தமிழ்நாட்டில், பீகார் உள்ளிட்ட வட மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிறகு தமிழ்நாடு, பீகார் ஆகிய இரு மாநிலங்களும் இந்த விஷயத்தில் தீவிரமாக விசாரணை மேற்கொண்ட பின்னர், அத்தகைய வீடியோக்கள் போலியானவை எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த போலி வீடியோவைப் பரப்பியவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த யூடியூபர் மணிஷ் காஷ்யப் என்பதைக் கண்டுபிடித்த தமிழ்நாடு போலீஸ், அந்த நபரைக் கைதுசெய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்தது. பிறகு மணிஷ் காஷ்யப், இந்த வழக்கிலிருந்து தனக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதோடு, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தன்மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தனியாக இன்னொரு மனுவையும் தாக்கல்செய்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா, நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மணிஷ் காஷ்யப் தரப்பு வழக்கறிஞர், ``பத்திரிகைகளில் வெளியான ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் அவர் வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். எனவே, அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட வேண்டுமென்றால், மற்ற பத்திரிகைகளின் பத்திரிகையாளர்களையும் காவலில் வைக்க வேண்டும்" என மணிஷ் காஷ்யப்பையும் பத்திரிகையாளர் எனக் குறிப்பிட்டு வாதாடினார்.

அவரைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞரும், எம்.பி-யுமான கபில் சிபல், ``மணிஷ் காஷ்யப் பத்திரிகையாளர் அல்ல. பீகார் தேர்தலில் போட்டியிட்ட ஓர் அரசியல்வாதி" என்று பதில் வாதத்தை முன்வைத்தார்.
இறுதியாக இந்த வழக்கை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற அமர்வு, ``தமிழ்நாடு போன்ற நிலையான மாநிலத்தில், குழப்பத்தை ஏற்படுத்த போலி வீடியோக்களை நீங்கள் பரப்புகிறீர்கள். இதை ஏற்க முடியாது. இந்த வழக்குக்கு நாங்கள் காது கொடுக்க முடியாது" எனக் கூறி, மனுதாரரை சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது.