மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சில தீர்ப்புகள்... சில எண்ணங்கள்... - 6 - மருத்துவம் என்பது மக்களுக்கு எட்டாக்கனியா?

மருத்துவம் என்பது மக்களுக்கு எட்டாக்கனியா?
பிரீமியம் ஸ்டோரி
News
மருத்துவம் என்பது மக்களுக்கு எட்டாக்கனியா?

அனுபவத் தொடர்

`‘நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவி வகித்த பத்தாண்டுக் காலத்தில் கொடுத்த முக்கியமான தீர்ப்பு அது. எனக்கு மிகுந்த மனநிறைவைக் கொடுத்த தீர்ப்பு என்றும் சொல்லலாம். ஆனால், நான் ஓய்வுபெற்று பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்றும் சமுதாய சூழல் மாறாதது வருத்தம் அளிக்கிறது.

மதுரை பெஞ்ச்சில் இருந்தபோது காப்பீடு தொடர்பாக நான் சந்தித்த வழக்கு இது. பொதுக்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனக்கான காப்பீட்டுத் தொகையைத் தர மருத்துவமனை நிர்வாகம் நிராகரித்துவிட்டதாக ஒரு நபர் மனு கொடுத்திருந்த வழக்கு. அதில், `காப்பீட்டு நிறுவனம் எந்த அளவுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்? எல்லா காப்பீட்டு நிறுவனங்களும் காப்பீடு பெற தகுதி உள்ளவர் களுக்கு பாலிசிக்கு உட்பட்டுதான் அந்தத் தொகையைக் கொடுக்க முடியுமா அல்லது அதைத் தாண்டியும் கொடுக்க முடியுமா? பாலிசியை தாண்டி காப்பீட்டுத் தொகை கொடுக்க வேண்டி வருமா?' என்ற கேள்விகள் எழுந்தன.

நீதியரசி பிரபா ஸ்ரீதேவன்
நீதியரசி பிரபா ஸ்ரீதேவன்

மருத்துவக் காப்பீட்டின் கீழ் பலன் பெற விரும்புபவர், கேஷ்லெஸ் முறையில் சிகிச்சை பெற முடியும். அதாவது காப்பீடு எடுத்தவர்கள், சிகிச்சை பெறும்போது மருத்துவமனைக்கு பணம் செலுத்த வேண்டாம். காப்பீட்டு நிறுவனம் மருத்துவமனைக்கு நேரடியாக அதைச் செலுத்திவிடும். அதுதான் கேஷ் லெஸ். தவிர, அந்தக் காப்பீட்டுத்திட்டத்தில் எந்தெந்த மருத்துவமனைகள் இருக்கின்றன...எந்த நோய்களுக்கெல்லாம் இந்தத் திட்டம் பொருந்தும் என்பது காப்பீடு செய்தவருக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

குறிப்பிட்ட இந்த வழக்கில் காப்பீட்டு நிறுவனமும் மருத்துவமனையும் சம்பந்தப் பட்ட நபருக்கு இழப்பீட்டைத் தர வேண்டும் என நானும் நீதிபதி ராஜேந்திரனும் சேர்ந்து தீர்ப்பளித்தோம். தவிர, மருத்துவக் காப்பீடு கட்டியிருக்கும் நபர், மருத்துவமனையில் அதன் அடிப்படையில் கட்டணமில்லா சிகிச்சை தரச் சொல்லிக் கேட்டு, ஒருவேளை மருத்துவமனை அதை மறுத்தால் அந்த மருத்துவமனையைக் காப்பீட்டு நெட் வொர்க்கிலிருந்து அரசு நீக்கிவிடலாம் என்றும் சொன்னோம். இந்தத் தீர்ப்பைக் கொடுத்து சில மாதங்கள் ஆகியிருக்கும். என் நண்பரான, அரசு ஊழியர் ஒருவர் உயிருக்கே ஆபத்தான நோய் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நான் அவரை மருத்துவ மனையில் சென்று பார்த்து, அங்கிருந்த மருத்துவரிடம் அந்த நண்பருக்கான சிகிச்சை குறித்து விசாரித்தேன். மருத்துவரும் அது குறித்து விளக்கினார். அந்த நண்பரின் உறவினர்கள் அவரை தனியார் மருத்துவ மனைக்கு மாற்ற விரும்பினார்கள். தனியார் மருத்துவமனையில் செலவு அதிகம் என்று சொல்லியும் அது பற்றிய கவலை இல்லாமல் அவர்கள் அந்த நண்பரை தனியார் மருத்துவ மனைக்கு மாற்றினார்கள்.

நான்கைந்து நாள்களான நிலையில், நண்பரின் உறவினர்கள் என்னிடம், ‘மருத்துவ மனையில் நிறைய பணம் கட்டச் சொல் கிறார்கள். நாங்கள் காப்பீட்டுத் திட்டத்தில் இருக்கிறோம். அதையும் மீறி பணம் கேட் கிறார்கள்’’ என்றார்கள்.

