சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

விமர்சனங்களுக்கு எதிரான விலங்கு உடையட்டும்!

தேசத்துரோக வழக்குப்பிரிவு
பிரீமியம் ஸ்டோரி
News
தேசத்துரோக வழக்குப்பிரிவு

மாவோயிஸ்ட் குழுக்கள், வடகிழக்கு மாநிலங்களில் செயல்பட்ட ஆயுதமேந்திய அமைப்புகள் என்று பலவும் வலுவிழந்திருக்கும் காலம் இது.

‘திலகரையும் காந்தியையும் கைது செய்த அதே சட்டப்பிரிவில் என்னையும் கைது செய்தார்கள்' என்று சொல்லும் அளவுக்கு தேசத்துரோக சட்டம் பெருமைக்குரியதல்ல. தேசபக்தி முழக்கம் உச்சம் பெற்றிருக்கும் இந்த வேளையில், விமர்சனம் செய்பவர்களை `பாகிஸ்தானுக்குப் போ' என்று பாதை காட்டும் இன்றைய சூழலில், ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்து தெரிவிப்பதே தேசத்துரோகம் என்று புரிந்துகொள்ளப்படுகிறது. மத்திய அரசு என்றில்லை, மாநில அரசுகளுமே சர்வசாதாரணமாக தேசத்துரோக வழக்குகளைப் பதிகின்றன. இந்தச் சூழலில் இந்திய தண்டனைச் சட்டத்தின் தேசத்துரோக வழக்குப்பிரிவு 124A உச்ச நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது நம்பிக்கை ஒளி தந்துள்ளது.

`சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் பிரிட்டிஷ் காலனியாதிக்க காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தை இன்னமும் சுமந்துகொண்டிருக்க விரும்பவில்லை' என்று மத்திய அரசு சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்ட பிறகே இது சாத்தியமாகியுள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, `இந்தச் சட்டத்தை மறு ஆய்வு செய்யும் வரை இதை இனி மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்தாது என நம்புகிறோம்' என்று கூறியுள்ளது. இது வெறும் எதிர்பார்ப்பு மட்டுமே, உத்தரவு அல்ல! `ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களை அணுகி ஜாமீன் பெறலாம்' என்றும் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.

விமர்சனங்களுக்கு எதிரான விலங்கு உடையட்டும்!
விமர்சனங்களுக்கு எதிரான விலங்கு உடையட்டும்!

`எது தேசத்துரோகம்' என்ற வரையறை இந்தச் சட்டத்தில் குழப்பமாக இருப்பதுதான் பிரச்னை. இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக 1870-ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்டம் இது. `சட்டபூர்வமாக அமைக்கப்பட்ட அரசுக்கு எதிராக அவதூறு, வெறுப்பு அல்லது அவநம்பிக்கையைத் தூண்டினால் அது குற்றம். அதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம்' என்கிறது சட்டப்பிரிவு 124A. இதை வைத்து எவரையும் தேசத்துரோகியாக நிரூபித்துவிட முடியும். அதைத்தான் பிரிட்டிஷ் அரசு செய்தது; சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த அத்தனை அரசுகளும் செய்தன.

மாவோயிஸ்ட் குழுக்கள், வடகிழக்கு மாநிலங்களில் செயல்பட்ட ஆயுதமேந்திய அமைப்புகள் என்று பலவும் வலுவிழந்திருக்கும் காலம் இது. தொழில்நுட்ப வளர்ச்சியும் வறுமை ஒழிப்புத் திட்டங்களும் பலரையும் காடுகளிலிருந்து வெளியேற்றி தேசிய நீரோட்டத்தில் கலக்கச் செய்துவிட்டது. ஆனால், இப்போதுதான் அதிக தேசத்துரோக வழக்குகள் பதியப்படுகின்றன. கடந்த 2010 முதல் இந்தியா முழுக்க 867 தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த வழக்குகளால் 13,000 பேர் சிறையில் தள்ளப்பட்டனர். இவர்களில் வெறும் 13 பேர் மட்டுமே குற்றம் புரிந்ததாக தண்டிக்கப்பட்டனர். இந்தச் சட்டம் எந்த அளவுக்குப் பழிவாங்கும் நோக்குடன் பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்தப் புள்ளிவிவரமே உணர்த்துகிறது.

இதற்கான காரணம் எளிமையானது. இந்தியாவில் 2014 மார்ச் மாதத்தில் வெறும் ஆறு கோடி பேர் மட்டுமே இணையப் பயன்பாட்டாளர்கள். இப்போது 78 கோடி பேர். தங்கள் கருத்தை வெளியில் சொல்வதற்கு தளம் இல்லாமல் இருந்த பலருக்கு, சமூக வலைதளங்கள் அந்த வாய்ப்பை வழங்கியுள்ளன. இந்தக் கருத்துச் சுதந்திரத்தை பலர் சரியாகவும், சிலர் தவறாகவும் பயன்படுத்துகின்றனர். எதிர்க்கருத்து சொல்பவர்களை தேச விரோதிகளாகச் சித்திரிக்க, அரசு இந்தச் சட்டத்தைப் பிரயோகம் செய்கிறது.

தேசத்துரோக சட்டம் குறித்துப் பலமுறை சர்ச்சை எழுந்திருக்கிறது. 1962-ம் ஆண்டு கேதார்நாத் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, `ஒரு கருத்தானது வன்முறையைத் தூண்டுவதாகவோ, பொது அமைதியைக் குலைப்பதாகவோ இருந்தால் மட்டுமே அதை தேசத்துரோகமாகக் கருத வேண்டும். வெறுமனே அரசுக்கு எதிராகப் பேசுவதை, விமர்சனம் செய்வதை எல்லாம் தேசவிரோதமாகக் கருதாதீர்கள்' என்று தீர்ப்பளித்தது.

ஆனால், அரசுகள் அப்படிச் செயல்படவில்லை என்பதுதான் பிரச்னை. குடியுரிமைச் சட்டத்தை விமர்சனம் செய்து கர்நாடகாவின் பிதார் பகுதியில் ஒரு பள்ளிக் குழந்தைகள் நாடகம் நடத்தினர். அந்தப் பள்ளி நிர்வாகம்மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது. இமாசலப் பிரதேசத்தில் வினோத் துவா என்ற பத்திரிகையாளர் மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் விமர்சனம் செய்து யூடியூப் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். உள்ளூர் பா.ஜ.க பிரமுகர் ஒருவர் தந்த புகாரின் அடிப்படையில் அவர்மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது. `இது வெறும் விமர்சனம்தான். பத்திரிகையாளர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் உண்டு' என்று அந்த வழக்கையே ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடிய நேரத்தில் திஷா ரவி என்ற சூழல் ஆர்வலரை பெங்களூரில் வைத்து டெல்லி போலீஸ் கைது செய்தது. ஒரு டூல் கிட்டை உருவாக்கி அரசுக்கு எதிராக சதி செய்ய முயன்றார் என்பது குற்றச்சாட்டு. `அரசுக்கு ஏற்படும் காயங்களுக்கு மருந்து போடுவதற்காக தேசத்துரோக வழக்கைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது' என்று போலீஸைக் கண்டித்துவிட்டு, டெல்லி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என்று பலரையும் அமைதியாக்கி சிறையில் தள்ளுவதற்கான ஆயுதமாக இந்தச் சட்டப்பிரிவு 124A பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பட்டியல் மிக நீளமானது. நடுக்க நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமி, தேசத்துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுச் சிறையிலேயே இறந்துபோனார். இன்னும் வரவர ராவ், ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட அறிவுஜீவிகள் சிறையில் வாடுகின்றனர். எதுவுமே அரசுகளைச் சலனப்படுத்தவில்லை.

2018-ம் ஆண்டு சட்ட ஆணையம் தந்த அறிக்கை, இந்தச் சட்டப்பிரிவு 124A பற்றிப் பெரும் கவலை தெரிவித்தது. `அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் கருத்துச் சுதந்திர உரிமைக்கு எதிரானதாக இந்தச் சட்டப்பிரிவு இருக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டில், அரசு சொல்வதை அப்படியே அத்தனை குடிமக்களும் திருப்பிச் சொல்வதுதான் தேசபக்தி என்பதில்லை. ஒவ்வொருவருக்கும் தங்கள் வழியில் தேசப்பற்றை வெளிப்படுத்தும் சுதந்திரம் இருக்க வேண்டும். அரசின் கொள்கைகளில் இருக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டி விவாதம் செய்வதோ விமர்சனம் வைப்பதோ தவறில்லை. அந்தக் கருத்து வெளிப்பாடு கடுமையானதாக இருக்கலாம், சிலருக்கு அது கசப்பாகவும் இருக்கலாம். ஆனால், அதை தேசத்துரோகம் என முத்திரை குத்தக்கூடாது' என்றது. சட்ட ஆணையம் தந்த அந்த அறிக்கையை அரசு சட்டை செய்யவில்லை.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் இப்படிப்பட்ட தேசத்துரோக சட்டங்களை ஒழித்துவிட்டன. 2009-ம் ஆண்டு இப்படிப்பட்ட சட்டத்தை பிரிட்டிஷ் பாராளுமன்றம் நீக்கியது. அப்போது பேசிய நீதித்துறை அமைச்சர் கிளேர் வார்ட், ``ஜனநாயகத்தின் மிக முக்கியமான அம்சமே கருத்துச் சுதந்திரம்தான். ஒவ்வொரு தனிமனிதருக்கும் அரசை விமர்சனம் செய்யும் சுதந்திரம் உண்டு. நம் நாட்டில் இப்படி ஒரு சட்டம் இருப்பதைக் காரணம் காட்டியே பல நாடுகள் தேசத்துரோக சட்டங்களை வைத்திருக்கின்றன. அரசியல் எதிர்ப்பையும் பத்திரிகைச் சுதந்திரத்தையும் அந்தச் சட்டத்தால் நசுக்குகின்றன'' என்று குறிப்பிட்டார்.

விமர்சனங்களுக்கு எதிரான விலங்கு உடையட்டும்!

அவர் இந்தியாவை மனதில் வைத்து அப்படிச் சொன்னாரா என்பது தெரியவில்லை. ஆனால், அவர்களே 'தேவையில்லாத ஆணி' என்று பிடுங்கி எறிந்துவிட்ட ஒன்றை நாம் வைத்திருக்க வேண்டுமா என்பது கேள்வி.

இந்தச் சட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு, அரசும் நீதிமன்றமும் ஒருமித்த கருத்துக்கு வந்து இதை நீக்குவதற்கு நீண்ட காலம் ஆகலாம். இடைப்பட்ட காலத்தில் நீதிமன்றத்தின் எதிர்பார்ப்பைப் புறக்கணித்துவிட்டு இந்தச் சட்டத்தைப் பலர் மீது அரசுகள் பிரயோகிக்கவும் செய்யலாம். ஆனால், எவர்மீதும் `ஆன்டி இண்டியன்' முத்திரை குத்தும் ஒரு சட்டத்தை நீக்கும் பயணத்துக்கான முதல்புள்ளியை உச்ச நீதிமன்றம் தொடங்கி வைத்திருக்கிறது என்பது ஆறுதல்.