Published:Updated:

ரஞ்சன் கோகோய்மீது பாலியல் குற்றம்சாட்டிய ஊழியருக்கு மீண்டும் பணி!

ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய்

தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த கோகோய் முயன்றதாகவும் அதைத் தவிர்த்த காரணத்தால் தன்னையும் தனது குடும்பத்தையும் அவர் துன்புறுத்தியதாகவும் அந்த ஊழியர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகார் அளித்த ஊழியர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக நீதிமன்றச் செய்திகள் தெரிவிக்கின்றன. தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த கோகோய் முயன்றதாகவும் அதைத் தவிர்த்த காரணத்தால் தன்னையும் தனது குடும்பத்தையும் அவர் துன்புறுத்தியதாகவும் அந்த ஊழியர் தனது புகாரில் தெரிவித்திருந்தார். அவர் பணியில் இல்லாத இடைப்பட்ட காலத்தில் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய சம்பளமும் தரப்பட்டதாகத் தெரியவருகிறது.

ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய்

கோகாய் மீது புகார் தெரிவித்த நிலையில் குறிப்பிட்ட அந்த ஊழியர் உச்ச நீதிமன்றத்திலேயே துறை மாற்றப்பட்டார். பிறகு, பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு, அந்த ஊழியரின் கணவர் மற்றும் கணவரின் சகோதரர் மீது டெல்லி போலீஸ் வெவ்வேறு காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்தது. தன்னையும் தங்களது குடும்பத்தையும் அச்சுறுத்தவே நீதிமன்றம் இப்படிச் செய்வதாக அந்த ஊழியர் புகார் கூறியிருந்தார்.

கடந்த ஏப்ரல் 2019-ல் முதன்முதலில் இந்தப் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது தன்மீதானப் புகாரைத் தலைமை நீதிபதியே விசாரிக்க முன்வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மூன்றுநபர் குழு ஒன்று இந்தப் புகாரை விசாரித்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

எனினும், விசாரணை சார்புத் தன்மையுடன் நடைபெறுவதாகக் கூறி தொடர்புடைய ஊழியர் தனது புகாரைத் திரும்பப் பெறுவதாகக் கூறினார். இந்த நிலையில் ரஞ்சன் கோகோய் குற்றமற்றவர் என்று புகாரின் இறுதியில் அந்த விசாரணைக் குழு தெரிவித்தது. அதன்பிறகுதான் அந்த ஊழியரின் குடும்பத்தினர் மீது டெல்லி போலீஸ் பதிவு செய்த வழக்கும் திரும்பப் பெறப்பட்டது. ரஞ்சன் கோகோய் மீதான இந்தப் புகாரை உச்ச நீதிமன்றம் அணுகிய விதம் குறித்து பல்வேறுதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது அந்த ஊழியர் மீண்டும் பணியில் இணைக்கப்பட்டுள்ளார். பணியில் இணைந்த பிறகு மீண்டும் அந்தப் பெண் ஊழியர் விடுப்பில் சென்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு