Published:Updated:

மல்லுக்கட்டிய கர்நாடகா... தீர்த்து வைத்த உச்ச நீதிமன்றம்! - முடிவுக்கு வருமா எல்லை சர்ச்சை?

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

கர்நாடக - கேரள மாநில எல்லை சர்ச்சையில் இணக்கமான தீர்வு காணுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

கொரோனா நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய அளவில் 21 நாள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற போக்குவரத்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு 21 நாள்களுக்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்கிற பேச்சுகளும் அடிபட்டு வருகின்றன.

கர்நாடக - கேரளா எல்லை தடுப்பு
கர்நாடக - கேரளா எல்லை தடுப்பு

இந்த நிலையில் கர்நாடக - கேரளா இடையே எல்லைத் தகராறு எழுந்து தற்காலிகமாகத் தணித்து வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டமான காசர்கோட்டில்தான் அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் உள்ளன. காசர்கோடு மாவட்டத்திலிருந்து மருத்துவ உதவிகள் பெற கர்நாடக எல்லையில் உள்ள மங்களூர்தான் அருகில் உள்ளது. ஆனால், தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் கர்நாடக அரசு தன்னுடைய எல்லையை மூடி தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காசர்கோடு மாவட்டத்திலிருந்து மருத்துவ உதவிகள் பெற முடியாமல் தற்போது வரை 10 பேர் உயிரழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தீர்க்க கேரள அரசு எடுத்த முயற்சிகளும் பயனளிக்கவில்லை. இந்த நிலையில் கர்நாடக அரசு ஏற்படுத்தியுள்ள தடையை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த கேரள உயர் நீதிமன்றம்,`கர்நாடக அரசு தேசிய நெடுஞ்சாலையில் உருவாக்கியுள்ள தடுப்புகளை அகற்றக்கோரி கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.’ மேலும், `இது உயிர் சம்பந்தமான பிரச்னை. எனவே, இதில் தாமதிக்காமல் செயல்பட வேண்டும்’ என்றும் அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து சர்ச்சை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

கேரள உயர் நீதிமன்றம்
கேரள உயர் நீதிமன்றம்

ஆனால், கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. இந்த விவகாரத்தை மேலும் தீவிரமாக்காமல் இணக்கமான தீர்வு கண்டு இரண்டு மாநில அரசுகளும் பதற்றத்தைத் தணிக்க வேண்டும். இதை ஒரு சட்டப்பிரச்னை ஆக்க வேண்டாம்’ எனக் கருத்து தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை இரு மாநில சுகாதாரத் துறை செயலாளர்களுடன் கலந்தாலோசனை நடத்தியது. இந்த நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் தற்போது எந்த சர்ச்சையும் இல்லை, நோயாளிகளை கர்நாடகாவுக்குள் அனுமதிப்பதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட்டுவிட்டன என மத்திய அரசு தெரிவித்தது. இதை ஏற்றுக்கொண்டு இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.

இதன்படி கேரளாவிலிருந்து வருகிற அரசு ஆம்புலன்ஸ் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படும், கர்நாடக எல்லையிலே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். மற்ற சிகிச்சை பெற வருகிற நோயாளிகளுக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவச் சான்று பெற்று வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி எழுதிய கடிதம்
காங்கிரஸ் எம்.பி எழுதிய கடிதம்

விசாரிக்காமலே தள்ளுபடியா?

இந்த நிலையில் இதே விவகாரம் தொடர்பாக மனுத்தாக்கல் செய்திருந்த கேரள காங்கிரஸ் எம்.பி ராஜ்மோகன் உன்னித்தன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ``மத்திய அரசின் வாதத்தை ஏற்று, அனைத்து தரப்பினரையும் விசாரிக்காமல் உச்ச நீதிமன்றம் அனைத்து மனுக்களையும் முடித்து வைத்துள்ளது. ஆனால், தற்போதும் கேரள எல்லையில் கட்டுப்பாடுகள் தொடர்வதாகச் செய்திகள் வருகின்றன. கேரள ஆம்புலன்ஸ் சென்று வருவதற்கு கர்நாடக காவல்துறையினர் பல்வேறு தடங்கல்களை ஏற்படுத்தியிருக்கின்றனர்" என்று எழுதியுள்ளார்.

கர்நாடகா - கேரளா எல்லை சர்ச்சை ஓயுமா... இனியும் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு