அரசியல்
அலசல்
Published:Updated:

ஆர்டர்... ஆர்டர்... ஆர்டர்... உச்ச நீதிமன்ற உத்தரவுகளும் கேள்விகளும்!

உச்ச நீதிமன்றம்!
பிரீமியம் ஸ்டோரி
News
உச்ச நீதிமன்றம்!

எது இலவசம், எது நலத்திட்டம் என்பதில் வரையறை தேவை. இலவசம் வழங்குவதென்பது முக்கியமான பிரச்னை. இது குறித்த விவாதம் தேவை.

அரசியல் பிரச்னைகள், சமூகச் சிக்கல்கள், மக்கள் நலன் சார்ந்த பல பிரச்னைகளில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளும், பிறப்பித்த உத்தரவுகளும் மக்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. அப்படி முக்கிய விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் சொன்ன கருத்துகளின் தொகுப்பு இங்கே...

ஆளுநர் விவகாரம்!

“நிர்வாக சேவைகள் தொடர்பான அதிகாரம், டெல்லி அரசிடமே இருக்க வேண்டும். மத்திய அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் துணைநிலை ஆளுநர், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகள் மற்றும் அதன் அமைச்சரவைக்குழுவின் ஆலோசனைகளுக்குக் கட்டுப்பட்டவர்.” - டெல்லி மாநில அரசு போட்ட வழக்கில் தீர்ப்பு.

“சட்டப்பேரவை கூட்டப்படுவதை தாமதப்படுத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அதேநேரத்தில், ஆளுநர் கேட்கும் விவரங்களை அளிக்க மாநில அரசு கடமைப்பட்டிருக்கிறது. அரசியல்ரீதியாக கருத்து வேறுபாடு இருந்தாலும், ஆளுநரும் முதல்வரும் பண்புடன் நடந்துகொள்ள வேண்டும்.” - பஞ்சாப் மாநில அரசு வழக்கில்!

பசு தேசிய விலங்கு?!

``இதுதான் நீதிமன்றத்தின் வேலையா... நீங்கள் ஏன் இது போன்ற மனுக்களைத் தாக்கல் செய்கிறீர்கள்... நீங்கள் நீதிமன்றத்துக்கு வந்துவிட்டீர்கள் என்பதால், நாங்கள் சட்டத்தைக் காற்றில் பறக்கவிட வேண்டுமா?”- பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரிய மனு குறித்து உச்ச நீதிமன்றம்!

வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம்!

``தமிழ்நாடு போன்ற நிலையான மாநிலத்தில், குழப்பத்தை ஏற்படுத்த போலி வீடியோக்களை நீங்கள் பரப்புகிறீர்கள். இதை ஏற்க முடியாது. இந்த வழக்குக்கு நாங்கள் காது கொடுக்க முடியாது.” - போலி வீடியோவைப் பரப்பிய பீகார் மாநில யூடியூபர் மணிஷ் காஷ்யப் ஜாமீன் கோரிய வழக்கில்!

இலவசங்கள் குறித்து...

“எது இலவசம், எது நலத்திட்டம் என்பதில் வரையறை தேவை. இலவசம் வழங்குவதென்பது முக்கியமான பிரச்னை. இது குறித்த விவாதம் தேவை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மாநிலத்தின் பொருளாதாரநிலையை எவ்வாறு ஒரு கட்சி அறிந்திருக்கும்?” - தேர்தல்கால இலவச அறிவிப்புகளுக்கு எதிரான வழக்கில்!

உச்ச நீதிமன்றம்!
உச்ச நீதிமன்றம்!

வெறுப்புப் பிரசாரம்!

“வெறுப்புணர்வைத் தூண்டும்விதமாகப் பேசிய நபர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம். வெறுப்புப் பேச்சுகளை நிகழ்த்தியவர்கள்மீது யாரும் புகார் அளிக்காவிட்டாலும், அரசே முன்வந்து அவர்கள்மீது வழக்குகளைப் பதிவுசெய்து, கைதுசெய்ய வேண்டும். அவ்வாறு வழக்கு பதியாவிட்டால் அது, நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்படும்.”- சூமோட்டோ வழக்கில் உச்ச நீதிமன்றம்!

`தி கேரளா ஸ்டோரி!’

“மக்களுக்கு ஒரு திரைப்படம் பிடிக்கவில்லையென்றால், அதை அவர்கள் பார்க்க மாட்டார்கள். நிராகரித்துவிடுவார்கள். பின்னர் ஏன் எந்தவிதக் காரணமுமின்றி மேற்கு வங்கத்தில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நிறுத்தப்பட்டிருக்கிறது... தமிழ்நாட்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு மறைமுகமாகத் தடை விதிக்கப்படுகிறதா... திரையரங்குக்கு அச்சுறுத்தல் வருவதாகக் கூறப்படும் நிலையில், அதற்குப் பாதுகாப்பு வழங்காமல், தமிழ்நாடு அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது?”- படத் தயாரிப்பாளர் போட்ட வழக்கில்!

பில்கிஸ் பானு வழக்கு“ஜூன் 16-ம் தேதி நான் ஓய்வு பெறுகிறேன். மே 19-க்குப் பிறகு நீதிமன்றத்துக்குக் கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்த அமர்வு இந்த வழக்கை விசாரிப்பதை, ஏன் தடுக்க முயல்கிறீர்கள் எனத் தெளிவாகத் தெரிகிறது. இது எனக்குச் சரியாகப்படவில்லை. ஒரு வழக்கில் நீங்கள் வெற்றிபெறலாம் அல்லது தோல்வியடையலாம். ஆனால், நீதிமன்றத்துக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமைகளை மறக்க வேண்டாம்.” - 11 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கைக் குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் இழுத்தடித்ததால், நீதிபதி கே.எம்.ஜோசப் கண்டிப்பு.

ஜல்லிக்கட்டு சட்டம்!

“ `ஜல்லிக்கட்டு, மாநிலத்தின் கலாசாரத்தோடு ஒருங்கிணைந்த ஒன்று’ என தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மாநில அரசு, `இது கலாசாரம்’ என்று சட்டம் இயற்றியிருக்கிறது. நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். அதை நாங்கள் மாற்ற விரும்பவில்லை. தொன்மையான கலாசாரரீதியிலான விஷயங்களில் நாங்கள் தலையிட முடியாது.” - ஜல்லிக்கட்டுக்கான சிறப்புச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில்!