Published:Updated:

`திருமண உறவில் பாலியல் வன்கொடுமை குற்றமல்ல'-சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் கருத்து... ஒரு முக்கோண அலசல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை

``குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் வந்துவிட்டது என்பதற்காக தினமும் எந்த மனைவியும் காவல் நிலையத்துக்கு ஓடுவது கிடையாது. எனவே, இது சட்டமாக்கப்பட்டாலும் அப்படி நிகழ்வதற்கான வாய்ப்பு இல்லை!'' என்கிறார் உ.வாசுகி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்கு'வதில் தமிழக அரசியல் கட்சிகளிடையே போட்டா போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான், `மனைவியை வற்புறுத்தி உறவில் ஈடுபடுவது பாலியல் குற்றம் ஆகாது' என்றொரு தீர்ப்பை வழங்கி அதிரவைத்திருக்கிறது சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்!

சத்தீஸ்கரைச் சேர்ந்த பெண் ஒருவர், `தன் கணவர் இயற்கைக்கு மீறிய பாலியல் செயல்பாடுகளுக்காகத் தன்னைக் கட்டாயப்படுத்துகிறார்' என்றொரு புகாரோடு நீதிமன்றப் படியேறினார். இது குறித்த வழக்கு விசாரணையின் இறுதியில், `மனைவி 18 வயதுக்குக் கீழுள்ளவர் என்றால் மட்டுமே பாலியல் வன்கொடுமை குற்றமாக எடுத்துக்கொள்ளப்படும்.

கணவன் - மனைவி பிரச்னை
கணவன் - மனைவி பிரச்னை

மாறாக, மனைவி 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், அவரது கணவர், அந்த மனைவியை வற்புறுத்தி பாலியல் உறவு மேற்கொண்டாலும் அது குற்றமாகாது' என்ற அதிரவைக்கும் தீர்ப்பை அளித்திருக்கிறது சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம். மேலும், தீர்ப்பின் தொடர்ச்சியாக, `இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர், அவருடைய மனைவியுடன் 'இயற்கைக்கு மாறான உடல் உறவை ஏற்படுத்தியிருந்தால் அது குற்றமே. அதைக் கீழமை நீதிமன்றத்தில்தான் உறுதி செய்ய வேண்டும்!' என்றும் கூறப்பட்டிருக்கிறது.

பெண் சமத்துவம், உரிமை என உலக மக்கள் அனைவரும் முற்போக்கு திசையில் பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது.

இந்தத் தீர்ப்பு குறித்துப் பேசும் 'தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க'த் தலைவர் அருள் துமிலன், ``சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எங்கள் சங்கம் வரவேற்கிறது. ஏனெனில், நடைமுறையில் இது போன்ற வழக்குகளை ஆண்களைப் பழிவாங்குவதற்காகவே பெண்கள் பயன்படுத்திவருகிறார்கள்.

குற்றம் நடந்ததா, இல்லையா என்பதே விசாரணையின் முடிவில்தான் தெரியவரும். உண்மையிலேயே இப்படியொரு குற்றம் நடைபெற்றிருந்தால்கூட, சம்பந்தப்பட்ட பெண், உடனடியாக தன் புகாரைப் பதிவுசெய்ய வேண்டும் அல்லவா? அப்படி நேற்று நடைபெற்ற ஒரு சம்பவம் குறித்து ஒரு பெண் இன்றைக்கே வழக்கு பதிவு செய்தால் எங்கள் சங்கமும்கூட அந்தப் பெண்ணின் புகாரை ஏற்றுக்கொள்கிறது.

அருள் துமிலன்
அருள் துமிலன்

ஆனால், காலம் கடந்து, தனக்குத் தேவையான நேரத்தில் சம்பந்தப்பட்ட ஆணைப் பழிவாங்கும் நோக்கோடு மட்டுமே புகாராகவோ, வழக்காகவோ பதிவுசெய்கிறார்கள். ஒரு கணவர், தன் மனைவிக்கு அவ்வாறு ஒரு துன்பத்தைத் தந்திருந்தாரேயானால், சம்பந்தப்பட்ட பெண்ணும் அந்த வலியை உணர்ந்திருந்தால், இது குறித்து உடனடியாக அல்லவா புகாரைப் பதிவு செய்ய வேண்டும்!

சட்டங்கள் அனைத்துமே பெண்களின் நலனுக்காக, அவர்களுக்கு சாதகமாகத்தான் எழுதப்படுகின்றன. ஆனால், நடைமுறையில் அவை எல்லாமே தலைகீழாகத்தான் இருக்கின்றன. அதாவது, 'வரதட்சணை தடுப்பு சட்டம்' என்பதே பெண்களுக்காகத்தான் கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்திவருபவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்தான். இதை உச்ச நீதிமன்றமே பலமுறை தெளிவாக்கியிருக்கிறது!'' என்கிறார்.

`கல்லணை தலைப்பிலேயே மணல் திருட்டு; துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும்!’ -குமுறும் விவசாயிகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் சந்தேகத்தை முற்றிலுமாக மறுத்துப் பேசுகிறார் 'அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க' துணைத் தலைவரான உ.வாசுகி. இது குறித்துப் பேசுபவர்,

''சத்தீஸ்கர் நீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கணவனால் மனைவிமீது நடத்தப்படும் வன்முறை கடந்தகாலத்தில் குற்றமாகக் கருதப்படவில்லை. குடும்பம் என்கிற 'புனிதமான' அமைப்புக்குள் சட்டமும் அரசாங்கமும் தலையிடக் கூடாது என்கிற வாதங்கள்தான் முன்வைக்கப்பட்டன. பெண்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் பலகட்ட போராட்டங்களுக்கும் நிர்ப்பந்தத்துக்கும் பிறகுதான் 'குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்' என்பது கொண்டுவரப்பட்டது.

