சில தீர்ப்புகள், சில எண்ணங்கள் - 9 - வன்முறைக்கு சரியான மாற்று மருந்து... மன்னிப்புதான்!

- பக்கவிளைவுகள் கிடையாது - அனுபவத் தொடர்
1998-ம் வருடம், கோவையில் நடந்த குண்டுவெடிப்பு... இரண்டு நீதிபதிகள் இணைந்து விசாரித்து தீர்ப்பளித்த டிவிஷன் பெஞ்ச் மேல்முறையீடு இது. நானும் நீதிபதி சத்யநாராயணாவும் சேர்ந்து 2009-ல் தீர்ப்பளித்தோம். தொடர்ந்து 40 நாள்களுக்கு வேறெந்த வழக்கையும் கேட்கவில்லை. அந்த அளவுக்கு கடினமாக அமைந்த வழக்கு இது.
இந்த நிகழ்வின் பின்னால் இருப்பது ‘ஒரே சதித்திட்டம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படிக் குறிப்பிடுவது எந்த வகையில் சரி என அரசு வழக்கறிஞரிடம் கேட் டோம். கிட்டத்தட்ட 14 இடங்களில் வெவ்வேறு நேரத் தில் குண்டு வெடித்திருக்கிறது. அரசு வழக்கறிஞர், வரைபடம் போல வரைந்து, குண்டு வெடித்த இடங் களைக் காட்டினார். அது முற்றுப்பெறாத S மாதிரியோ, பாதி கேள்விக்குறி மாதிரியோ தொடர்ச்சியாக இருந் தது. அதைக் காட்டி, இது வெவ்வேறு நபர்கள் செய்த தல்ல என்றார். இந்தச் சம்பவத்துக்கு முன் நடந்த விஷயங்களையெல்லாம் வைத்து, ‘அல் உம்மா’ என்கிற அமைப்புதான் இதைச் செய்திருக்கக்கூடும் என முடிவு செய்து காவல்துறை இதை எதிர்கொண்டது.

இரவில் தூங்கிக்கொண்டிருந்த ஆண்கள் சிலரை அழைத்து நிற்கவைத்து போட்டோ எடுத்திருக்கிறது காவல்துறை. அந்த நபர்கள், நிகழ்விடத்தில் இருந்திருக்கக் கூட வாய்ப்பில்லை. எதற்காக தங்களை எழுப்பி அழைத் துச் செல்கிறார்கள் என்பதுகூட அவர்களுக்குத் தெரிந் திருக்க வாய்ப்பில்லை. அவர்களை அழைத்து வந்ததற் கான ஒரே காரணம், அவர்கள் குறிப்பிட்ட ஒரு மதத் தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். சிறுபான்மையின மக்களின் மனநிலையை எவ்வளவு சுலபமாகப் புண்படுத்தும் செயல் இது? அந்த நபர்கள் அந்தப் புகைப்படத்தில் கூனிக்குறுகி, அவ மானத்துடன் நின்றுகொண்டிருந்ததைக் காண முடிந்தது. அவர்களும் மனிதர்கள்தானே...
இந்த வழக்கில் கிட்டத்தட்ட 14, 15 காவல் துறை அதிகாரிகளும் சாட்சி சொல்ல வேண்டி யிருந்தது. கோர்ட்டில் சாட்சி சொல்லப் போனால் ஒரு பேப்பர் தருவார்கள். அதில் நம் பெயர், அப்பா பெயர், நம் வயது, சாதி, முகவரி எல்லாம் எழுத வேண்டும். சாட்சி சொல்ல வந்த காவல்துறை அதிகாரிகளில் ஆறேழு பேர் மதம் இந்தியர், சாதி இந்தியர் என எழுதி, கையெழுத்திட் டிருந்தார்கள். அதையும் நாங்கள் எங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தோம். இந்த ஆறேழு பேரால் செய்ய முடியும் போது நம்மாலும் முடியும்தானே... எனக்கும் என் சக மனிதருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, நாம் எல் லோரும் இந்தியர்கள் என்ற நிலைவந் தால் இங்கே நடக்கும் பெரும்பாலான சண்டை, சச்சரவுகள் முற்றுப்பெறும்.
