Published:Updated:

Bilkis Bano Case: `விசாரணையை வேண்டுமென்றே தாமதப்படுத்துகின்றனர்!' - உச்ச நீதிமன்ற நீதிபதி அதிருப்தி

உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப்

``என்னுடைய கடைசி வேலைநாள் மே 19. ஆனால், இந்த விஷயத்தை தற்போதைய நீதிமன்ற அமர்வு விசாரிப்பதை நீங்கள் விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது." - நீதிபதி கே.எம்.ஜோசப்

Published:Updated:

Bilkis Bano Case: `விசாரணையை வேண்டுமென்றே தாமதப்படுத்துகின்றனர்!' - உச்ச நீதிமன்ற நீதிபதி அதிருப்தி

``என்னுடைய கடைசி வேலைநாள் மே 19. ஆனால், இந்த விஷயத்தை தற்போதைய நீதிமன்ற அமர்வு விசாரிப்பதை நீங்கள் விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது." - நீதிபதி கே.எம்.ஜோசப்

உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப்

குஜராத்தில் தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த 2002-ல், சபர்மதி ரயில் எரிப்புச் சம்பத்தின் பின்னணியில் நடந்த இந்து முஸ்லிம் வகுப்புவாத கலவரம் நாட்டையே உலுக்கியது. இந்தக் கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அதே சமயம் இவரின் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். ஆனால், இந்தக் கொடூரமான வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த 11 பேரை, கடந்த சுதந்திர தினத்தன்று குஜராத் திடீரென விடுவித்தது. இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பின. குஜராத் அரசின் இத்தகைய முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

பில்கிஸ் பானு வழக்கு
பில்கிஸ் பானு வழக்கு

அந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்துவருகிறது. இந்த வழக்கில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற விசாரணையில், `எதனடிப்படையில் குற்றவாளிகளை விடுதலை செய்தீர்கள்?' என குஜராத் அரசை சரமாரியாகக் கேள்வி கேட்டு விடுதலை செய்ததற்கான காரணத்தை ஆவணங்களாகச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, எதிர் தரப்பு வழக்கறிஞர் பிரமாணப் பாத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டபோது நீதிபதி கே.எம்.ஜோசப் தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி கே.எம்.ஜோசப், ``இங்கு எதற்கான முயற்சிகள் நடக்கின்றன என்பது நன்றாகவே தெரிகிறது. ஜூன் 16-ம் தேதி நான் ஒய்வு பெறுகிறேன். என்னுடைய கடைசி வேலைநாள் மே-19. ஆனால், இந்த விஷயத்தை தற்போதைய நீதிமன்ற அமர்வு விசாரிப்பதை நீங்கள் விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இது எனக்கு நியாயமாகப்படவில்லை.

உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப்
உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப்

நீங்கள் நீதிமன்ற அதிகாரிகள். ஒரு வழக்கில் நீங்கள் வெற்றி பெறலாம் அல்லது தோல்வியடையலாம். ஆனால், நீதிமன்றத்துக்கான உங்களின் கடமை என்ன என்பதை மறந்துவிடாதீர்கள்" என்று கூறினார்.

மேலும், பில்கிஸ் பானு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றம்சாட்டப்பட்டவர்கள் வேண்டுமென்றே வழக்கை தாமதப்படுத்துவதாகவும், நீதிக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் எனவும் கூறினார்.

முன்னதாக நீதிபதி கே.எம்.ஜோசப் இந்த வழக்கை விடுமுறை நாளில் விசாரிக்க முன்வந்தபோது, மத்திய அரசு, குஜராத் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இதை ஏற்க மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.