Published:Updated:

`ராஜினாமாவுக்குப் பிறகும் துரத்தும் சர்ச்சை!’ - சி.பி.ஐ வளையத்தில் தஹில் ரமானி?

முக்கியப் புள்ளிகள் சம்பந்தப்பட்ட தமிழ்நாடு சிலை திருட்டு வழக்குகள் குறித்து விசாரிக்க நீதிபதி மகாதேவன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு அமர்வை தஹில் ரமானி கலைத்தார். இதை ஐ.பி கோடிட்டுக் காட்டியுள்ளது.

tahilramani
tahilramani

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் தஹில் ரமானி. தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஒருவருடம் ஆன நிலையில், சென்னைக்கு வேறு தலைமை நீதிபதியை நியமிக்க கொலீஜியம் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. அதன்படி, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமானியை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த இடமாற்றத்தை ஏற்க மறுத்து, கொலீஜியத்துக்கு கோரிக்கை வைத்தார் தஹில் ரமானி. ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். இந்த நிலையில், தஹில் ரமானி இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

tahilramani
tahilramani

இதனிடையே, அவரின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், தஹில் ரமானிக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. ``பாரம்பர்யமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த ஓராண்டுக்கு மேலாக தலைமை நீதிபதியாகப் பணியாற்றியது குறித்துப் பெருமை கொள்கிறேன். மும்பையை ஒப்பிடும்போது சீதோஷ்ண நிலை, சாலை வசதி, உள்கட்டமைப்பு வசதி என எல்லாவற்றிலும் சென்னையே சிறந்து விளங்குகிறது. சென்னையிலேயே குடியேற விரும்புவதால், இங்கே நிலம் வாங்கியுள்ளேன்” என்று பேசினார்.

இந்தநிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு வீடுகள் வாங்கியது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டிருப்பதாக, `டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்’ செய்தி வெளியிட்டுள்ளது. அதில், முறைகேடாக வீடு வாங்கியது குறித்து, விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ-க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.பி என்னும் மத்திய உளவுத்துறை தஹில் ரமானி ராஜினாமா செய்ததற்குப் பிறகு 5 பக்க அறிக்கையை அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tahilramani
Tahilramani

டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், `தஹில் ரமானியின் பணப்பரிவர்த்தனை குறித்து மத்திய உளவுத்துறை விரிவாக அலசியுள்ளது. அதன்படி, 3.18 கோடி ரூபாய்க்கு சென்னை புறநகரில் உள்ள செம்மஞ்சேரியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டு புதிய வீடுகளை அவர் வாங்கியுள்ளார். அதில் கடந்த ஜூன் - ஜூலை மாதங்களில் 1.62 கோடி ரூபாய் ஹெச்டிஎஃப்சி வங்கியின் லோன் மூலமாக செலுத்தப்பட்டுள்ளது. மீதியுள்ள 1.56 கோடி ரூபாய் சொந்த சேமிப்பிலிருந்து செலுத்தப்பட்டுள்ளது

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தஹில் ரமானி விவகாரம் - ஒரு டைம்லைன்!

6 வங்கிக் கணக்குகளை மத்திய உளவுத்துறை பட்டியலிட்டுள்ளது. அதில் தஹில் ரமானியின் கணவருடன் சேர்ந்து 3 ஜாயின்ட் அக்கவுன்டுகளும் தாயுடன் சேர்த்து மற்றொரு வங்கிக் கணக்கு, வருமான கணக்கு மற்றும் மகனுடைய வங்கி கணக்குகள் இருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜூலை 8-ம் தேதி அவரது தாயுடனான ஜாயின்ட் அக்கவுன்டிலிருந்து, அவரது கணக்கில் 18 லட்ச ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

Vijaya Kamlesh Tahilramani
Vijaya Kamlesh Tahilramani

அடுத்த மாதத்திலேயே ரூ.18 லட்சம் பணம் காசோலை மூலம் ஜாயின்ட் அக்கவுன்டுக்கு வந்துள்ளது. மேலும், முக்கியப் புள்ளிகள் சம்பந்தப்பட்ட தமிழ்நாடு சிலை திருட்டு வழக்குகள் குறித்து விசாரிக்க நீதிபதி மகாதேவன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு அமர்வை தஹில் ரமானி கலைத்தார். இதையும் மத்திய உளவுத்துறை கோடிட்டுக் காட்டியுள்ளது’ என்று அதில் குறிப்பிட்டுள்ளது