அன்றைய பா.ஜ.க அரசின் அணுகுமுறை எப்படி பிற்போக்காக இருந்தது என்பது அன்றைக்கே தெரிந்தது. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில், பாலியல்ரீதியான வன்முறை என்பதும் குடும்ப வன்முறையின் ஒருபகுதியாக வரையறுக்கப்பட்டு இருந்தது. எனவே, கணவனாக இருந்தாலும் மனைவிமீது பாலியல் வன்முறையை நிகழ்த்தினால் அது சட்டப்படி குற்றம் என ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் நீதிமன்றம் இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.

உ.வாசுகி
உ.வாசுகி

அடுத்து நிர்பயா மீதான பயங்கரமான பாலியல் வன்முறை, அதன் தொடர்ச்சியாக அவர் மரணம் என்பது நிகழ்ந்து வலுவான வெகுஜன கண்டனத்துக்குப் பிறகு வர்மா கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த நேரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக வர்மா கமிஷன் அறிக்கையில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்த ஒரு மனு நேரில் அளிக்கப்பட்டு, நீதிபதி வர்மாவுடன் விவாதிக்கப்பட்டது. அதில் ஒரு கோரிக்கையாக, 'திருமண உறவுக்குள் பாலியல் வல்லுறவு' என்பதும் இடம்பெற்றிருந்தது.

வர்மா கமிஷன் தனது அறிக்கையில், 'திருமணம் என்பது கணவனுக்கு மனைவியுடனான வரம்பற்ற பாலியல் உறவுக்கு உரிமம் வழங்கவில்லை' எனவும், 'பாலியல் வல்லுறவு உணர்வுகளின் அடிப்படையில் மட்டும் நடப்பது கிடையாது. அது அதிகாரத்தின் வெளிப்பாடு' எனவும் உறுதியாகக் குறிப்பிட்டு, 'அது குற்றமாக கருதப்பட வேண்டும்' என்கிற பரிந்துரையையும் முன்வைத்தது. ஆனாலும்கூட அன்றைய அரசாங்கம் அதை ஏற்கவில்லை. அப்போதே அதையும், வேறு பல குறைபாடுகளையும் ஜனநாயக மாதர் சங்கம் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

``மக்கள் நாடாளுமன்றத்தின் தீர்மானம் மத்திய கேபினட் அமைச்சகத்துக்கு அனுப்பப்படும்’’ - டெல்டா மக்கள்

'அன்றாட குடும்ப சச்சரவுகள் காரணமாக 'எடுத்ததற்கெல்லாம் கணவன்மீது இந்தஜ் குற்றச்சாட்டை முன்வைத்துவிடுவார் மனைவி' என்பது போன்ற வாதங்களைக் காரணம் காட்டி இதை குற்றமாக்க மறுக்கக் கூடாது. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் வந்துவிட்டது என்பதற்காக தினமும் எந்த மனைவியும் காவல் நிலையத்துக்கு ஓடுவது கிடையாது. எனவே, இது சட்டமாக்கப்பட்டாலும் அப்படி நிகழ்வதற்கான வாய்ப்பு இல்லை. அப்படி நிகழுமானால், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சட்டத்துக்குள் உள்ளடக்கலாம்.

வல்லுறவு என்பது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெருமளவு உளைச்சலையும் வலியையும் ஏற்படுத்தக்கூடிய விஷயம். கணவனால் நடத்தப்பட்டாலும் மனைவிக்கு அந்த பாதிப்பு இருக்கும் என்பதை ஊடகத்தின் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளில் பெண்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜனநாயக மாதர் சங்கத்தோடும் பெண்கள் இத்தகைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சத்தீஸ்கர் நீதிமன்றம் கணக்கில் எடுக்க வேண்டும்'' என்கிறார் அழுத்தமாக.

சுதா ராமலிங்கம்
சுதா ராமலிங்கம்

இந்தத் தீர்ப்பின் வரிகளை ஆராய்ந்து பேசுகிற மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்,

``திருமண உறவுக்குள் இருக்கும் ஒரு பெண், தன் கணவன்மீது பாலியல் அத்துமீறல் புகார் கொடுக்க முடியாது என்றுதான் இந்திய தண்டனைச் சட்டம் சொல்கிறது. அந்த நடைமுறை யதார்த்தத்தைத்தான் இந்தத் தீர்ப்பும் சுட்டிக்காட்டியிருக்கிறது. மற்றபடி இந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஏனெனில், `பாலியல் வன்புணர்வு செய்தார் என்று தன் மனைவி சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தவறானது' என்றுதான் கணவர் தரப்பு வழக்கு தொடுத்திருக்கிறது. நீதிமன்றமும், அவரது மனுவை ஏற்று விசாரணை நடத்தி, 'இன்றைய காலகட்டத்தில் நடைமுறையிலுள்ள இந்திய தண்டனைச் சட்டத்தின்படி 'திருமண உறவில் கணவர் பாலியல் வன்புணர்வு செய்தார் என்ற குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது' என்ற யதார்த்த நிலையை எடுத்துச் சொல்லியிருக்கிறது.

உலகின் முன்னேறிய நாடுகள், பெண்கள் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, திருமண உறவில் கணவரின் பாலியல் அத்துமீறல்களையும் குற்றமாகக் கருதுகிற சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்திவருகின்றன. எனவே, நம் நாட்டிலும் பெண்களுக்குப் பாதுகாப்பாக இப்படியொரு சட்டம் இயற்றினால் வரவேற்கத்தக்கதாக இருக்கும்!'' என்கிறார் அக்கறையோடு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு