Published:Updated:

``இணையம் என்பது அடிப்படை உரிமை!'' - காஷ்மீருக்காக கண்டித்த உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசு விதித்துள்ள இணையதளச் சேவையை விலக்க வேண்டும் என்றும், தகவல் தொடர்பு கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"இதுதான் மிகச் சிறந்த காலம்... இதுதான் மிகவும் மோசமான காலம், இதுதான் அறிவாளிகளின் காலம்... இதுதான் முட்டாள்களின் காலம்... இதுதான் வசந்த காலத்தின் நம்பிக்கை... இதுதான் குளிர் காலத்தின் அவநம்பிக்கை…” என்று பிரபல ஆங்கில இலக்கிய எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய வரிகளின் மேற்கோளோடு தொடங்குகிறது, நீதிபதி என்.வி.ரமணாவின் தீர்ப்பு. ஜம்மு-காஷ்மீரில் இணைய சேவைகளைக் காலவரையின்றி நிறுத்திவைப்பது நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசு விதித்துள்ள இணையதளச் சேவையை விலக்க வேண்டும் என்றும், தகவல் தொடர்பு கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இரும்புத்திரை காஷ்மீர்
இரும்புத்திரை காஷ்மீர்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-வது சட்டத்தை ரத்து செய்தது மத்திய அரசு. ஜம்முவும் காஷ்மீரும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. அதையடுத்து, அங்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. இதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், நேற்று உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின்மீது முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

என்.வி.ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, “இணையம் என்பது கருத்துச்சுதந்திரம். அது, அடிப்படை உரிமையான சட்டப்பிரிவு 19-ன் கீழ் வருகிறது. 144 சட்டப்பிரிவை வைத்து மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கக்கூடாது. இணைய சேவையைக் காலவரையின்றி நிறுத்தும் உத்தரவு அனுமதிக்கப்படாது. ஏழு நாள்களுக்குள், இடைநீக்க உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளது. இணையச் சேவைகளை இடைநிறுத்துவது, அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். இணையத்தை நிறுத்தும் போதெல்லாம் அரசாங்கம் விரிவான காரணத்தை அளிக்க வேண்டும். இணையத்தை முற்றிலுமாக நிறுத்துவது என்பது ஒரு கடுமையான நடவடிக்கையாகும். மேலும், 'ஒரு சூழ்நிலையைச் சமாளிக்க வேறு மாற்று இல்லாதபோதுதான் அரசாங்கம் இதை நாட முடியும்' என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

கபில் சிபல்
கபில் சிபல்

கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி, செய்தி நாளேடான 'காஷ்மீர் டைம்ஸ்' ஆசிரியர் அனுராதா பாசின் மற்றும் அரசியல் ஆய்வாளர் தெஹ்ஸீன் பூனவல்லா, நீதிமன்றத்தில் ஜம்மு-காஷ்மீரில் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டை உடனடியாக நீக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தனர்.

அவர்களின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பிருந்தா குரோவர், “இணையக் கட்டுப்பாடுகள் அரசியல் அமைப்பிற்கு அப்பாற்பட்டவை” என்று வாதிட்டார். பின்னர், காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “ஏழு மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட பகுதியைப் பூட்டிவைக்கக்கூடாது; அந்த மக்களின் இயல்பு வாழ்க்கையை 100 நாள்கள் தடுத்து நிறுத்த முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

காஷ்மீர்
காஷ்மீர்
`குண்டுகள் விழும்போது பதுங்குக் குழிகளில் படிப்போம்!’- போர்ச் சூழலில் வாழும் காஷ்மீர் குழந்தைகள்

ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, உச்ச நீதிமன்றத்தில், 370-வது பிரிவு கைவிடப்பட்ட பின்னர் 144-வது பிரிவு மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், அதன்பிறகு புதிய உத்தரவுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்றும் கூறினார். ஜம்மு-காஷ்மீரில் இரவு நேரங்களில் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்றும் மேத்தா கூறினார்.

அவரே தொடர்ந்து, “எவ்வாறாயினும் அரசாங்கத்தின் முடிவுக்குப் பின்னர் ஏற்படக்கூடிய பயங்கரவாதத்தையும் வன்முறையையும் தடுப்பதற்கான ஒரு தடுப்பு முயற்சி நியாயமாகும். குடிமக்களின் உயிரைப் பாதுகாக்க அரசாங்கம் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், அது முட்டாள்தனமாக இருந்திருக்கும்” என்ற கருத்தையும் தெரிவித்தார்.

Justice N.V.Ramana
Justice N.V.Ramana

இருப்பினும் கபில்சிபல், "கடந்த காலத்தை மாற்ற முடியாது. இந்த வழக்கு எதிர்காலத்தைப் பற்றியது. இந்தியா போன்ற நாட்டில் ஜனநாயகம் மற்றும் தேசியப் பாதுகாப்பை முன்னிறுத்தும் கொள்கைகள் வகுக்கப்படவில்லை என்றால், அது ஒரு பிரச்னையாக மாறும்” என்றார்.

வழக்கு விசாரணையின்போது, ​​மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, “உச்ச நீதிமன்றமே செப்டம்பர் மாதம் ஓர் உத்தரவில், ‘அனைத்து வகையான தகவல் தொடர்புகளையும் மீட்டெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது’ என்றும், "எல்லா வகையான தகவல் தொடர்புகள் என்றால், நிலப்பரப்புகளை மட்டும் குறிக்காது, இணையத்தையும் சேர்த்தே குறிக்கும்" என்றும் சுட்டிக்காட்டினார்.

நீதிபதி கவாய், சஞ்சய் ஹெக்டேவுக்கு பதிலளிக்கும் விதமாக, “அதே உத்தரவில் நீதிமன்றம், தேசியப் பாதுகாப்பை முதலில் மனதில்கொண்டு, இணையச் சேவையை அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது” என்று கூறினார்.

`காஷ்மீர் இல்லாத இந்தியா மேப்!'- யோகி கார்ட்டூனால் ட்ரோலுக்கு ஆளான மகிளா காங்கிரஸ்!

உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக நாடுகளில் மிகப்பெரிய இணைய முடக்கம் என்பது காஷ்மீரில்தான் அரங்கேறியிருக்கிறது. அதனால், காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தனிப்பட்ட இழப்புகளைத் தாண்டி, கடந்த ஆறு மாதங்களில் இணைய முடக்கத்தால் காஷ்மீரில் பல கோடி மதிப்புள்ள வியாபாரமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது, தேசத்துக்கான இழப்பு என்பதையும் அரசு கருத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகும்.

- கௌசிகா இளங்கோவன்

அடுத்த கட்டுரைக்கு