Published:Updated:

லட்சுமணன் கோடு உதாரணம்... என்ன செய்யப்போகிறார் பிரசாந்த் பூஷண்?

 பிரசாந்த் பூஷண்
பிரசாந்த் பூஷண்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், `மன்னிப்புக் கோர மாட்டேன்’ என்று கூறியிருக்கிறார். ஆனாலும், தன் கருத்தை மறுபரிசீலனை செய்ய பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் நாக்பூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விருந்தினராகத் தங்கியிருந்தார். அப்போது, விலை உயர்ந்த `ஹார்லி டேவிட்சன்’ மோட்டார் சைக்கிளில் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது. அந்த மோட்டார் சைக்கிள், உள்ளூர் பா.ஜ.க பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமானது என்று செய்திகள் வெளிவந்தன.

மோட்டார் சைக்கிளில் எஸ்.ஏ.பாப்டே
மோட்டார் சைக்கிளில் எஸ்.ஏ.பாப்டே

அந்தப் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த பூஷண், ``தேசத்தின் குடிமக்கள் நீதியைப் பெறுவதற்கான வாய்ப்பை மறுக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தைப் பூட்டிவைத்துவிட்டு, பா.ஜ.க தலைவரின் மோட்டார் சைக்கிளில் முகக்கவசமோ, தலைக்கவசமோ அணியாமல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பயணம் செய்கிறார்" என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து பிரசாந்த் பூஷணுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவுசெய்தது.

அந்த வழக்கு கடந்த ஜூலை 22-ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து பதில் அளிக்குமாறு பிரசாந்த் பூஷணுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதன் பிறகு நடைபெற்ற விசாரணையின்போது, ``தலைமை நீதிபதி அமர்ந்திருந்த மோட்டார் சைக்கிள் ஸ்டாண்டு போட்டு நிறுத்தப்பட்டிருந்ததைக் கவனிக்காமல் கருத்து தெரிவித்துவிட்டேன். ஸ்டாண்டு போட்டு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் அமர்வதற்கு தலைக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்கிறேன்.

எஸ்.ஏ.பாப்டே
எஸ்.ஏ.பாப்டே

எனவே, எனது கருத்தில் இடம்பெற்ற அந்தப் பகுதிக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். மற்ற பகுதிகளுக்கு வருத்தம் இல்லை" என்று கூறினார். பிரசாந்த் பூஷண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே, ``பிரசாந்த் பூஷண் கூறிய கருத்து, நீதிமன்றத்தின் தரத்தைத் தாழ்த்துவது ஆகாது" என்று வாதிட்டார். இந்த வழக்கில், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் கடந்த 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அப்போது, தண்டனை விவரம் ஆகஸ்ட் 20-ம் தேதி தெரிவிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து வழக்கறிஞர்கள் அதிர்ச்சி தெரிவித்தனர். சில இடங்களில் பிரசாந்த் பூஷணுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர். ``பிரசாந்த் பூஷண் ட்விட்டரில் வெளியிட்ட கருத்துகள் பொருத்தமற்றதாக இருக்கலாம். ஆனால், அவை நீதிமன்ற அவமதிப்பு ஆகாது” என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் கருத்து தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷனின் முன்னாள் தலைவருமான விகாஸ் சிங், ``பிரசாந்த் பூஷணின் கருத்தை நான் ஏற்கவில்லை. அதே நேரத்தில், அது அவரின் கருத்து சுதந்திரத்தின் ஒரு பகுதி. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதல்ல” என்றார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவிடம் நாம் கேட்டபோது ``தலைமை நீதிபதி மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்திருந்தது பற்றி ட்விட்டர் கருத்து சொன்னதற்காக, இப்படியொரு தீர்ப்பு வழங்கியிருப்பது தவறு என்று நினைக்கிறேன். நீதிபதி, நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டு அவருக்குப் பிடித்த பொழுதுபோக்கில் இருக்கும்போது, இன்னொருவர் நீங்கள் பொழுதுபோக்குகிறீர்கள். நீதிமன்றம் மூடியிருக்கிறது என்று சொல்வது ஒரு வருத்தம்தான். அது நீதிமன்றத்தின் மீது இருக்கும் நம்பிக்கையில் சொல்லக்கூடிய வருத்தமே தவிர, நீதிமன்ற அவமதிப்பு ஆகாது” என்றார்.

பிரசாந்த் பூஷணுக்கு ஆகஸ்ட் 20-ம் தேதி தண்டனை குறித்து அறிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில், ``உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாம் தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை, எனது தண்டனை குறித்து விசாரிக்கக்கூடாது" என்று உச்ச நீதிமன்றத்திடம் பிரசாந்த் பூஷண் வேண்டுகோள் வைத்திருந்தார். ஆனால், அவரது வேண்டுகோளை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

 பிரசாந்த் பூஷண்
பிரசாந்த் பூஷண்

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது, பிரசாந்த் பூஷண் தன் கருத்தை `மறுபரிசீலனை' செய்வதற்கு உச்ச நீதிமன்றம் 2-3 நாள்கள் கால அவகாசம் வழங்கியது. ``இந்த பூமியில் தவறிழைக்காதவர்கள் என்று யாரும் கிடையாது. நீங்கள் நூறு நல்ல செயல்கள் செய்திருக்கலாம். அவை, பத்து குற்றங்கள் புரிவதற்கான லைசென்ஸ் கிடையாது. நடந்தது நடந்ததுதான். ஆனால், சம்பந்தப்பட்ட நபர் தான் செய்தது தவறு என்பதை உணர வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று நீதிபதி அருண் மிஸ்ரா கூறினார்.

ஸ்டெர்லைட்... தீர்ப்புக்குப் பிறகு அரசு செய்ய வேண்டியது என்ன?

நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் தன் கருத்துகளை முன்வைத்தார். ``நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான் குற்றவாளி என்பதைக் கேட்டு வேதனைப்படுகிறேன். எனக்கு தரப்படப்போகும் தண்டனை குறித்து நான் வேதனைப்படவில்லை. நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதற்காகவே வேதனைப்படுகிறேன். ஜனநாயகத்தையும் அதன் மாண்புகளையும் பாதுகாப்பதற்கு வெளிப்படையான விமர்சனம் என்பது அவசியம் என்று நம்புகிறேன். நீதித்துறை சிறப்பாகச் செயல்படுவதற்கான முயற்சியாக ட்விட்டரில் நான் கூறிய கருத்துகளைப் பார்க்க வேண்டும். அந்த ட்வீட்கள் மூலம் உயர்ந்த கடமையை ஆற்றியதாக நான் கருதுகிறேன். மன்னிப்புக் கோருவது என்பதை, கடமை தவறியதாகக் கருதுகிறேன். நான் கருணை வழங்குமாறு கோரவில்லை. நீதிமன்றம் வழங்கக்கூடிய எந்தத் தண்டனையையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்” என்றார் பிரசாந்த பூஷண்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

உங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று பிரசாந்த் பூஷணிடம் உச்ச நீதிமன்றம் கூறியது. அதற்கு, ``நீதிபதிகள் விரும்பினால் என் கருத்தை நான் மறுபரிசீலனை செய்யலாம். ஆனால், என் கருத்தில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது. நீதிபதிகளின் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. என் வழக்கறிஞருடன் ஆலோசனை செய்கிறேன்” என்றார் பிரசாந்த் பூஷண்.

``எல்லாவற்றுக்கும் `லட்சுமணன் கோடு’ இருக்கிறது. ஏன் அதைத் தாண்டுகிறீர்கள்? 24 ஆண்டுகளாக நீதிபதியாகப் பணியாற்றி வருகிறேன். இத்தனை ஆண்டுகளில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யாரையும் நான் தண்டித்தது இல்லை. இதுதான் என் முதல் உத்தரவு” என்றார் நீதிபதி அருண் மிஸ்ரா.

 பிரசாந்த் பூஷண்
பிரசாந்த் பூஷண்

தன் கருத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று பிரசாந்த் பூஷண் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்துவிட்டார். மன்னிப்பு கோர மாட்டேன் என்றும் கூறிவிட்டார். ஆனாலும், மன்னிப்பு வழங்குவதற்கான அதிகாரம் நீதிமன்றத்துக்கு இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு