Published:Updated:

ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார்: பெரும் சதி இருப்பதாக வழக்கை முடித்துவைத்த உச்ச நீதிமன்றம்!

ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய்

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது தொடரப்பட்ட பாலியல் புகாரில் பிணையிலுள்ள சதித் திட்டம் தொடர்பான வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் ஓய்வுபெற்றார். இவர் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்துவருகிறார். 2018-ம் ஆண்டு கோகாய் தலைமை நீதிபதியாக இருந்த காலகட்டத்தில், கோகாய் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அவரது இல்லத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவர் குற்றம்சாட்டினார். அந்தக் குற்றச்சாட்டைப் புகார்க் கடிதமாக எழுதி, உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கு அனுப்பி முறையிட்டார்.

ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய்

பெரும் சர்ச்சையைக் கிளப்பிய இந்த விவகாரத்தில், தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, முழுவதுமாக மறுத்த கோகாய், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சதி நடப்பதாகக் கூறினார்.

பெண்வைத்த புகாரையடுத்து, தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம்பெற்ற ஓர் உச்ச நீதிமன்ற விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டது. முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக்கின் அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

வழக்கு முடிக்கப்படக் காரணம் என்ன?

தேசிய குடிமக்கள் பதிவேடு வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில், கடினமான முடிவுகளை எடுத்த ரஞ்சன் கோகாய்-க்கு எதிராகச் சதி நடப்பதாக 2019-ம் ஆண்டு வழக்கறிஞர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். இதைக் கருத்தில்கொண்டு, உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இது குறித்த விசாரணையை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

ஏ.கே.பட்நாயக்கின் அறிக்கையில், ரஞ்சன் கோகாய்க்கு எதிராக மிகப்பெரும் சதி நடந்திருப்பதாகவும், அந்த உண்மை தவிர்க்க முடியாதது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதை மேற்கோள்காட்டியே நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் தொல்லை வழக்கை முடித்துவைத்தது உச்ச நீதிமன்றம்.

அடுத்த கட்டுரைக்கு