அந்த நிலையில்தான் ஏற்கெனவே நானும் நீதிபதி ராஜேந்திரனும் சேர்ந்து வழங்கிய தீர்ப்பு நினைவுக்கு வந்தது. அந்த வழக்கு தொடர்பான பட்டியலில் என் நண்பரை அனுமதித்திருந்த மருத்துவமனையும், அவரை பாதித்திருந்த நோயும் இருந்தன. எனவே அவர்கள் பணம் கேட்க முடியாது. அது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடமும் கேட்டதற்கு அவர்கள், ‘நாங்கள் இதயநோய்க்கு மட்டும்தான் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டணம் வாங்காமல் சிகிச்சை கொடுப்போம். அதை காப்பீட்டு நிறுவனத்துக்கும் சொல்லி யிருக்கிறோம்’ என்றார்கள். அடுத்து நான் காப்பீட்டு நிறுவன அதிகாரியிடம் பேசினேன். அவரும் அதையே சொன்னார்.

சில தீர்ப்புகள்... சில எண்ணங்கள்... - 6 - மருத்துவம் என்பது மக்களுக்கு எட்டாக்கனியா?

‘காப்பீடு எடுப்பவர்களுக்கு தங்களுக்கு எந்தெந்த நோய்களுக் கெல்லாம் காப்பீடு கிடைக்கும் என்பது தெரிய வேண்டாமா.... உங்களுக்கும் மருத்துவமனைக்கு மான தகவல் பரிமாற்றம் மக்களுக்கு எப்படித் தெரியும்’ என்று கேட்டேன். அதற்கும் அவர்களிடமிருந்து சரியான பதில் இல்லை. மறுநாள், நாங்கள் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பின் பிரதியோடு போனேன். அதில் அந்த மருத்துவமனையின் பெயரும் அந்த நோயும் பட்டியலில் இருப்பதைக் குறிப்பிட்டு, குறிப்பிட்ட அந்த நோய்க்கு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை கொடுக்க மறுத்தால் அந்த மருத்துவமனையை நெட்வொர்க்கிலிருந்து நீக்கி விடலாம் என்பதையும் சொன்னேன். அந்தத் தீர்ப்பை வாசித்த பிறகு கட்டணம் வாங்காமல் சிகிச்சை அளிக்க மருத்துவமனை தரப்பில் ஒப்புக்கொண்டனர்.

நண்பருக்கு தனியார் மருத்துவமனையில் கொடுக்கப் பட்ட சிகிச்சை, அரசு மருத்துவமனை மருத்துவர் என்னிடம் விளக்கிய அதே சிகிச்சைதான். துளியும் மாற்றமில்லை. ஆனாலும் ஏதோ காரணத்துக்காக நாமெல்லாம் தனியார் மருத்துவமனைகளில்தான் தரமான சிகிச்சை கிடைக்கும் என நினைத்துக் கொள்கிறோம். அரசு மருத்துவமனைகளின் வசதிகள் மேம்படுத்தப்பட்டால், அங்குதான் சிகிச்சை எடுப்போம் என மக்கள் வரிசையில் நிற்கும் காலம் நிச்சயம் வரும்.

‘கட்டபொம்மன்’ படத்தில் ‘கும்பனி என்பது ஒரு வர்த்தக ஸ்தாபனம்’ என்றொரு வசனம் வரும். அது போல இன்று மருத்துவமனை என்பதும் வர்த்தக ஸ்தாபனமாகிவிட்டது. எல்லா துறைகளிலும் பணமும் லாப நோக்கமுமே பிரதானம் இன்று. ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா.... மருத்துவக் காப்பீடு என்பது தங்களின் உயிர் காக்கும் என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், மருத்துவமனையும் காப்பீட்டு நிறுவனமும் மக்களுக்கே தெரியாமல் தனி ஒப்பந்தம் போட்டுக்கொண்டு இயங்குவது எந்த வகையில் நியாயம்? மக்களின் அடிப்படைத் தேவை களான ஆரோக்கியம், கல்வி என எல்லாமே பணம் சார்ந்து போய்விடக்கூடாதல்லவா...

இந்தப் பகிர்வில் குறிப்பிட்ட நண்பரை எனக்குத் தெரியும். இந்தத் தீர்ப்பு நானும் இன்னொரு நீதிபதியும் சேர்ந்து கொடுத்தது. எங்களுக்குத் தெரிந்த இந்த விஷயங்களில் எதுவுமே தெரியாமல் இங்கே எத்தனை மக்கள் இருப்பார்கள்... என் நண்பரை மட்டும் காப்பாற்றிவிட்டேன் என்று நான் பெருமைப்பட முடியாதல்லவா? எப்படியாவது உயிரை காப்பாற்றினால் போதும் என்ற நிலையில், கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்ற அழுத்தத்தில் எதை வேண்டுமானாலும் விற்றோ, அடகு வைத்தோ சிகிச்சைக்கு சம்மதிக்கும் மக்கள் எத்தனை பேர்?

எனக்கு மிகுந்த மனநிறைவைக் கொடுத்த தீர்ப்பு என்பதில் மகிழ்வதா.... தீர்ப்பு வழங்கி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த விஷயத்தில் மாற்றம் எதுவும் இல்லை என்று கவலைப்படுவதா..?

- வழக்காடுவோம்...