Published:Updated:

`ஒரு மாவட்டத்தில் 100 போக்ஸோ வழக்குகள் இருந்தால்..!’ - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

ச.அக்‌ஷை குமார்

உச்சநீதிமன்றத்தின் அறிக்கையின் படி இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை பதிவான போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 24,212. அவற்றில்11,981 வழக்குகளை இன்னும் காவல்துறை விசாரித்துக்கொண்டிருக்கிறது.

போக்ஸோ
போக்ஸோ

போக்ஸோ எனப்படும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தில், நூறு வழக்குகளுக்கு மேல் பதிவாகும் அனைத்து மாவட்டங்களிலும் அதற்கு எனச் சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களே இந்த உத்தரவுக்கு காரணம் எனத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் சுட்டிக்காட்டியுள்ளார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்

இந்த நீதிமன்றங்களுக்கான நிதியுதவி அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இன்னும் 60 நாள்களுக்குள் இந்த நீதிமன்றங்கள் அனைத்தும் நிறுவப்பட வேண்டுமென தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற குற்றங்களில் பாதிக்கப்படுவது குழந்தைகள் என்பதால் அவர்களுக்கான நீதி தாமதிக்கப்படக்கூடாது என அவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே உச்சநீதிமன்ற வளாகத்தில் இதற்கென இரண்டு சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கி வருவதை சுட்டிக்காட்டியபோது, தலைமை நீதிபதி, `நாங்கள் கவலைப்படுவது தலைநகரத்தில் இயங்கும் உச்சநீதிமன்றத்தை பற்றி அல்ல. இந்தியாவின் பல மாவட்டங்களில் சரியான கட்டமைப்பு கூட இல்லாமல் இயங்கி வரும் பல நீதிமன்றங்கள் உள்ளன. அங்கே பதிவாகும் வழக்குகள் விரைந்து முடிக்கப்படவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்’ என்று கூறினார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அரசுத் தரப்பில் போக்ஸோ வழக்குகளைப் பற்றிய தரவுகள் சேகரிக்க அவகாசம் கேட்கப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி அமர்வு இன்னும் எதற்காக தரவுகள் வேண்டும், இந்தியாவில் நீதிமன்றங்களை விட வழக்குகள் அதிகமாக இருக்கிறது என நிரூபிப்பதற்காகவா எனக் காட்டமாக பதிலளித்தார்.

இந்த உத்தரவை வழங்கிய நீதிபதி அமர்வு, இந்தியாவில் உள்ள அனைத்து அரசு தடயவியல் ஆய்வகங்களிலும் போக்ஸோ வழக்குகள் தொடர்பான ஆய்வுகளை விரைந்து முடிக்க வேண்டும் எனத் தெரிவித்தது. மேலும் இது போன்ற வழக்குகள் நடைபெறும் நீதிமன்றங்கள் அனைத்தும் குழந்தைகள் மிரட்சி அடையாத சூழலில் அமைந்திருக்க வேண்டுமெனக் குறிப்பிட்டனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம்

இந்தப் பொது நல வழக்கை பதிவு செய்வதற்கான முக்கிய காரணம் உச்சநீதிமன்றத்தின் ஓர் அறிக்கைதான். அந்த அறிக்கையின் படி இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை பதிவான போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 24,212. அவற்றில்11,981 வழக்குகளை இன்னும் காவல்துறை விசாரித்துக்கொண்டிருக்கிறது.

மீதமுள்ள 12,231 வழக்குகளில் 6,649 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. 4,871 வழக்குகளில் இன்னும் நீதிமன்ற விசாரணை ஆரம்பிக்கப்படவில்லை. 911 வழக்குகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் வெறும் நான்கு சதவிகிதம் மட்டுமே.