Published:Updated:

ராஜேந்திர பாலாஜி: `அவசர கைதுக்கு அவசியம் என்ன?' - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்

உச்ச நீதிமன்றம்
News
உச்ச நீதிமன்றம்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்ட 7 நாள்களில் உச்ச நீதிமன்றம் 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடியே பத்து லட்சத்தை ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி தரப்பு மனு தாக்கல் செய்தது. ஜனவரி 7 -ம் தேதி முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வர இருந்த நிலையில் 18 நாள்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஜனவரி 6 -ம் தேதி தனிப்படையினரால் கர்நாடகாவில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். ஜனவரி 7 -ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, `ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில் தமிழக அரசு கைது நடவடிக்கையில் அவசரம் காட்டியது ஏன்?’ என விசாரணையின் போது கேள்வி எழுப்பி இருந்தது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

இந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் முகுல் ரோத்தகி மற்றும் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். ராஜேந்திர பாலாஜி மீது 32 புகார்கள் வந்ததாகவும், அதில் ராஜேந்திரன் மற்றும் ஏஜென்ட் விஜய் நல்லதம்பி அளித்த புகார்கள் அடிப்படையில் விருதுநகர் காவல்துறை வழக்கு பதிவு செய்து இருக்கிறது. 2 லட்சம் முதல் 30 லட்சம் வரை பணம் பெற்று இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை இந்த வழக்கில் விசாரணை நடந்து வந்த நிலையில், டிசம்பர் மாதம் கைது செய்ய முயற்சி செய்த போது ராஜேந்திர பாலாஜி தலைமறைவானதாக வாதத்தில் குறிப்பிடப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் டேவ், ``ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை விசாரணைக்கு ஆஜராகும் படி ராஜேந்திர பாலாஜி தரப்புக்கு காவல்துறை சம்மன் எதுவும் வழங்கவில்லை. அதே போல ராஜேந்திர பாலாஜி நேரடியாக யாரிடம் பணம் பெற்றார் என்று அரசு தரப்பில் தெளிவுபடுத்தவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் ராஜேந்திர பாலாஜியின் உறவினர் மற்றும் வழக்கறிஞர் அலுவலங்களுக்கு தமிழக போலீஸார் சென்று வரம்பு மீறி விசாரணை செய்து இருக்கிறார்கள்” என்று வாதிட்டார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

இந்த வழக்கு விசாரணையின் போது, தலைமை நீதிபதி ரமணா, சூர்யா காந்த், ஹிமா கோலி ஆகியோர் தமிழக அரசின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து இருக்கிறார்கள். ``ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கி தர 2 லட்சம் முதல் 30 லட்சம் வரை பணம் பெற்றதாக தமிழக அரசு சொல்கிறதே தவிர, யாரிடம் நேரடியாக பெற்றார் என்பதை நிரூபிக்க தவறி இருக்கிறீர்கள். அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக இந்த கைது நடந்தது போல உள்ளது. அதே போல ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. வழக்கு நிலுவையில் இருந்தும் அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? மேலும் நீதிமன்றத்திலிருந்து வந்த உத்தரவுகளை மீறி வரம்புமீறி காவல்துறை செயல்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழக காவல்துறை மீது "நீதிமன்றம் விசாரணைக்கு" (Judicial Enquiry) உத்தரவிட நேரிடும் எனவும் தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், ``இந்த வழக்கில் வாங்கப்பட்ட பணம் தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு காலஅவகாசம் வழங்கியும் உங்களால் பதிலளிக்க முடிவில்லை. ஆகஸ்ட் மாதம் முதல் சம்மன் எதுவும் வழங்காமல் அனுமானத்தின் அடிப்படையில் கைது செய்ய கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட விருதுநகரில் சப்-ஜெயில் இருக்கும் போது ஏன் மதுரை சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் எதற்கு 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்சி சிறைக்கு ராஜேந்திர பாலாஜி மாற்றப்பட்டார்?” எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

`பாதுகாப்பு காரணங்களால் மதுரை சிரையிலிருந்து திருச்சிக்கு மாற்றப்பட்டதாக’ தமிழக அரசு தெரிவித்த நிலையில் பின்னர் `கொரோனா காரணங்களால் மாற்றப்பட்டதாக’ தெரிவித்தது.

``முன்னாள் அமைச்சருக்கு பாதுகாப்பு அச்சறுத்தல் இருந்ததா? யாரால் அச்சறுத்தல் இருந்தது?’’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், `பிரச்னை சிக்கலாக இருப்பதாகவும், காவல்துறை கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்’ எனவும் தெரிவித்தனர். மேலும், ``கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி கடும் குற்றம் புரியாத கைதிகளை விடுவிக்கக் கூறி நீதிமன்ற உத்தரவுகள் இருக்கும் போது அதைப் பின்பற்றாமல் சிறைகளை தமிழக காவல்துறை நிரப்பி வைத்துள்ளதா?” எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், `ராஜேந்திர பாலாஜி வழக்கறிஞர் தரப்புக்கு சம்மன் கொடுக்காமல் அடாவடியாக காவல்துறை செயல்படுகிறதா?’ எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறது.

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரங்களுக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. 3 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த 4 வார காலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காவல்நிலையத்தின் எல்லைக்கு உட்பட்டு ராஜேந்திர பாலாஜி தங்க வேண்டும், பாஸ்போர்ட்டை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.