அலசல்
சமூகம்
Published:Updated:

ஒடுக்கப்படும் ஊடக சுதந்திரம்... மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்!

ஊடக சுதந்திரம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஊடக சுதந்திரம்

இந்தியாவில் ஊடக சுதந்திரம் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. எமர்ஜென்சியைவிட மோசமான ஒரு சூழல் தற்போது நிலவுகிறது

‘இந்தியாவில் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுகிறது’ என்ற விமர்சனம் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கும் நிலையில், ‘மீடியா ஒன்’ சேனலுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு எதிராகச் சாட்டையைச் சொடுக்கியிருக்கிறது!

‘மீடியா ஒன்’ வழக்கு!

கேரளாவைச் சேர்ந்த எம்.பி.எல் (Madhyamam Broadcasting Limited) என்ற ஊடக நிறுவனத்தால் நடத்தப்படும் ‘மீடியா ஒன்’ என்ற செய்தி சேனலுக்கான உரிமம் 2021-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் காலாவதியானது. உரிமத்தைப் புதுப்பிக்க, மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையிடம் `மீடியா ஒன்’ விண்ணப்பம் செய்தது. ஆனால், ‘பாதுகாப்பு’ காரணங்களால், உரிமத்தைப் புதுப்பிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. அதை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில் `மீடியா ஒன்’ நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், ‘‘தேசப் பாதுகாப்பு காரணங்களுக்காக `மீடியா ஒன்’ சேனலுக்கு உரிமம் வழங்குவதில்லை என்கிற மத்திய அரசின் முடிவு சரியானது” என்று கேரளா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்த உத்தரவுக்கு எதிராக `மீடியா ஒன்’ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி அமர்வு, கேரளா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துசெய்ததுடன், மத்திய அரசின் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்தது. “அரசை விமர்சித்தனர் என்பது மட்டுமே ஒரு செய்தி நிறுவனத்தை முடக்குவதற்குக் காரணமாக இருக்க முடியாது. அரசின் கொள்கைகள், செயல்பாடுகள் குறித்து ‘மீடியா ஒன்’ சேனல் விமர்சித்ததை, தேசவிரோதம் என்று கருத முடியாது. துடிப்பான ஜனநாயகத்துக்கு, பத்திரிகை சுதந்திரம் மிகவும் அவசியம். ‘தேசப் பாதுகாப்பு’ என்ற பெயரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கக் கூடாது” என்று கறார் கருத்துகளைத் தீர்ப்பில் குறிப்பிட்டது உச்ச நீதிமன்றம். மேலும், `மீடியா ஒன்’ சேனலுக்கு அனுமதி மறுத்த மத்திய அரசின் உத்தரவையும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்துசெய்தது.

ஊடக சுதந்திரம்
ஊடக சுதந்திரம்

சீலிடப்பட்ட உறை!

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தனது தரப்பு கருத்துகளை சீலிடப்பட்ட உறைக்குள் வைத்து நீதிபதிகளிடம் அளித்தது. மத்திய அரசின் இந்த அணுகுமுறையை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர். பயங்கரவாதம் போன்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், அரசின் கருத்துகள் சீலிடப்பட்ட உறைக்குள் வைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் நடைமுறை இருந்துவருகிறது. அரிதிலும் அரிதான வழக்குகளில் கடைப்பிடிக்கப்படும் இந்த நடைமுறையை, மற்ற வழக்குகளிலும் கடைப்பிடிப்பதை வாடிக்கையாக மாற்றியிருக்கிறது மத்திய அரசு. சமீபத்தில் அதானி வழக்கிலும், தற்போது `மீடியா ஒன்’ வழக்கிலும் சீலிடப்பட்ட உறையை மத்திய அரசு அளித்தது. அதை விமர்சித்த நீதிபதிகள், “எதிர்த்தரப்பினருக்குத் தகவல்களை மூடிமறைக்க, இதை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது” என்று மத்திய அரசின் தலையில் கொட்டுவைத்தனர்.

