும்.

கடந்த ஆண்டு தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான மூவர் அடங்கிய பெஞ்ச் மீண்டும் இதை உறுதிப்படுத்தி, ‘இது பெண்ணுக்கு காட்டும் மதிப்பு. அவளுக்கான மனித உரிமை. அவள் செய் கிற வேலைகளுக்கு மதிப்பளிப்பதுதான் சரி' எனச் சொல்லி சென்னை உயர் நீதிமன்றத்தில் நாங்கள் அளித்த தீர்ப்பை இன்னொரு முறை உறுதிப்படுத்தியது.

அகில உலக பெண் நீதிபதிகள் மாநாட்டில் பங்கேற்க ஒருமுறை கொரியாவுக்குச் சென்றிருந் தேன். ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த பெண் நீதிபதிகள் பலரும், ‘`இந்தத் தீர்ப்பை எங்களுக்குக் கொடுங்கள்... இந்தியாவில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு என்று சொல்லி நாங்கள் இதைச் சேர்த்துக் கொள்கிறோம்’’ என்றார்கள்.

பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் முக்கியமான தீர்ப்பாக அமைந்த இது என் பத்தாண்டுக்கால நீதிபதி அனுபவத்தில் மிகுந்த மனநிறைவைக் கொடுத்தது.

- வழக்காடுவோம்...

தொகுப்பு: ஆர்.வைதேகி