குண்டுவெடிப்பு சம்பவம் முடிந்த அடுத்த நாள்... நான்கு சிறுவர்கள், மைதானத்தில் விளையாடிக் கொண்டி ருந்தார்கள். முகமது சுபேர் என்ற சிறுவனின் பெயர் மட்டும் எனக்கு நினைவிருக்கிறது. அவர்களுக்கு 8 முதல் 10 வயதுக்குள் இருக்கும். புதருக் குள் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற போது அங்கே குண்டுவெடித்து நான்கு சிறுவர்களும் உயிரிழந்தனர். இதில் யாருக்கு என்ன லாபம்... இந்த மரணத் தின் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன? அதையும் தீர்ப்பில் கேள்வியாக எழுப்பினோம்.

இரண்டாவது உலகப் போரில் சிறை பட்டு, வதைபட்ட ஒருவர் ‘இந்த வன் முறைக்கு சரியான மாற்று மருந்து மன்னிப்புதான்... அதற்கு பக்க விளைவுகள்கூட கிடையாது’ என்று சொல்லியிருக்கிறார். ஏதேனும் ஒரு தரப்பில் மன்னித்துவிட்டால் அந்தப் பிரச்னை அத்துடன் முடிந்துவிடும். இல்லாவிட்டால் சங்கிலித்தொடர் போல நீண்டுகொண்டுதான் இருக்கும். கோவை குண்டுவெடிப்பில் அளவிடமுடியாத உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஒரு பக்கமிருக்க, எல்லோரும் ஒற்றுமையாகச் சேர்ந்து வாழ்ந்த சமூகம், ஒருவரை ஒருவர் சந்தேகிக்கும்படி மாறிவிட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக எடுக்கப் பட்டிருந்த வீடியோ ஒன்று இந்த வழக்கில் ஆவணமாக இருந்தது. அதைப் போட்டுக் காட்டுவதாகச் சொன்னார் அரசு வழக்கறிஞர். ஆனால், மேல்முறையீட்டாளர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள் அதை எதிர்த் தார்கள். அதைப் பார்த்தால் நீதிபதிகளின் மனது மாறிவிடுமோ என அவர்களுக்கு பயம். இந்த வீடியோவை ஏற்கெனவே செஷன்ஸ் நீதிபதி பார்த்திருக்கிறார். அவர் பார்த்த ஆவணங்களை நாங்கள் பார்க்க வேண்டும். வீடியோவில் பதிவாகியிருந்த சேதங்களையும், இழப்புகளையும் பார்ப்பது அவ்வளவு எளி தாக இல்லை. வழக்கு நடந்துகொண்டிருந்த போதே ஏதோ காரணத்துக்காக சிலரை விடுதலை செய்தது அரசு. நாங்கள் வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கும்போது இப்படிச் செய்தது சரியில்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டோம்.
இந்த வழக்கில் 162 குற்றவாளிகள் இருந் தார்கள். ஏற்கெனவே குறிப்பிட்டபடி அவர் களில் சிலரை அரசு விடுவித்துவிட்டது. மற்ற வர்களில் குற்றத்தின் தீவிரம், குற்றவாளியின் பங்கேற்பு ஆகியவற்றுக்கேற்ப நாங்கள் தண்டனை வழங்கினோம். சிலரைப் பொறுத்த வரை குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர்கள் குற்றவாளிகள் அல்லர் என்று சொன்னோம். சிலருக்கு ஆயுள் தண்டனை, பத்து வருடங்கள், எட்டு வருடங்கள் சிறைத்தண்டனை என வேறுபட்ட தண்டனைகளை வழங்கினோம். நிறைய பேருக்கு, குறிப்பாக கோவை மக்களுக்கு இந்தத் தீர்ப்பு கோபத்தைக் கொடுத்தது என்றுகூட சொல்லலாம். ‘முழுக்கொடுமையை யும் உள்வாங்கியது நாங்கள். இந்த இரண்டு நீதிபதிகளும் ஏதோ தீர்ப்பு சொல்லியிருக் கிறார்கள்' என்று கோபப்பட்டார்கள். நாங்கள் எங்களுக்கு எதிரிலுள்ள ஆவணங்கள், சாட்சி போன்றவற்றை வைத்துதான் தீர்ப்பு சொல்ல முடியும். யாரோ ஒருவரைப் பார்த்து அவரது முகமே பிடிக்கவில்லை, அதனால் சிறைக்கு அனுப்புகிறேன் என்று சொல்ல முடியாதே... சம்பந்தப்பட்டவரை குற்றவாளி என நிரூபிக்க எங்களுக்கு ஆதாரம் வேண்டுமில்லையா... அதனால் மக்கள் எதிர்பார்ப்பின்படி நாங்கள் தீர்ப்பு வழங்க முடியாது.