இந்தியாவில் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதாக ‘எல்லைகள் கடந்த பத்திரிகையாளர்கள்’ (Reporters Without Borders) உள்ளிட்ட அமைப்புகளும், ஓய்வுபெற்ற நீதிபதிகள், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கடந்த சில ஆண்டுகளாகக் கருத்து தெரிவித்துவருகிறார்கள். இந்த நிலையில், `மீடியா ஒன்’ வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

எமர்ஜென்சியைவிட மோசம்!

“இந்தியாவில் ஊடக சுதந்திரம் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. எமர்ஜென்சியைவிட மோசமான ஒரு சூழல் தற்போது நிலவுகிறது” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம். அவரிடம் பேசினோம்.

“இந்தியாவில் கருத்து சுதந்திரம் எந்த அளவுக்கு நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது என்பதற்கு சமீபத்திய உதாரணம் `மீடியா ஒன்’ வழக்கு. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. கருத்துச் சுதந்திரம் அடிப்படை உரிமை என்பதை இந்திய அரசியல் சாசனம், பிரிவு 19-ல் உறுதிசெய்திருக்கிறது. அதை, இப்போது உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மீண்டும் உறுதிசெய்திருக்கிறது. அதே நேரத்தில், இது போன்ற பிரச்னைகளுக்கு உச்ச நீதிமன்றம் வரை செல்ல வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. காஷ்மீரில் இணைய சேவை முடக்கப்பட்ட விவகாரத்துக்குக்கூட உச்ச நீதிமன்றத்துக்குத்தான் செல்ல வேண்டியிருந்தது. இது மிகவும் கவலைக்குரியது.

ஏ.எஸ்.பன்னீர்செல்வம்
ஏ.எஸ்.பன்னீர்செல்வம்

இந்தியாவில் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைத்தான் இது காட்டுகிறது. அரசியல் சாசனத்தின் பிரிவு 19 பற்றிய தெளிவான பார்வை உயர் நீதிமன்றத்துக்கும், கீழமை நீதிமன்றங்களுக்கும் இருக்க வேண்டியது அவசியம். அப்படி இருந்திருந்தால், கேரள உயர் நீதிமன்றத்திலேயே `மீடியா ஒன்’ சேனலுக்கு நீதி கிடைத்திருக்கும். இந்தியாவில் தற்போது ஊடகங்கள் சந்தித்துவரும் நெருக்கடிகள் எமர்ஜென்சி காலத்தில் இருந்ததைவிட மோசமானவை. காரணம், எமர்ஜென்சி காலத்தில் எவற்றுக்கெல்லாம் அனுமதி இல்லை என்பது வெளிப்படையாகச் சொல்லப்பட்டது. அப்படி இல்லாமல், பல வகைகளில் அனைத்து வகையான ஊடகங்களின் உரிமைகளும் தற்போது நசுக்கப்படுகின்றன” என்கிறார் ஏ.எஸ்.பன்னீர்செல்வம்.

தற்போது, இந்தியாவில் செய்தி நிறுவனங்கள் பல சவால்களையும், நெருக்கடிகளையும் சந்தித்துவருகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றாக ‘டேக் டௌன்’ என்ற பிரச்னை இருக்கிறது. இணையதளங்களில் வெளியிடப்படும் விமர்சனபூர்வமான கட்டுரைகளையும் செய்திகளையும் ‘நீக்குங்கள்’ (Take Down) என்ற நெருக்கடி செய்தி நிறுவனங்களுக்குத் தரப்படுகிறது. அந்த வகையில், உலக அளவில் அதிகபட்சமான ‘டேக் டௌன்’ நடப்பது இந்தியாவில்தான் என்கிறார்கள், இது பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் மூத்த ஊடகவியலாளர்கள்.

ஓரிரு ஊடகங்களை முடக்கலாம். 140 கோடி மக்களின் கண், காது, வாய்களையும் அப்படி மூடிவிட முடியுமா என்ன?!