Published:Updated:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: `ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறது சிபிஐ!’ - போராட்டக்குழு வழக்கறிஞர்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், குற்றவாளிகளான காவல்துறையினரைக் கைதுசெய்த சி.பி.ஐ., தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறது.

``சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல்துறையினரைக் கைதுசெய்த சி.பி.ஐ., தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறது" என ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மதுரை மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், வழக்கு விசாரணையை டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2018, மே 22-ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கிய இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்துவருகிறது.

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 75 நபர்களில் 27 பேரிடம் விசாரணை நடத்த சம்மன் வழங்கப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில், 25 பேர் நேரில் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி 25 நபர்களின் வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Vikatan

இந்த வழக்கு சம்பந்தமாகச் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், "உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்துவருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், போராட்டத்தின்போது பொதுமக்கள் பார்க்கும்போதே 13 பேரைச் சுட்டுக் கொலை செய்த காவல்துறையினர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்யவில்லை. அவர்களை குற்றவாளிகளாகக் காட்டவில்லை.

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், குற்றவாளிகளான காவல்துறையினரைக் கைதுசெய்த சி.பி.ஐ., தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறது. விசாரணை நியாயமாக நடைபெற மீண்டும் உயர் நீதிமன்றம் செல்லவிருக்கிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு