Published:Updated:

வீடியோ கான்ஃபரன்சிங், கைதிகள் விடுதலை... ஊரடங்கு நாள்களில் நீதித்துறை எப்படி செயல்படும்? #Corona

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து அரசுத் துறைகளைப் போலவே நீதித்துறையும் முடங்கியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசுத் துறைகள் அனைத்தும் முடங்கியுள்ளன. தனியார் நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களுக்கு work from home அறிவித்திருக்கின்றன. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் நடமாட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களைப் போல எப்போதும் பரபரப்புடன் காணப்படுபவை நீதிமன்றங்கள். கொரோனா அச்சுறுத்தலால் நீதிமன்றங்களும் தங்களுடைய பணிகளைப் பெரும்பாலும் சுருக்கிக்கொண்டன. இடைப்பட்ட காலத்தில் நீதிமன்றங்கள் எவ்வாறு செயல்பட இருக்கின்றன என்பது பற்றிய வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளன.

கொரோனா
கொரோனா

கால அவகாசம் நீட்டிப்பு:

குறிப்பிட்ட சில வழக்குகள், மேல்முறையீடுகள், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வெவ்வேறு கால அவகாசங்கள் இருக்கின்றன. இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் கீழமை நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன. வழக்குகள் நடைபெறுவதும் இதனால் தாமதம் அடைந்துள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள் வழக்குகளைத் தாக்கல்செய்வதிலும், மேல்முறையீடசெய்வதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், அனைத்து விதமான வழக்குகளுக்கும் உள்ள கால அவகாசத்தை, கால வரையின்றி நீட்டித்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் தாக்கல் செய்யப்பட முடியாத எந்தவொரு மனுக்களையும் பின்னர் தாக்கல் செய்துகொள்ளலாம். உரிய நேரத்தில் தாக்கல்செய்யப்பட முடியவில்லை என்பதற்காக, எந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் போகாது என்று தனக்குள்ள பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைதிகளுக்குப் பிணை:

இந்தியச் சிறைகள், அதன் கொள்ளவைவிடவும் அதிகமாக கைதிகளைக் கொண்டிருப்பதும், சிறைகளில் உள்ள மூவரில் இருவர் விசாரணைக் கைதிகள் என்பதும் அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவலே. விசாரணைக் கைதிகள் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று. இது தொடர்பான மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அளவுக்கு மீறி கைதிகளைச் சிறைகளில் வைத்திருப்பது ஆபத்தானது என்று தெரிவிக்கப்பட்டது.

சிறை
சிறை

அரசுத் தரவுகளின்படி இந்தியாவில் உள்ள 1,339 சிறைகளில் 4,66,084 கைதிகள் உள்ளனர். இந்தியச் சிறைகள் தன்னுடைய கொள்ளவையும் மீறி 17% அதிகமான கைதிகளைக் கொண்டுள்ளது. இதனால் சிறையில் கட்டுப்பாடுகளைப் பின்தொடர்வதிலும் சிக்கல் உள்ளது. இதை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் விசாரணைக் கைதிகள் மற்றும் ஏழு ஆண்டுகளுக்கும் குறைவாக தண்டனை பெற்ற கைதிகளையும் பரோலில் விடுவிக்க வேண்டும் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக் கைதிகளை முதலில் பிணையில் விடுவிக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் தண்டிக்கப்பட்ட கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

வீடியோ கான்ஃபரன்சிங்:

இந்தியாவில் ஊரடங்கு காலம் முடிகின்ற வரையில் எந்த நீதிமன்றமும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகங்களும் மூடப்பட்டுள்ளன. நீதிமன்ற ஊழியர்கள் தொடங்கி வழக்கறிஞர்கள் வரை யாரும் நீதிமன்றத்திற்குள் நுழையக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மிகவும் அவசரமான வழக்குகளை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் கையாள உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. இதற்கான சோதனை முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

வீடியோ கான்ஃபரன்சிங்
வீடியோ கான்ஃபரன்சிங்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அனைத்து உயர் நீதிமன்றங்களும் தங்களின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட நீதிமன்றங்களுக்கும், தீர்ப்பாயங்களுக்கும் இந்த உத்தரவை விரிவுபடுத்திவருகின்றன.

சாதாரண வழக்குகளின் விசாரணைகள் அனைத்தும் ஏப்ரல் 14 வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளன. மிகவும் அவசரமான வழக்கென்றால், நீதிமன்றப் பதிவாளருக்கு அவரின் அதிகாரபூர்வ மின்னஞ்சல் மூலம் பதிவுசெய்யப்பட வேண்டும். அதன் பிறகு தலைமை நீதிபதியின் அனுமதியைப் பெற்று, வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் வழக்கின் விசாரணை நடைபெறும்.

அடுத்த கட்டுரைக்கு