விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன்(28). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2016-ம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து, பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்த சிறுமி, அழுது கூக்குரலிடவும் சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, பாண்டியராஜனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ கோர்ட்டில் நடந்து நடைபெற்றுவந்தது. வழக்கினை நீதிபதி தனசேகரன் விசாரித்து வந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி குற்றம்சாட்டப்பட்ட பாண்டியராஜனுக்கு, இந்திய தண்டனைச்சட்டப்பிரிவு 326-ன் கீழ் 10 ஆண்டும், போக்சோ சட்டத்தின் இரு பிரிவுகளின் கீழ் 13 ஆண்டும் என மொத்தம் 23 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசுத்தரப்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் அரசுத்தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் கலா ஆஜராகி வாதாடினார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாண்டியராஜனுக்கு தற்போது திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