இந்தத் தீர்ப்பு எனக்குப் பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தது. ஓர் ஊரில் எந்தெந்த இடத் தில், யார், யார் இருக்கிறார்கள், அந்த லே அவுட் எப்படியிருக்கிறது, யார் முக்கிய மான இடங்களில் இருக்கிறார்கள், யார் ஒதுக்குப்புறமான இடங்களில் இருக் கிறார்கள், ஏன் கொலை நடக்கிறது, யார் அதைச் செய்கிறார்கள், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு யார் சிறைத் தண்டனையையோ, தூக்குத் தண்டனையையோ அனுபவிக்கிறார்கள் என்ற கேள்விகளை எழுப்பியது. நான் ஏற்கெனவே முந்தைய வழக்கொன்றில் குறிப்பிட்டதுபோல, பணம் இருந்தால் திறமையான வழக்கறிஞர்களை வைத்துக் கொண்டு வாதாடச் செய்யலாம். அதற்கு வாய்ப்பில்லாதவர்களுக்கு வழக்கில் பாதக மான முடிவு வர வாய்ப்பிருக்கிறது. இந்த வழக்கிலும் அது நடந்தது.
162 குற்றவாளிகள்... செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு நடந்தபோது ‘உங்களுக்கு சட்ட உதவி மையத்திலிருந்து வழக்கறிஞரை நியமிக்கலாமா’ என்று கேட்கப்பட்டது. அவர்களால் எந்த விஷயத்திலும் ஒருமித்த முடிவுக்கு வர முடியவில்லை. அவர்களில் யாருக்கும் பெயில் கிடைக்காததால் வெளியே வர முடியவில்லை. நல்ல வழக்கறிஞரை நேரில் சந்தித்துப் பேசி, விவாதிக்கக்கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையெல்லாம் கீழ் கோர்ட் தீர்ப்பில் செஷன்ஸ் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் ஆயுள் தண்டனையா, தூக்குத்தண்டனையா எது கொடுக்கப்பட வேண்டும் என்றொரு சர்ச்சை எழுந்தது. குற்ற வாளிகளிடம் ‘உங்களுக்கு ஏன் இந்தத் தண் டனை கொடுக்கப்படக்கூடாது என நினைக் கிறீர்கள்’ என்று பொதுவாகக் கேட்போம். குற்றம் சுமத்தப்பட்டவர்கள், ‘என்ன வழக் காடி... என்ன நடந்துவிடப் போகிறது’ என்ற மனநிலையில்தான் இருந்தார்கள். அப்போது ரம்ஜான் பெருநாள் வந்தது. தொழுகை நேரத் துக்கேற்ப நீதிமன்ற நேரம் மாற்றி வைக்கப் பட்டது. இப்படியெல்லாம் அவர்களது நம்பிக் கையைப் பெற்று அந்த வழக்கை விசாரித்து செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
பொதுவாக டிவிஷன் பெஞ்ச் வழக்குகளில் இரு நீதிபதிகளும் விவாதிப்போம். கடைசியில் யாராவது ஒருவர் முழுத் தீர்ப்பையும் எழுது வோம். ஆனால், இந்த வழக்கில் ஒவ்வோர் அடியிலும் நாங்கள் இருவரும் சேர்ந்து பேசியே முடிவெடுத்தோம். மறக்கவே முடி யாத அனுபவத்தைக் கொடுத்த வழக்கு இது.
- வழக்காடுவோம்...
தொகுப்பு: ஆர்.வைதேகி