சமூகம்
அலசல்
அரசியல்
Published:Updated:

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம்!” - ஆளுநர்களுக்கு குட்டுவைத்த உச்ச நீதிமன்றம்

வினய் குமார் சக்சேனா, அரவிந்த் கெஜ்ரிவால்
பிரீமியம் ஸ்டோரி
News
வினய் குமார் சக்சேனா, அரவிந்த் கெஜ்ரிவால்

நிர்வாக சேவைகள் தொடர்பான அதிகாரம், டெல்லி அரசிடமே இருக்க வேண்டும். அதற்கு, துணைநிலை ஆளுநர் கட்டுப்பட வேண்டும்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, ‘டெல்லி யூனியன் பிரதேச அரசின் அதிகாரத்துக்குள் மத்திய அரசு தலையிடுகிறது’ என்று குற்றம்சாட்டிவந்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த நிலையில், டெல்லி யூனியன் பிரதேச அரசின் அதிகாரங்களைக் குறைத்து, துணைநிலை ஆளுநரின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கான சட்டத் திருத்தம் ஒன்றை 2021-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. ‘தேசியத் தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டத் திருத்தம் 2021’ என்றழைக்கப்படும் அந்தச் சட்டத் திருத்தம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது. அந்தச் சட்டத்தின் மூலம், டெல்லி சட்டமன்றத்தின் அதிகாரத்தைக் காட்டிலும், துணைநிலை ஆளுநருக்குப் பெருமளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதனால் டெல்லியில் ஆளும் அரசுக்கும், ஆளுநருக்குமிடையே கடும் மோதல் நிலவிவந்தது.

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம்!” - ஆளுநர்களுக்கு குட்டுவைத்த உச்ச நீதிமன்றம்

2022-ம் ஆண்டு, மே 26-ம் தேதி டெல்லியின் புதிய ஆளுநராக வினய் குமார் சக்சேனா நியமிக்கப்பட்டார். அவர், கெஜ்ரிவால் அரசு அனுப்பிவைத்த 45-க்கும் மேற்பட்ட கோப்புகளைக் கையெழுத்திடாமல் திருப்பியனுப்பினார். இதனால் கோபமடைந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள், சக்சேனாவுக்கு எதிராக டெல்லி சட்டமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு முன்பாகவே, ‘டெல்லி யூனியன் பிரதேசத்தின் அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்குத்தான் உண்டு. அதை உறுதிசெய்ய வேண்டும்’ என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது.

வினய் குமார் சக்சேனா,அரவிந்த் கெஜ்ரிவால்
வினய் குமார் சக்சேனா,அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி தொடர்ந்த அந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விடம் கடந்த ஆண்டு, மே 6-ம் தேதி ஒப்படைத்தது உச்ச நீதிமன்றம். ஓராண்டுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வு, “நிர்வாக சேவைகள் தொடர்பான அதிகாரம், டெல்லி அரசிடமே இருக்க வேண்டும். அதற்கு, துணைநிலை ஆளுநர் கட்டுப்பட வேண்டும்” என்ற அதிரடித் தீர்ப்பை மே 11-ம் தேதி வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பின் மூலமாக, டெல்லியின் சட்டம்-ஒழுங்கு, நிலம் ஆகிய இரண்டைத் தவிர மற்ற அனைத்து நிர்வாகச் சேவைகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உண்டு என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்திருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைவிட தாங்கள் அதிகாரமிக்கவர்கள் என்று கருதிக்கொண்டு பல மாநிலங்களின் ஆளுநர்கள் வலம்வருகிறார்கள். அவர்களின் தலைகளிலும் குட்டுவைப்பதாக அமைந்திருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு!